கடவுளின் குழந்தைகளான ஏழைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏழைகள் கடவுளின் பிள்ளைகள், ஒவ்வொரு ஏழை மனிதரிலும் இயேசு கிறிஸ்து இருக்கின்றார் என்றும் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; என்ற நற்செய்தியின் வரிகளைச் சுட்டிக்காட்டி (மத் 25:35) தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் 7ஆவது உலக வறியோர் நாளை நினைவுகூர்ந்து இரு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்ற நற்செய்தி வரிகளை மேற்கோள்காட்டியுள்ளார்.
உலக வறியோர் நாளின்போது தேவையிலிருப்பவர்களுடன் நமது உணவைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் திருப்பலி பீடத்தின் முன்பாக நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை உணர்ந்தால் மனித உடன்பிறந்த உணர்வுடன் நாம் வாழ முடியும் என்றும், ஏழை ஒருவரை நம்மோடு உணவு உண்ண அழைக்கும் போது இந்த உலக வறியோர் நாள் அர்த்தமுள்ளதாக மாறும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஏழாவது உலக வறியோர் நாள்
2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் 7ஆவது உலக வறியோர் நாளானது ஏழை எவரிடம் இருந்தும் உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே (தொபி 4:7) என்ற தோபித்து நூல் கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி சிறப்பிக்கப்பட உள்ளது.
நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் ஏழாவது உலக வறியோர் நாள் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் பிற்பகலில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் வறியோர் சிலருடன் மதிய உணவினை உண்டு மகிழ்வார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்