தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி

நவம்பர் 15 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி என்னும் தலைப்பில் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நவம்பர் 15 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி என்னும் தலைப்பில் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குளிர்காலத்தின் தொடக்கமாகிய நவம்பர் மாதத்தில் இளஞ்சூரியனின் இதமான வெப்பத்தில் உள்ளத்தில் மகிழ்வோடும், உற்சாகத்தோடும் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள், இத்தாலியின் பிற மறைமாவட்டங்களிலிருந்து வந்திருந்த இறைமக்கள், அமைப்புக்களைச் சார்ந்த மக்கள், மாணவர்கள், இளையோர் என அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்க திறந்த காரில் திருப்பயணிகளிடையே வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறுகுழந்தைகளுக்கு ஆசீரளித்து அவர்களுக்கு முத்தமிட்ட திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் கரமசைத்து அன்போடு வரவேற்றார். அதன்பின் புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை சிலுவை அடையாளத்துடன் புதன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார்.

லூக்கா நற்செய்தி இரண்டாம் அதிகாரத்தில் உள்ள இடையர்களும் வானதூதர்களும் என்ற தலைப்பின் கீழ் உள்ள பகுதியானது இத்தாலியம், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், அரபு, ஜெர்மானியம், போன்ற பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

லூக்கா; 2; 8-11

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் நம்பிக்கையுள்ள மக்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பின் 26ஆவது பகுதியாக “நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி“ என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையினை ஆற்ற ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறைக்கல்விஉரைக்கு இப்போது நாம் செவிமடுப்போம். 

புதன் மறைக்கல்வி உரை

நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றிய பல புனிதர்களின் வாழ்க்கை குறித்து அறிந்து கொண்ட நாம் இன்று அதனைப் பற்றி சுருக்கமாகக் காணலாம். இந்த நவம்பர் மாதம் (எவாஞ்சலி கௌதியம்) நற்செய்தியின் மகிழ்ச்சி என்னும் திருத்தூது மடல் வெளிவந்ததன் பத்தாமாண்டை நிறைவு செய்கின்றது. எனவே அப்போஸ்தலிக்கப் பேரார்வம் பற்றிய நமது இந்த தொடர் மறைக்கல்வியில், அதனைப் பற்றி எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

நற்செய்தி அறிவித்தலின் மகிழ்ச்சி.

இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தியில், மகிழ்ச்சி என்பது வானதூதரின் செயலில் மட்டும் வெளிப்பட்டதல்ல மாறாக, இடையர்களுக்கு வானதூதர்கள் நற்செய்தியை அறிவித்தபோது இடையர்கள் மகிழ்ச்சி நிறை மனதுடன் அதனை ஏற்றுக் கொண்டதில் அடங்கியுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாமும் இத்தகைய மகிழ்ச்சியுடன் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். வானதூதர் மாபெரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்று கூறுகின்றார். இந்த மாபெரும் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? நல்ல செய்தியா, ஆச்சரியமா, நல்ல நிகழ்வா? இவை எல்லாவற்றையும் விட அதிகமாக, ஒரு நபர் அவர் தான் இயேசு! எப்பொழுதும் நம்மை அன்பு செய்பவரும், நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்க விரும்புகின்றவரான கடவுளால் படைக்கப்பட்ட இயேசு. அவரே நம் நற்செய்தி, நம்மை விட்டு அகன்று போகாத மகிழ்ச்சியின் ஊற்று. அன்பான சகோதர சகோதரிகளே இத்தகைய நற்செய்தியை நாம் எப்படி அறிவிப்பது என்பதில் தான் நமது மகிழ்ச்சி அடங்கியுள்ளது. நாம் மகிழ்ச்சியுடன் இயேசுவை அறிவிக்கிறோமா? நாம் அவரை மகிழ்ச்சியுடன் அறிவிக்கவில்லை எனில் இயேசுவின் உண்மையான எதார்த்தத்தை நமது வாழ்வில் நம்மால் கொண்டு வர முடியாது.

இதனால் தான் அதிருப்தி, சோகம், அல்லது, அதைவிட மோசமான, மனக்கசப்பு மற்றும் வெறுப்பு கொண்ட கிறிஸ்தவர்கள் நம்பத்தகுந்தவர்களாரக இருப்பதில்லை. நம் உணர்வுகளை நாம் கவனிப்பது மிக அவசியம். நற்செய்தி அறிவிப்பு என்பது முழுமையிலிருந்து வருகின்றது மாறாக பற்றாக்குறையினால் வரும் அழுத்தத்தால் வருவதல்ல. நம்பகமான மற்றும் அதிகாரபூர்வமான சாட்சியாக விளங்குபவர், மகிழ்ச்சியான மற்றும் மென்மையான ஆன்மாவால் அங்கீகரிக்கப்படுகிறார். இயேசுவை சந்தித்ததன் வழியாக வரும் அமைதி மற்றும் மென்மையான பண்பினால் ஈர்க்கப்பட்டு, அவர் தகுதியின்றி பெற்றதை அனைவருக்கும் வழங்கும் ஆற்றலை, திறனைப் பெறுகின்றார். நீங்கள் நற்செய்தி அறிவிக்கும் போது, கருத்தியல் அடிப்படையில் எடுத்துரைப்பது உண்மையான நற்செய்தி அறிவிப்பாகாது.  நற்செய்தி என்பது ஓர் அறிவிப்பு, மகிழ்வின் அறிவிப்பு. கருத்தியல்கள் போன்றதல்ல மாறாக மகிழ்வின் நெருப்பைக் கொண்டது நற்செய்தி அறிவிப்பு. கருத்தியல்கள் புன்னகைக்கத் தெரியாதவை. நற்செய்தி அறிவிப்போ மகிழ்வானது, நல்ல செய்தியுடன் நமது உள்ளங்களைத் தொட்டு நம்மைப் புன்னகைக்கவும் மகிழ்ச்சிப்படுத்தவும் கூடியது.

இயேசுவின் பிறப்பு, வரலாற்றில், வாழ்க்கையில், மகிழ்ச்சியின் ஆரம்பமாகத் திகழ்கின்றது. இயேசுவோடு உடன் நடந்து நம்ப முடியாத மகிழ்ச்சியை அனுபவித்த எம்மாவூஸ் சீடர்களுக்கும், இயேசுவோடு பந்தியில் அமர்ந்த  மற்ற சீடர்களுக்கும் என்ன  என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம். இயேசு உயிர்த்தெழுந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள் அவர்கள். இயேசுவுடனான சந்திப்பு எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அவ்வாறு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால் அது இயேசுவுடனான உண்மையான சந்திப்பு அல்ல.

இயேசுவை ஏற்கனவே அறியப்பட்ட பொருளாக அல்லாமல் உயிருள்ள நபராக மீண்டும் கண்டறிந்தவர்கள் சீடர்கள். அவர்களுக்கே  நற்செய்தி முதன் முதலில் எடுத்துரைக்கப்பட்டது சீடர்களுக்கு சீடர்களாகிய நமக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆம் முதலில் நற்செய்தி அறிவிக்கப்படுவது கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தான்.  இன்றைய வேகமான மற்றும் குழப்பமான காலநிலையில் மூழ்கியிருக்கும் நாமும், உண்மையில், நற்செய்தி இனி கேட்கப்படாது, அதை அறிவிப்பதில் நம்மை ஈடுபடுத்துவது மதிப்புக்குரியது அல்ல என்ற  உணர்வுடன் நமது நம்பிக்கை வாழ்வை  வாழ்கின்றோம். கிறிஸ்து எப்பொழுதும் இளமையாகவும் புதுமையின் நிலையான ஆதாரமாகவும் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முயல்வோம்.

எம்மாவுஸ் சீடர்கள் ஒரு புதையல் கிடைத்த உற்சாகத்துடன் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அச்சீடர்கள் இருவரும் இருந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிய இயேசுவைக் கண்டு கொண்டனர். இது நம்பிக்கையின் வார்த்தைக்காக காத்திருக்கும் நமது சகோதர சகோதரிகளை அடையாளப்படுத்துகின்றது. இன்றும் நற்செய்தி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கால மனிதர்கள் மற்றும் எல்லா காலத்தில் உள்ள மனிதர்களுக்கும் அது தேவைப்படுகின்றது. அவநம்பிக்கை, மதச்சார்பின்மை, நாகரீகம் எல்லாவற்றுக்கும் மேலாக  நாம் வாழ்கின்ற சமூகத்திற்கு இயேசு தேவைப்படுகின்றார். இதுவே நற்செய்தி அறிவிப்புக்கு மிக முக்கியமானது. எனவே நான் மீண்டும் அனைவருக்கும் கூற விரும்புவது இதுவே. "இயேசுவை சந்திப்பவர்களின் இதயங்களும் முழு வாழ்க்கையும் நற்செய்தியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுகின்றது. அவரால் மீட்கப்படுவதற்கு அனுமதிப்பவர்கள் பாவம், சோகம், உள்மன வெறுமை, தனிமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவுடன், மகிழ்ச்சி எப்பொழுதும் பிறக்கின்றது. மீண்டும் மீண்டும் பிறக்கிறது. இதை நாம் மறந்து விடக்கூடாது. நம்மில் யாருக்காவது இந்த மகிழ்ச்சி தெரியவில்லை என்றால், நாம் இயேசுவைக் கண்டுபிடித்துவிட்டோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம். நற்செய்தி மகிழ்வின் பாதையில் செல்கிறது, அது எப்போதும், மாபெரும் நற்செய்தியாகத் திகழ்கின்றது. ஒவ்வொரு கிறிஸ்தவரையும், அவர் எங்கிருந்தாலும், இயேசு கிறிஸ்துவுடனான சந்திப்பைப் புதுப்பிக்க நான் அழைப்புவிடுக்கின்றேன். இன்று நாம் ஒவ்வொருவரும் சிறிது நேரம் ஒதுக்கி இதனை சிந்திப்போம்.

“இயேசுவே, நீர் எனக்குள் இருக்கிறீர் நான் அன்றாடம் உம்மைச் சந்திக்க விரும்புகிறேன். நீர் ஒரு நபர், நீர் ஒரு கருத்தோ சிந்தனையோ அல்ல; எங்கள் பயணத்தில் ஒரு துணை, நீர் ஒரு நிகழ்ச்சி அல்ல. எங்களது பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் அன்பு நீர். நீரே நற்செய்தி அறிவிப்பின் தொடக்கம். இயேசுவே, நீரே எங்கள் மகிழ்ச்சியின் ஊற்று. ஆமென்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் இருக்கும் நாம் அனைவரும் உலக அமைதிக்காக செபிக்கவேண்டும் என்று வலியுறுத்தி துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

சகோதர சகோதரிகளே, அமைதிக்காக செபிப்போம்.  குறிப்பாக துன்புறும் உக்ரைன் நாட்டிற்காக, புனித பூமிக்காக, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்காக, பல மாதங்களாகத் துன்பங்களை அனுபவிக்கும் சூடான் மக்களுக்காக செபிக்க மறந்துவிடாதீர்கள். உலகின் எல்லா இடங்களிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல போர்கள் நடைபெற்று வருகின்றன. எனவே உலக அமைதிக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் அமைதிக்காக செபிக்க சிறிது நேரம் ஒதுக்குவோம். அமைதியை விரும்புபவர்களாக மாறுவோம்.

இவ்வாறு  போரினால் துன்புறும் உலக மக்களுக்காக செபிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். நோயாளிகள் வயது முதிர்ந்தோர் புதிதாக திருமணமானவர்கள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2023, 08:12