தேடுதல்

புனித வாழ்வின் அடையாளம் ஆசியா பீபி புனித வாழ்வின் அடையாளம் ஆசியா பீபி  (AFP or licensors)

நவீன காலத்தில் புனித வாழ்வின் அடையாளம் ஆசியா பீபி

புனிதமென்பது ஒருங்கிணைக்கும் சக்தி, குடும்பத்தில் புனிதம் மற்றும் தியாகம் என்பது குறித்து புனிதத்துவம் பற்றிய மாநாட்டில் பங்குபெற்றோருக்கு திருத்தந்தையின் உரை

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

வியாழன் காலை வத்திக்கானில் புனிதத்துவம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டோருக்கு புனிதத்தின் பரிமாணம் என்ற தலைப்பில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக ஒருங்கிணைக்கும் சக்தி, குடும்பத்தில் புனிதத்தின் இடம் மற்றும் தியாகம் குறித்து தனது உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, தொண்டு செய்வதில் முதலில் நிற்பது புனிதம் என்றும், சகோதர சகோதரிகள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதால், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக ஒரு சமூகத்தினுடையது என்றும் வலியுறுத்தினார்.

கடவுள் ஒரு தனி நபரை அழைக்கும் போது அது எப்போதும் நன்மைக்காகவே எனக்கூறி, ஆபிராம், மோசே, பேதுரு மற்றும் பவுல் போன்றோரின் வாழ்வை எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இயேசு மத்தேயுவை அழைத்தவுடன், தனது நண்பர்களை மெசியாவை சந்திக்க அழைத்து சென்றது போல, பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவுடனான சந்திப்பிற்குப்பின் திருத்தூதராக மாறியது போல், இயேசுவின் அன்பு அழைப்பிற்கு பதிலளிக்கும் ஒரே வழி உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது தான் எனக் குறிப்பிட்டார் திருத்தந்தை.

புனிதர்களின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு தியாகம் என்று கூறிய திருத்தந்தை, தியாகிகள் இல்லாத காலமென எதுவும் இல்லை, திருஅவையின் வரலாறு முழுவதிலும், நாம் வாழும், இன்றைய காலக் கட்டத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை தொடர்ச்சியான தியாகத்தில் வாழ்ந்த பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அப்படிப்பட்ட  ஒருவர் தான் பாகிஸ்தானிய கத்தோலிக்கர் ஆசியா பீபி அவர்கள் எனக் கூறினார். 

நிந்தனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்து, இறுதியில் விடுவிக்கப்பட்டு கனடாவிற்கு சென்ற ஆசியா பீபி, ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் கிறிஸ்தவ சாட்சியாக வாழ்ந்ததை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டி அவர்களைப் போல பலரின் நம்பிக்கை மற்றும் பிறரன்பிற்கு சாட்சியம் பகிர அழைப்பு விடுத்தார்.

புனிதம் என்பது குடும்பங்களில் நிகழ்வது என்றும், நாசரேத்தின் புனித குடும்பத்தில் தெளிவாகத் தென்பட்டதை எடுத்து கூறி, திருச்சபை நமக்கு இன்றும் பல உதாரணங்களை வழங்குவதாக தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குறிப்பாக தம்பதியர், ஒருவர் மற்றவருடைய மீட்பின் கருவியாக இருக்கின்றனர் என்றும், திருமணமான தம்பதியினரின் புனிதத்தன்மை, ஒவ்வொரு தனிநபரின் புனிதத்தன்மையின் கூட்டெண்ணிக்கை மட்டுமல்ல மாறாக, ஒரு தனி நபர் மற்றும் அவர்களது துணையின் புனிதத் தன்மையை பெருக்க உதவுகிறது என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புனிதத்தன்மைக்கு போலந்து தம்பதிகளான ஜோசப், விக்டோரியா உல்மா மற்றும் அவர்களது ஏழு குழந்தைகளை உதாரணமாக வழங்கிய திருத்தந்தை, யூத குடும்பங்களை நாத்சிகளிடமிருந்து மறைத்து வீட்டில் காப்பாற்ற முயன்றதால், இறுதியில் நாத்சி படையினரால் கொல்லப்பட்டனர் என்றும், புனிதமாக்குதல் ஒரு சமூகப் பயணம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2023, 15:56