அன்னை Ágreda திருவிவிலியத்தின்மீது மிகுந்த பற்றுகொண்டவர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்னை அகிரெடா (Mother Ágreda) ஒரு விதிவிலக்கான பெண், திருவிவிலியத்தின்மீது மிகுந்த பற்றுகொண்டவர், அன்னை மரியாவின் மீது அன்புகொண்ட ஆன்மிகவாதி மற்றும் அமெரிக்காவின் மறைபணியாளர் என்று புகழாரம் சூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 16 வியாழனன்று, வணக்கத்துக்குரிய அன்னை அகிரெடாவைக் குறித்த அனைத்துலக மாநாட்டின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு பெருமிதத்துடன் கூறிய திருத்தந்தை, இவர் திருஅவைக்கு வழங்கக்கூடிய மூன்று படிப்பினைகளைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
அமைதியைப் பற்றிய படிப்பினை
முதலாவதாக, அமைதி என்பது கேட்கும் மனப்பான்மை, அன்பானவரின் குரலை இதயத்திற்குள் வரவேற்பது, இறைத்தந்தையின் அழியா வார்த்தைக் குறித்துத் தியானிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்றும் விளக்கிய திருத்தந்தை, குறிப்பிட்ட பயிற்சி இல்லாமலேயே, துறவற சகோதரிகளில் சிலர் திருவிவிலியத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருப்பதும், இறைவேண்டல் கற்பித்தல் தளத்தில், உயிருள்ள நீரூற்றிலிருந்து அருந்துவது போலவும் வியப்பாக இருக்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார்.
திருவிவிலியத்தின் மீதான அன்பு என்பது, இறைபுகழ்ச்சியைவிட அவருடைய வார்த்தைகள் வழியாகக் கிறிஸ்துவே நம்முடன் உரையாடுவதை குறிப்பிடுகின்றது என்றும், அமைதியான மனதுடன் இறைவனுடைய வார்த்தைகளை எல்லாம் தனது உள்ளத்தில் இறுத்திச் சிந்தித்த அன்னை மரியாவின் வாழ்வை எடுத்துக்காட்டுகின்றது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
மறைபொருள் பற்றிய படிப்பினை
இரண்டாவது படிப்பினை மறைபொருள் பற்றியது. அதாவது, இந்தக் கேட்கும் மனப்பான்மையிலிருந்தும், திருவிவிலியத்திலிருந்தும் மற்றும், கடவுள் மனுவுரு எடுத்தலைக் குறித்த வாசிப்பிலிருந்தும் உருவாகும் கடவுளுடனான உறவு என்றும் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
இது ஒரு பரவச அனுபவம். அதாவது பரவசம் என்பது, நாம் நம்மை விட்டு வெளியே வருவது, நமது வசதிகளிலிருந்து வெளியே வருவது, எப்போதும் நம்மை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சுயநலத்திலிருந்து வெளியே வருவது ஆகியவற்றைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது கடவுளுக்கான ஓர் இடத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றது என்றும், இதனால் அரசராகிய கடவுளின் கண்காணிப்பாளரான தூய ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து, அவரை நாம் நமது இல்லத்திற்குள் வரவேற்க முடியும் என்றும் உரைத்தார்.
மேலும் இது மாசற்ற அன்னையாம் மரியா தனது கருவறைக்குள் இயேசுவை வரவேற்றத்தைக் குறிக்கின்றது என்றும், இந்த அர்த்தத்தில், சிந்தனையாளர்கள் (contemplatives), துறவுநிலை, இவ்வுலகப் பற்றுகளைத் துறத்தல், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் வழியாக, அவருக்காக மட்டுமே வாழ்வதன் மகிழ்ச்சியை நமக்குக் கற்பிக்கிறனர் என்றும் எடுத்துரைத்தார்.
மறைப்பணி குறித்த படிப்பினை
மூன்றாவது படிப்பினை மறைப்பணி பற்றியது. அன்னை அக்ரேடா மற்றும் மாசற்றவாதிகளான (Conceptionist nuns) அருள்சகோதரிகள், அமெரிக்காவிற்கு வந்த முதல் மறைந்த வாழ்வை தேர்வு செய்த (cloistered) அருள்சகோதரிகளான அவர்கள், தியான வாழ்க்கையின் இந்த மறைப்பணிக்கான உற்சாகத்தை வழங்கும் ஆதாரத்தை நமக்குத் தருகிறார்கள் என்றும் கூறினார்.
ஆகவே, தம்மை இன்னும் அறியாத ஆன்மாக்களுக்காக செபிக்க இறைவனின் அழைப்பை அன்னை அக்ரேடா உணர்ந்தார் என்பதும், மறைப்பணியாளர்களின் கூற்றுப்படி, திருமுழுக்குப் பெறுவதற்கு நல்ல மனநிலையில் இருந்தவர்களின் ஆன்மாக்களில் அந்தச் செபம் பலனளித்தது என்பதும் புரிந்துகொள்ளத்தக்கது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்