தோல்வியைத் தரும் போர் கைவிடப்பட வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
புதிய அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்பணி மனுவேல் கோன்சலேச் செர்னா (Manuel Gonzalez-Serna) மற்றும் அவரது உடன் தோழர்களான 19 அருள்பணியாளர்கள் தங்களது வாழ்வின் இறுதி வரை கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருந்தனர் என்றும், எப்போதும் தோல்வியைத் தரும் போரைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக வறியோர் நாளைக் கொண்டாட முயற்சி எடுத்த தலத்திருஅவை மற்றும் மறைமாவட்டங்களுக்குத் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
1936 ஆம் ஆண்டு ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது மதத் துன்புறுத்தலின் சூழலில் கொல்லப்பட்ட மறைமாவட்ட அருள்பணியாளர் மானுவல் கோன்சலேஸ்-செர்னா மற்றும் அவருடைய உடன் தோழர்களான 19 அருள்பணியாளர்கள் அருளாளர்களாக நவம்பர் 18 சனிக்கிழமை சிவிலியாவில் உயர்த்தப்பட்டதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் திருஅவையின் புதிய அருளாளர்களுக்காக கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கேட்டுக்கொண்டார்.
தங்கள் வாழ்வின் இறுதிவரை கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்த இந்த அருளாளர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு துன்புறும் இக்கால கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகவும் ஆறுதலை அளிப்பவர்களாகவும் திகழட்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர், மோதல், வன்முறை மற்றும் முறைகேடுகள் காரணமாக தொடர்ந்து துன்புற்று வரும் மியான்மார் மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை புதுப்பிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அம்மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்பதாகவும், துன்பமான சூழல்களில் மக்கள் மனம் தளராமல் எப்போதும் இறைவனின் உதவியை நம்பி செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வத்திக்கான் வளாகத்தில் உக்ரைன் நாட்டுக் கொடிகளை ஏந்திய திருப்பயணிகளைக் கண்டு, துன்புறும் உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும், அமைதி நிச்சயம் சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்தார்.
நிலையான அமைதியைப் பெற நல்ல விருப்பம் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தருகின்றது போரினால் ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே ஊதியத்தைப் பெருக்குகின்றார்கள் என்றும் கூறினார்.
ஏழாவது உலக வறியோர் நாளை கொண்டாட்டமானது ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. (தோபி.4,7) என்ற கருப்பொருளைக் கொண்டு சிறப்பிக்கப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், வாழ்வில் முன்னோக்கி செல்லப் போராடும் மக்கள் மற்றும் குடும்பங்களுடன் ஒற்றுமை முயற்சிகளை ஊக்குவித்த மறைமாவட்டங்கள் மற்றும் வறியோர் நலனுக்கான முயற்சியில் பணியில் ஈடுபடும் திருஅவைப் பணியாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அனைவருக்காக சிறப்பாக செபிப்போம் என்றும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முயற்சிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 21 ஆம் நாள் யோவான் நற்செய்தியின் 21.6 இறைவார்த்தைகளுக்கு ஏற்ப "வலையை வீசுங்கள் என்ற கருப்பொருளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் உலக மீன்பிடி நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள் இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்