திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்க்கைக் குறித்த புதிய நூல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
Life, My Story Through History அதாவது, ‘வாழ்க்கை, வரலாற்றின் வழி என் கதை’என்ற தலைப்பிலான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கைக் குறித்த புதிய நூல் ஒன்று வெளியிடப்பவிருப்பதாக அறிவித்துள்ளது HarperCollins என்ற நூல் வெளியீட்டு நிறுவனம்.
Fabio Marchese Ragona எழுதிய இந்தப் புத்தகம், 2024-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நாடுகளில் HarperCollins வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்படும் என்றும், இந்நுலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் இந்நாள் வரை குறிக்கப்பட்ட பெரிய நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 7, இத்திங்களன்று, இந்த அறிவிப்பு வெளியானது என்றும், HarperCollins வெளியீட்டு நிறுவனம் இத்தாலியுடன் உருவாக்கப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் 2024-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதும் HarperCollins நூல் வெளியீட்டு நிறுவனத்தின் உலகளாவியத் திட்டம் என்றும் அச்செய்திக்குறிப்புக் கூறுகின்றது.
நியூயார்க்கைச் சேர்ந்த HarperCollins என்ற வெளியீட்டு நிறுவனமானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறித்து நூல் வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும் இந்நூல் திருத்தந்தையின் தனிப்பட்ட நினைவுகள் வழியாக நமது காலத்தின் மிக முக்கியமான தருணங்களை மீட்டெடுக்க வழிகாட்டும் மிகச் சிறந்ததொரு படைப்பாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் மனிதகுலம் அனுபவித்த மிக முக்கியமான மற்றும் கடினமான நிகழ்வுகள் இளைய தலைமுறையினர் தங்கள் நல்வாழ்விற்கான ஒளியைக் காணும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது என்று கூறும் இந்நிறுவனம், கடந்த காலத்தின் தவறுகளை நாம் மீண்டும் செய்யாமலிருக்கவும் நம் உலகம் அனுபவித்தவற்றை சிந்தித்துப்பார்க்கவும், குறிப்பாக நம் உலகை ஆட்டிப்படைத்த இன்னும் பீடித்திருக்கும் போர்களைப்பற்றி சிந்திக்கவும் இந்நூலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழிகாட்டுவதாகக் கூறியுள்ளது.
இனப்படுகொலைகள், துன்புறுத்தல்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு இடையிலான வெறுப்பு பற்றி சிந்திக்க இந்த நூல் அழைப்புவிடுகிறது என்றும், கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்து கற்றுக்கொள்ளவும், நல்லது அல்லாதவற்றை அகற்றவும், பாவங்களுடன் நாம் அனுபவித்த கொடிய விடயங்களை அடையாளம் காணவும் வேண்டியது நமது கடமை எனவும் இந்நூலில் திருத்தந்தை விளக்கியுள்ளதாகவும் இந்நூல் வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், கடவுள் நமக்கு வழங்கியுள்ள நல்லவற்றையெல்லாம் நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது தமது தலையாயக் கடமை என்றும், இது தாமதப்படுத்தப்படாமல் நாம் அனைவரும் செய்யப்படவேண்டிய பகுத்தறிவின் ஒரு பயிற்சியாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இவ்வெளியீட்டு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்