கடந்த ஓராண்டு கால அளவில் உயிரிழந்த ஆயர்களுக்கு திருப்பலி
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில், அதற்கு முந்தைய ஓராண்டு கால அளவில் உயிரிழந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களுக்கென திருப்பலி நிறைவேற்றுவது வழக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி முதல் இவ்வாண்டு அக்டோபர் 23ஆம் தேதி வரை உயிரிழந்த கர்தினால்கள், பேராயர்கள், மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, குறிப்பாக 2022ஆம் ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் 31ஆம் தேதி உயிரிழந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் உட்பட 154 பேரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில், அதற்கு முந்தைய ஓராண்டு கால அளவில் உயிரிழந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களுக்கென திருப்பலி நிறைவேற்றுவதை திருத்தந்தையர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் ராஞ்சி உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் தெலெஸ்போர் தோப்போ, பிரேசில் நாட்டு கர்தினால் ஜெரால்தோ மஹெல்லா அக்னெல்லோ, ஜெர்மனியின் கர்தினால் Karl-Josef Rauber, ஆஸ்திரேலியாவின் கர்தினால் ஜார்ஜ் பெல், இத்தாலியின் கர்தினால் செவரினோ பொலெத்தோ, கானாவின் கர்தினால் Richard Kuuia Baawobr என 6 கர்தினால்களுடன் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களும் கடந்த ஓராண்டு கால அளவில் இறைபதம் சேர்ந்துள்ளனர்.
மேலும், இந்திய பேராயர்கள் இக்னேசியஸ் பால் பின்டோ, ஜோசப் பொவாத்தில், ஆயர்கள் அல்போன்ஸ் பிலுங், சைமன் ஸ்டாக் பலத்தாரா, அந்தோனி பெர்னாண்டஸ், ஜோசப் கபிரியேல் பெர்னாண்டஸ், இசிதோர் பெர்னாண்டஸ், இலங்கை பேராயர் ஆஸ்வால்டு தாமஸ் கோமிஸ், பாகிஸ்தானின் ஆயர் எர்னஸ்ட் பெர்ட்ரண்ட் போலந்த், மலேசியாவின் ஆயர் ஜேம்ஸ் சான் சூன் சியோங் உட்பட 147 பேராயர்கள் மற்றும் ஆயர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் உலகிலிருந்து விண்ணுலகம் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, திருப்பீடத்தின் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமையன்று இத்தாலி நேரம் காலை 11 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 3 மணி 30 நிமிடங்களுக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் மரித்தோர்க்கான திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
03 November 2023, 14:48