பிணையக் கைதிகளின் குடும்பங்களை சந்திக்க உள்ள திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நவம்பர் 22 புதன்கிழமை காலை புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் காசாவில் பிணையக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் மற்றும் மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார் திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி.
நவம்பர் 17 வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்தேயு புரூனி அவர்கள், மிகவும் சிறப்பான, மனிதாபிமானமான, இயல்பான, இச்சந்திப்புக்களின் வழியாக துன்புறும் ஒவ்வொரு மக்களுடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை திருத்தந்தை வெளிப்படுத்த விரும்புகின்றார் என்றும் கூறினார்.
கடவுளின் பார்வையில் எல்லா மனிதர்களும் விலைமதிப்பற்றவர்கள், புனிதமானவர்கள் என்று அடிக்கடி வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 12 கடந்த ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையின் இறுதியில், கிறிஸ்தவர், யூதர், முஸ்லீம் என இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ உரிமை உண்டு என்பதனையும் வலியுறுத்தினார்
ஆயுதங்கள் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் திருத்தந்தை அவர்கள், காசாவில் பிணையக் கைதிகளாக இருக்கும் மக்கள் அனைவரும் குறிப்பாக சிறார், முதியோர், அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்.
குழந்தைகள், பெண்கள், முதியோர் என காசாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 240 மனிதர்கள் மீட்கப்பட உதவியதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஹெர்ஸ் கோல்ட்பர்க்-போலின் என்னும் 23 வயது இளைஞனின் தாய் காணொளிச் செய்தி ஒன்றில் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறை மற்றும் தாக்குதல்களினால் காசாவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், ஹமாஸ் வெளியிட்ட செய்தியின்படி, அக்டோபர் 7 முதல் இன்று வரை 5 ஆயிரம் சிறார் உட்பட ஏறக்குறைய 12 ஆயிரம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்