திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

நம்பிக்கையற்ற மக்களிடையே நம்பிக்கையின் மகிழ்ச்சியாகத் திகழ்ந்தவர் இறை ஊழியர் Madeleine Delbrêl.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நவம்பர் 8 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் குறித்த தொடர் மறைக்கல்வியில்  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த இறை ஊழியர் Madeleine Delbrêl பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

குளிர்காலத்தின் தொடக்கமாகிய நவம்பர் மாதத்தில் இளஞ்சூரியனின் மிதமான வெப்பமும் குளிர்காற்றும் வீசும் இனிய காலை வேளையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடையே மறைக்கல்வி உரையாற்ற திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், புதன் பொது மறைக்கல்வி உரையாற்றும் இடத்தை வந்தடைந்தார். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைக்க, மத்தேயு நற்செய்தியில் உள்ள உப்பும் ஒளியும் என்ற தலைப்பின் கீழ் உள்ள பகுதிகள் இத்தாலியம் ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், ஜெர்மானியம் போன்ற பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.           

மத்தேயு 5: 13 - 16

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

நற்செய்தி வாசகம் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் குறித்த தனது தொடர் புதன் மறைக்கல்வி உரையின் 25ஆவது பகுதியாக பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த Madeleine Delbrêl என்பவர் பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நற்செய்தியை அறிவிப்புப் பேரார்வம் பற்றிய பல சான்றுள்ள வாழ்க்கை எடுத்துக்காட்டுக்களை பற்றி அறிந்து வரும் நாம் இன்றைய நாளில் இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த பிரெஞ்சு நாட்டு பெண்ணின் வாழ்வைப்பற்றிக் காண்போம். கடவுளின் மதிப்பிற்குரிய இறை ஊழியரான Madeleine Delbrêl. 1904 ஆம் ஆண்டு பிறந்து 1964 ஆம் ஆண்டு இறந்த மதலேன், ஒரு சிறந்த சமூகப்பணியாளராக, எழுத்தாளராக, ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தவர். ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்த பாரீஸின் புறநகர்ப் பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அவரை உள்ளார்ந்த விதமாகச் சந்தித்த அவர், வியந்து இவ்வாறு எழுதுகின்றார். "கடவுளின் வார்த்தையை ஒரு முறை நாம் அறிந்துவிட்டால் அதை மீண்டும் பெறாமல் இருக்க முடியாது. ஒருமுறை பெற்று விட்டால் அந்த இறைவார்த்தை நம்மில் மனுவுறு எடுக்காமல் இருக்காது, ஒருமுறை நம்மில் மனுவுறு எடுத்துவிட்டால் அதை நமக்காக வைத்துக் கொள்ளவும் முடியாது. மாறாக அந்த நிமிடத்திலிருந்து கடவுளின் வார்த்தைக்காகக் காத்திருப்பவர்களுக்கு அது சொந்தமானதாகிறது என்று கூறுகின்றார்.  

இறைவனை அறியாத அஞ்ஞானவாதத்தில் தன் இளமைப் பருவத்தைக் கழித்த மதலேன் தனது இருபது வயதில் சில நம்பிக்கையுள்ள நண்பர்களின் சான்று வாழ்வினால் தாக்கப்பட்டார். அதன்பின் கடவுளைத் தேடிப் புறப்படுகிறார். தனக்குள் உணர்ந்த ஆழமான இறைத்தேடலாலும் வேதனையை வெளிப்படுத்திய வெறுமையினாலும் இறைக்குரலுக்கு செவிமடுத்து கடவுளைத் தேடும் பணியினைச் செய்கின்றார். நம்பிக்கையின் மகிழ்ச்சியானது, கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் தேர்வை, திருஅவையின் இதயம் மற்றும் உலகின் இதயத்தில் வளர்த்துக் கொள்ளவும், தெருக்களில் வாழும் மக்களுடன் சகோதரத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் வழிவகுக்கிறது. இயேசுவைப் பற்றி கவிதையாக அவர் இவ்வாறு எழுதுகிறார்: “எங்களது சோம்பல் எங்களைத் தடுத்தாலும் உமது பாதையில் உம்மோடு இருக்க, உம்முடன் பயணிக்க  அழைத்துள்ளீர். ஒரு வித்தியாசமான  சமநிலையில், வேகத்தில் மட்டுமல்லாது இயக்கத்திலும் சமநிலையில் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுவதற்கும் அழைத்துள்ளீர்‘‘ என்று கூறுகின்றார். 

ஏழைகள் மற்றும் நம்பிக்கையற்ற மக்களின் அழுகையால் அவரது இதயம் தூண்டப்பட்டு திருஅவையில் மறைப்பணி ஏக்கத்திற்கான சவாலாக தன் பணியை ஏற்றுக்கொண்டார். மேலும் நம்பிக்கையற்றவர்களின் அனுபவங்களுக்கு இசைந்து செல்ல முடியாது, வாழும் நற்செய்தியை, கடவுளின் பெயரை, அவரை அறியாதவர்களுக்கு எடுத்துச் செல்லும் வரை அது நமக்குள் பற்றி எரிய வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார். இந்த உணர்வில், உலகில் எழும் பிரச்சனைகள் மற்றும் ஏழைகளின் அழுகையை நோக்கி தனது பணியினைத் திருப்புகின்றார் மதலேன். "இயேசுவின் அன்பை முழுவதுமாக வாழ தான் அழைக்கப்படுவதாகவும், நல்ல சமாரியன் பயன்படுத்திய எண்ணெய் முதல் கல்வாரியில் பயன்படுத்தப்பட்ட கசப்பு நிறைந்த காடி வரை மேலான அன்பை தனக்கு அளிக்கின்றார் என்றும் உணர்ந்தார்.

ஒருவரையும் ஒதுக்காமல் எல்லாரையும் அன்பு செய்தல், இறுதிவரை அனைவரையும் அன்பு செய்தல் என்னும் இரண்டு பெரிய கட்டளைகளை நம்மில் மனுவுறு எடுக்க வைத்திருக்கின்றார் என்பதையும் உணர்கின்றார்.

இறுதியாக, Madeleine Delbrêl இன்னொரு விடயத்தையும் நமக்குக் கற்பிக்கிறார்: நற்செய்தி அறிவிக்கும்போது, அறிவிக்கப்படும் இறைவார்த்தையால் நாம் நற்செய்தி அறிவிப்பாளர்களாகி விடுகின்றோம். அவரது வார்த்தையால் மாற்றப்படுகின்றோம் என்பதையும் உணர்த்துகின்றார். எனவே அவர், புனித பவுலின் வார்த்தைகளான ‘‘நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு‘‘ என்பதை எடுத்துரைக்கின்றார். மார்க்சிய கொள்கைகளுடன் தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அவர், தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இதையெல்லாம் அனுபவித்தார். கடவுளை நம்பாதவர் அல்லது மதச்சார்பற்ற சூழல்கள், துல்லியமாக அவர் போராட வேண்டிய இடங்கள் என்றும், கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த நம்பிக்கையை பலப்படுத்தக்கூடிய இடங்கள் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

நற்செய்தியின் சான்றுள்ள இந்த வாழ்வைப் பார்க்கும்போது, ​​நம் வாழ்வின் ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் சமூக சூழ்நிலையிலும், இறைவன் நம்மில் இருக்கிறார், நம் காலத்தில் வாழவும், மற்றவர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும், உலகின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவும் நம்மை அழைக்கிறார் என்பதை நாமும் அறிந்துகொள்கிறோம். குறிப்பாக, மதச்சார்பற்ற சூழல்கள் கூட மனமாற்றத்திற்கு உதவுகின்றன என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே, நாம் மறைப்பணியாளர்களா அல்லது அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டவர்களா என்பதை நினைத்துப் பார்ப்போம். மதலேன் டெல்ப்ரெலைப் போல, நம்பிக்கை என்பது விலைமதிக்க முடியாத பரிசு, இலவசமாகப் பெற்றுக்கொண்ட கொடை, உலகின் தெருக்களில் வாழ்பவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதனை உணர்வோம்.  

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்கள், இஸ்ரயேல் பாலஸ்தினத்தில் போரால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார். கடவுள் நம்மை நேர்மையான அமைதிக்கு அழைத்துச் செல்லட்டும் என்றும், போரினால் அதிகமாகப் பாதிக்கப்படும் சிறார், நோயாளிகள் வயது முதிர்ந்தோர் அனைவரையும் நினைவுகூர்ந்து செபித்தார். மேலும் போர் எப்போதும் ஒரு தோல்விதான்: மறந்து விடவேண்டாம் போர் எப்போதும் ஒரு தோல்விதான் என்பதனையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 9 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும், புனித இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா பற்றி எடுத்துரைத்தார். அகில உலக திருஅவையின் தாய்க்கோவிலாக உரோம் தலத்திருஅவையின் பெருங்கோவிலாகத் திகழும் இலாத்தரன் பேராலயமானது நாம் ஒவ்வொருவரும் உயிருள்ள, விலைமதிப்பற்ற கற்களாக, கடவுளின் ஆலயத்தை கட்டியெழுப்பும் கற்களாக, வாழ நம்மை அழைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாகக் கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2023, 08:43