38வது மறைமாவட்ட அளவிலான உலக இளையோர் தின செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இவ்வாண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி சிறப்பிக்கப்படும் 38வது மறைமாவட்ட அளவிலான உலக இளையோர் தினத்திற்கென, நம்பிக்கையில் மகிழ்தல் என்ற தலைப்பில் செய்தி ஒன்றை நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, நம்மிடையே இருக்கும் கிறிஸ்துவின் பிரசன்னம் குறித்து உணர்ந்துகொள்வது, மற்றும் இருண்ட காலங்களில் இந்த நேர்மறை எண்ணங்களை நிலைநாட்டவும், பகிரவும் திட்டங்களை பரிந்துரைப்பதாகும் எனக் கூறும் திருத்தந்தையின் செய்தி, இளையோரின் வாழ்வு என்பது, நம்பிக்கைகளும் கனவுகளும் நிறைந்து, இறைவன் படைப்பின் அழகு, நம்முடைய நண்பர்கள் மற்றும் அன்புகூர்பவர்களின் உறவுதொடர்பு போன்றவைகளால் நிறைந்து காணப்படும் ஒன்று என சுட்டிக்காட்டுகிறது.
நெருக்கடிகள் மற்றும் போரின் காலத்தில் இருக்கும் இளையோர், தங்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் போல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறும் திருத்தந்தை, உலகில் துன்பங்களை, குறிப்பாக அப்பாவி மக்களின் துயர்களைக் காணும்போது மகிழ்வையும் நம்பிக்கையையும் எப்படிப் பெற முடியும் என அவர்கள் இறைவனை நோக்கி குரல் எழுப்புகின்றனர் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
இத்தகைய வேளைகளில் நாம் இறைவனுடன் ஆன சந்திப்பிலும், நமக்கான அவரின் அன்பிலும் நிலைத்திருந்து, துன்புறுவோர் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்டுபவர்களாகவும், பிரச்னைகளுக்கான இறைவனின் தீர்வுகளில் நாமும் ஒரு பகுதியாகவும் இருக்க முடியும் எனக்கூறும் திருத்தந்தையின் செய்தி, நம்பிக்கையிழக்கும் நேரங்களில்கூட நம்பிக்கையையும் மகிழ்வையும் வழங்கும் இறையன்பின் அடையாளங்களாக நாம் செயல்படமுடியும் எனவும் கூறுகிறது.
நம்பிக்கையையும் மகிழ்வையும் பெற்றுள்ள நாம் அனைவரும் அவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்ற கருத்தையும் திருத்தந்தையின் செய்தி முன்வைத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்