தேடுதல்

போர்கள் எப்போதும் தோல்விதான்!

நம்பிக்கையின் அருளை அதாவது, ஒருபோதும் ஏமாற்றம் தராத இந்த நம்பிக்கையின் அருளை நாம் இறைவனிடம் கேட்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறந்த நம்பிக்கையாளர்களை நினைவுகூரும் இந்த நாளில் அவர்களின் நினைவைப் பெற்று, நம்பிக்கையுடன், மக்கள் இனி ஒருவரையொருவர் போர்களில் கொல்லாமல் இருக்க இறைவனிடம் அமைதிக்காக இறைவேண்டல் செய்வோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 2, இவ்வியாழனன்று, இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் பெருவிழாவை முன்னிட்டு உரோமையிலுள்ள போர்வீரர்களின் கல்லறையில் நிறைவேற்றிய திருப்பலில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நாள் கொண்டாட்டம் நினைவு, நம்பிக்கை என்ற இரண்டு எண்ணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

நினைவு

முதலாவதாக, நினைவு என்பது, நமக்கு முன் சென்றவர்கள், தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள், தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் பற்றிய நினைவு; குடும்பத்தில், நண்பர்களில் என நமக்கு நன்மை செய்த பலரின் வாழ்வை நமக்கு நினைவூட்டுகிறது என்று உரைத்தார் திருத்தந்தை.

மேலும் நன்மைகளைச் செய்யாதவர்கள் கூட கடவுளின் அன்பான நினைவால் அவரின் பரிவிரக்கத்தைப் பெற்றுள்ளனர் என்றும், இறைவனின் இந்த மாபெரும் இரக்கம்நிறை செயல்கள் தனக்கொரு மறைபொருளாக இருக்கின்றது என்றும் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை

நம்பிக்கை

இரண்டாவதாக, நம்பிக்கை என்பது, நம் பாதையை, நம் வழியைப் பார்க்க, எதிர்நோக்க வேண்டிய நினைவு என்றும், இறைவனைச் சந்திக்கவிருக்கும் அந்த நாளை நோக்கி நாம் அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

மேலும் இந்த நம்பிக்கையின் அருளை அதாவது, ஒருபோதும் ஏமாற்றம் தராத இந்த நம்பிக்கையின் அருளை நாம் இறைவனிடம் கேட்க வேண்டும் என்று உரைத்த திருத்தந்தை,  இந்த நம்பிக்கை என்னும் நற்பண்பு நம்மை முன்னோக்கி கொண்டு செல்கிறது என்றும், பிரச்சனைகளை தீர்க்கவும், பல பிரச்சனைகளுக்கான நல் வழிகளைத் தேடவும் உதவுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்..

இறுதியாக, நமதாண்டவர் இயேசு நம்மீது இரக்கம் வைத்து  நமக்கு நம்பிக்கையைத் தருவாராக என்றும், அவர் நம்மை அழைக்கும்போது நாம் தொடர்ந்து அவருடனேயே சென்று அவருடன் என்றும் இருக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2023, 13:33