கொடையாகப் பெற்றதைக் கொடையாகக் கொடுப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறைவனிடமிருந்து அன்பைப் பரிசாக கொடையாகப் பெற்றுள்ள நாம் அதனை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்க அழைக்கப்படுகிறோம் என்றும், நம்மைப் பாதுகாத்த இயேசுவின் அன்பு, நம் காயங்களை ஆற்றிய அவரது இரக்கம் மற்றும் மகிழ்ச்சி, நம் இதயங்களைத் திறந்த தூய ஆவியின் ஒளி ஆகியவை இறைவன் நமக்கு அளிக்கும் கொடைகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறன்று ஏழாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலி மறையுரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாலந்து உவமை பற்றி எடுத்துரைத்து இயேசுவின் பயணம் மற்றும் நமது வாழ்க்கைப் பயணம் பற்றியும் கூறினார்.
வீட்டுத்தலைவரின் பயணமானது இயேசுவின் மறைபொருள், கடவுள் மனிதனைப் படைத்தது, இயேசுவின் உயிர்ப்பு, விண்ணகத்திற்கு எழுந்து செல்லுதல் போன்றவற்றை சிந்திக்க வைக்கின்றது என்றும், தந்தையிடமிருந்து வந்து மனித குலத்தை சந்திக்க வந்தவர் மரணத்தை வென்று மீண்டும் தந்தையிடமே திரும்பினார் என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வுலகிலிருந்து மீண்டும் விண்ணகத்திற்கு சென்ற இயேசு, வாழ்வு தரும் நற்செய்தி, திருநற்கருணை, அன்னை மரியா ஆகியோரை நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின் ஆற்றலை நமக்குக் கொடையாகக் கொடுத்த இயேசு அதன் வழியாக அவரது பணிகளை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற நமக்கு உதவியுள்ளார் என்றும் கூறினார்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ப பணியாற்ற இறைவன் ஆற்றலை வழங்கியுள்ளார் என்றும் நமது அன்றாட வாழ்வு, சமுதாயம், திருஅவை என எல்லா நிலையிலும் பணியாற்ற கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அவரின் அருள் அளிக்கப்பட்டுள்ளது (எபே.4:78) என்ற விவிலிய வரிகளையும் மேற்கோள்காட்டினார் திருத்தந்தை.
கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் என்ற வரிகளுக்கு ஏற்ப, இயேசு கடவுள் தன்மையை விட்டு இறங்கி, தன்னையே வெறுமையாக்கி நமக்காக மனிதரானார் என்றும் கூறினார் திருத்தந்தை.
மனித நேயத்தோடு நம்மை ஏற்றுக்கொண்ட இயேசு நல்ல சமாரியன் போல நம் காயங்களை ஆற்றினார், இறைமனித வாழ்வால் நம்மை வளப்படுத்த ஏழையானார், சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
முதல் இரண்டு பணியாளர்களைப் போல இறைவன் கொடுத்த பண்பு நலன்களைப் பிறருடன் பகிர்ந்து இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், மூன்றாவது பணியாளர் போல யாருடனும் பகிராமல் நமது அருளையும் திறனையும் மண்ணுக்கடியில் மறைத்து வாழும் வாழ்வு பயனற்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நம்மைச் சுற்றிலும் கடவுளின் அன்பைப் பெருக்காவிட்டால் நமது வாழ்க்கை மிகவும் இருளில் மூழ்கிவிடும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமை ஒரு ஊழல், இறைவன் திரும்பி வரும் நாளின் போது நம்மிடம் கணக்குக் கேட்பார் என்றும் கூறினார்.
நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அருளின்படியும் இறைவன் நம்மிடம் ஒப்படைத்த பணியின்படியும், தான தர்மங்களைப் பெருக்குவதற்கும், ஏழைகளுடன் நெருங்கிப் பழகுவதற்கும் நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்ள செபிப்போம் என்றும் இதனால் இறுதி நாளில் நன்று நன்று நம்பிக்கையுள்ள நல்ல பணியாளரே உம் தலைவரின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் என்று இயேசு கூறுவதைக் கேட்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்