திருத்தலங்களில் கருணை கொண்டு காத்திருக்கும் தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் நாட்டின் Ozamiz உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய மரியன்னைத் திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவ்வுயர்மறைமாவட்ட திருப்பயணிகளை வத்திக்கானில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தலங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது என்பது இறைவன் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு என அவர்களிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் என்பவர்கள் தங்கள் இதயங்களில் அவர்களின் விசுவாசம், வரலாறு, மகிழ்ச்சி, மனப்பதட்டம், நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட இறைவேண்டல்களைக் கொண்டுள்ளார்கள் என மேலும் கூறினார்.
இறைவாக்கினர் சாமுவேலின் அன்னை அன்னா மனத்துயரத்தோடு சிலோவா திருத்தலம் சென்று ஓர் ஆண் குழந்தைக்காக வேண்டியபோது அவர் கேட்டதை இறைவன் வழங்கியதை பிலிப்பீன்ஸ் திருப்பயணிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, திருத்தலங்களில் நாம், அனைவர் மீதும் கருணை கொண்டு காத்திருக்கும் ஒரு தந்தையைச் சந்திக்கிறோம் என எடுத்துரைத்தார்.
இறைவனின் இரக்கம் பலவேளைகளில் அன்னை மரியா வழியாக வெளிப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம் என்பது மட்டுமல்ல, அவரே கானாவூர் திருமணத்தில் பரிந்துரைத்ததுபோல் நமக்கான அருளுக்காக பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார் என திருத்தந்தை உரைத்தார்.
அன்னைமரியா தன் உறவினரான எலிசபெத்தை சந்திக்கச் சென்றதை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் மறைப்பணி சீடரான அன்னைமரியாபோல் இறைவார்த்தையை நம் மனதில் ஆழமாக தியானித்து அன்னைமரியாவைப்போல் இறைபிரசன்னத்திற்கும், இறைஇரக்கத்திற்கும், அன்புக்கும் சான்றாக விளங்குவோமாக என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
Ozamiz உயர்மறைமாவட்டத்தின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் நீதி, ஒன்றிப்பு மற்றும் அமைதியின் இறையரசை வளர்க்க தன் பங்களிப்பை வழங்கும் என்ற ஆவலையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்