மனிதநேயம் மற்றும் உறவு பாலங்களை உருவாக்குகிறது கலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கலை என்பது, அதிலும் குறிப்பாக மதக் கலை என்பது, கருணை, இரக்கம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றின் செய்தியை விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, சந்தேக மனம் கொண்டவர்களுக்கும், தொலைந்து போனது, நிச்சயமற்றது அல்லது தனிமையில் இருப்பதாக உணர்பவர்களுக்கும் கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார் திருத்தந்தை
நவம்பர் 9, இவ்வியாழனன்று, வத்திக்கான் அருகாட்சியகத்தின் கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் அதன் பாதுகாவலர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலை எப்போதும் நமது ஆன்மாவுடன் பேசுகின்றது என்றும் எடுத்துக்காட்டினார்.
கடவுளுடைய படைப்பின் அழகு மற்றும் நமது மனித வாழ்க்கை மற்றும் அழைப்பின் வளமை மற்றும் மறைபொருள் ஆகியவற்றிற்கு மனதையும் இதயத்தையும் திறக்க, கலைகளின் பல வடிவங்களில் உள்ள திறனை பாராட்டுவதற்கான உறுதியான அடையாளமாக உங்களின் அர்ப்பணிப்பு உள்ளது என்றும் அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை.
உங்களின் பங்களிப்பான இப்பாதுகாப்புப் பணி கடந்த காலத்தின் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கலை, வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்புகளைப் பிரதிபலிக்க புதிய தலைமுறைகளை அழைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
நமது பொதுவான மனித நேயத்தின் அங்கீகாரத்தை வளர்ப்பதற்கும், கலாச்சாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையே உறவு பாலங்களை உருவாக்குவதற்கும், மிகவும் வருந்தத்தக்க வகையில் பிளவுபட்ட மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நமது உலகில், தேவைப்படும் ஒற்றுமை உணர்வை உருவாக்குவதற்குரிய வலிமையை இந்தக் கலை தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இக்கலையைப் பாதுக்காக்கும் பாதுகாவலர்களின் நாற்பது ஆண்டுகால வரலாறு என்பது, அவர்கள் கலைகள்மீது கொண்டுள்ள அன்பினால் மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் போற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்ற நம்பிக்கையினாலும் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்