இறைவனை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மணமகனை எதிர்கொள்ளச்சென்ற கன்னியர்களில் நாம் அறிவிலிகள் போன்று செயல்படுகின்றோமா அல்லது முன்மதி உடையவர்கள் போன்று செயல்படுகின்றோமா என்றும் இறைவனை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்மதி உடைய வாழ்க்கை மற்றும் அறிவிலிகள் போன்ற வாழ்க்கை பற்றியும் எடுத்துரைத்தார்.
மனமகனை வரவேற்க மகிழ்வுடன் சென்ற கன்னியர்கள் போல நாமும் மகிழ்வான வாழ்க்கையை வாழ விரும்புகின்றோம் என்றும், முன்மதி மற்றும் அறிவிலி ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்பது நாம் எத்தைகைய மனநிலையுடன் அவரை எதிர்கொள்ள காத்திருக்கின்றோம் என்பதைப் பொறுத்து அமைகின்றது என்றும் கூறினார்.
முன்மதி உடையவர்கள் தங்கள் விளக்குகளோடு கூட எண்ணெய் எடுத்துச் சென்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எண்ணெய் என்பது நமது உள்புறச் செயல்பாடுகளை ஆன்மா மற்றும் இதயத்தின் உணர்வுகளைக் குறிக்கின்றது அது வெளிப்படையாகத் தெரியாது என்றும் எடுத்துரைத்தார்.
எண்ணெய் இல்லாமல் விளக்குகளால் ஒளிதர இயலாது அது போல ஆன்மாவின் எண்ணெய் என்னும் இதயத்தின் உணர்வுகள், உள்ளார்ந்த வாழ்க்கை இல்லாமல் நமது வாழ்வாலும் ஒளிதர இயலாது என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெளிப்புறத்தோற்றத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நமது ஆன்மாவிற்கு, இதயத்தின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணால் காண்பவற்றிற்கு அல்ல, மாறாக கண்ணால் காண இயலாத இதயத்தின் உணர்வுகளை நாம் பேணிக்காக்க வேண்டும் என்று இயேசு நமக்கு வலியுறுத்துகின்றார் என்பதனையும் எடுத்துரைத்தார்
உள்மன வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பது இதயத்தின் குரலைக் கேட்டல், அதன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு விழிப்புணர்வுடன் செவிமடுத்தல் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஞானம் என்பது அமைதிக்கு இடமளிப்பது, தனக்கும் பிறருக்கும் செவிமடுக்க தயாராக இருப்பது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும் நமது இதயத்தில் என்ன நடக்கிறது? நமக்குள் என்ன நடக்கிறது? என்பதை நாம் அறிந்து கொள்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.
நம் ஒவ்வொருவரிலும் இருக்கும் கடவுளைக் காண முடியாது தொலைபேசி ஒளியில் நேரங்களை செலவிடுகின்றோம் என்றும், இதற்கு மாறாக, மற்றவர்களின் கண்களில், இதயத்தில், கடவுளின் பார்வையைக் காணவும், அவருடன் உரையாடுவதற்கான நேரத்தை வழங்கவும், இறைவார்த்தைக்கு செவிமடுக்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்மன வாழ்க்கையின் எண்ணெயாம் "ஆன்மாவின் எண்ணெயைப்" புறக்கணிக்க வேண்டாம் என்று நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு சரியான ஆலோசனையை அளிக்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் இறைத்திருமுன் அமர்ந்து நமது வாழ்விற்கான அந்த எண்ணையை நாம் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்