பணிபுரியும் திறன் மற்றும் தாழ்ச்சி கொண்டு வாழுங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தாழ்ச்சி ஒருவரை கடவுளுக்கும் உடன் வாழும் சகோதர்களுக்கு நெருக்கமானவர்களாக மாற்றும் திறன் கொண்டது என்றும், புத்திசாலித்தனமான மற்றும் அமைதியான பணியாற்றும் திறன், கொடுப்பதை உன்னதமாக்குகிறது, பெறுவதை எளிதாக்குகிறது மற்றும் இயல்பாகப் பகிர்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 6 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இறை இரக்கத்தின் அப்போஸ்தலிக்க சபை சகோதர்கள் மற்றும், ஜெலாவில் உள்ள இறை இரக்கத்தின் சிறுஇல்லக் குழுவினரைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழை மக்களுக்கான அன்றாட உணவு வழங்கும் செயல், கல்வி, குடும்பம், மீட்புப்பணி செயல்பாடுகள் என அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்குத் தன் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்.
மிகவும் எளியவர்கள் துன்புறுபவர்களின் நிலைகண்டு, கடந்து செல்லாமல் அவர்கள் அருகில் நெருங்கி நின்று பாதுகாத்து செயல்படும் அக்குழுவினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தேவையில் இருக்கும் சகோதர சகோதரர்களுக்கு உதவவும் நற்செயல்கள் செய்ய கடவுளால் தூண்டப்படவும் அவர்கள் தங்களை அனுமதித்து உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
படைப்பாற்றல், துணிவு, தாராள மனம் கொண்டு உடன்வாழும் மனிதர்களுக்கு உதவவும் பாதுகாக்கவும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இறைஇரக்கம் என்னும் ஒரே உணவு கிறிஸ்துவின் நற்கருணையின் சீடர்களாகவும், அவருடன் இணைந்து இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்துபவர்களாகவும் நம்மை மாற்றுகின்றது என்றும் கூறினார்.
புனிதமான, அமைதியான, படைப்பாற்றல் உடன் கூடிய பணிபுரியும் திறன் மற்றும் அதிகமான தாழ்ச்சி கொண்டு உடன் வாழும் சகோதர சகோதர்களின் தேவைகளுக்குப் பதிலளிப்பதில், தயார் மனநிலையுடன் துணிவாக இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இறைத்தந்தையின் முன் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்