தேடுதல்

'எனது கிறிஸ்துமஸ் குடில்' (Il mio presepe) புதிய நூல் 'எனது கிறிஸ்துமஸ் குடில்' (Il mio presepe) புதிய நூல்  

புதிய நூல் ஒன்றை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நமக்காகத் தம்மைத் தாழ்த்திக் கொண்டதன் காரணமாக, நாம் அவருடன் ஒன்றித்துப் பயணிக்க முடிகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 21, இச்செவ்வாயன்று, 'எனது கிறிஸ்துமஸ் குடில்' (Il mio presepe) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய நூல் ஒன்றிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார் என்றும், இது. ஆங்கிலம், இத்தாலி, பிரஞ்சு மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் வெளியிடப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நூலில், திருத்தந்தை அவர்களால் முன்னர் வெளியிடப்படாத முன்னுரை மற்றும் கிறிஸ்து பிறப்பு  காட்சி மற்றும் அதை நிரப்பும் கதாபாத்திரங்களுக்கு அவர் வழங்கிய தொடர்ச்சியான உரைகள், சிந்தனைகள், மறையுரைகள் உள்ளன என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

தான் இரண்டு முறை Greccio-வுக்குச் சென்றதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசியார் கிறிஸ்து பிறப்புக் காட்சிக் குறித்த படத்தைக் கண்டறிந்த இவ்விடத்தைக் குறித்து அறிந்துகொள்வதற்காக முதன்முறை சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தனது குழந்தைப் பருவத்தைக் குறித்துக் காட்டியது என்றும், Buenos Aires-லிலுள்ள தனது பெற்றோரின் வீட்டில், மரத்தின் முன்பும் கூட, கிறிஸ்து பிறப்பின் இந்த அடையாளம் எப்போதும் வைக்கப்பட்டது என்றும் தனது முன்னுரையில் நினைவுகூர்ந்துள்ளார்.

Rieti மாநிலத்தில் இன்றைய கிறிஸ்துப் பிறப்புக் காட்சியின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்த Admirabile signum என்ற திருத்தூது மடலில் கையெழுத்திட இரண்டாவது முறையாகத் தான் மிகந்த மகிழ்ச்சியுடன் அந்த இடத்திற்குத் திரும்பியதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஒரு இடைக்கால ஓவியத்தை இரசிக்கக்கூடிய ஒரு சிறப்பு உணர்வைத் தான் பெற்றதாகவும், அதில் ஒன்று பெத்லேகேமின் இரவை சித்தரிக்கிறது என்றும், மற்றொன்று Greccio-வின் இரவை சித்தரிக்கிறது என்றும் தன் முன்னுரையில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அந்தக் காட்சித் தந்த வியப்பு எல்லையற்ற இறைவனை சிறியவற்றிற்குள் மறைக்க விரும்பும் கிறிஸ்தவ மறைபொருளை ஆழமாக ஆராய்வதற்கு தன்னைத் தூண்டுகிறது என்று உரைத்துள்ள திருத்தந்தை, உண்மையில், இயேசு கிறிஸ்துவின் மனுவுருவெடுத்தல் என்பது, இறைவெளிப்பாட்டின் இதயமாக உள்ளது, இருப்பினும் அதன் வெளிப்படுதல் மிகவும் கட்டுப்பாடற்றது, கவனிக்கப்படாமல் போகும் அளவிற்கு எளிதில் மறந்துவிட்டது என்றும், உண்மையில் எளிமையே கடவுளை சந்திப்பதற்கான வழி என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மீட்பரின் பிறப்பால் புனிதப்படுத்தப்பட்ட அந்த இரவில், கடவுள் நமக்காகத் தாழ்மையான நிலையில் பிறந்ததன் வழியாக, மற்றொரு வலிமைவாய்ந்த அடையாளத்தைக் காண்கிறோம் என்று விளக்கியுள்ள திருத்தந்தை, வானதூதர்கள் இடையர்களுக்கு ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தையை சுட்டிக்காட்டுகிறனர் என்றும், இது அதிகாரம், தன்னிறைவு அல்லது தற்பெருமையின் அடையாளம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் என்றும் வாழும் கடவுள் ஓர் உதவியற்ற, சாந்தகுணமுள்ள, தாழ்மையான மனித நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்றும், கடவுள் தம்மைத் தாழ்த்திக் கொண்டதன் காரணமாக, நாம் அவருடன் ஒன்றித்துப் பயணிக்கிறோம் என்றும், இதனால் அவர் நமக்கு அருகில் இருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது என்றும் தனது முன்னுரையில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

நற்செய்தி அறிவிப்பின் பெரியதொரு பணியை செய்த முதல் கிறிஸ்து பிறப்புக் காட்சி, இன்று பிரமிப்பையும் வியப்பையும் வரவழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இவ்வாறு, புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு உணர்த்திய அந்த அடையாளத்தின் எளிமை, நமது விசுவாச அழகின் உண்மையான வடிவமாக நம் நாட்கள் வரை நீடிக்கிறது என்றும் கூறி தனது முன்னுரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2023, 11:22