CHARIS அமைப்பினருடன் உரையாற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நவம்பர் 2 வியாழன் முதல் 4 சனிக்கிழமை வரை வத்திக்கான் திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் CHARIS (Catholic Charismatic Renewal International Service) என்னும் கத்தோலிக்க கரிஸ்மாடிக் புதுப்பித்தல் பன்னாட்டு சங்கக் கூட்டத்தாருடன் உரையாற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“அழைக்கப்பட்டு, உருமாற்றப்பட்டு, அனுப்பப்பட்டோம்“ என்ற தலைப்பில் ஏறக்குறைய 2000 பேர் கலந்து கொண்டிருக்கும் இக்கூட்டமானது திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa அவர்கள் தலைமையில் நவம்பர் 2 வியாழன் அன்று ஆரம்பமானது.
நற்செய்தி அறிவிப்புப்பணி, மனிதாபிமான செயல்பாடுகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு, குழு செபம், மன்றாட்டு, கலந்துரையாடல் ஆகியவைகளை உள்ளடக்கியதாக இம்மூன்று நாள்களும் சிறப்பிக்கப்பட்டன CHARIS சேர்ந்த பல்வேறு அமைப்பு மற்றும் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
நவம்பர் 3 வெள்ளிக்கிழமை காலை திருத்தந்தையின் பிரதிநிதியாகிய, கர்தினால் Angelo De Donatis அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கப்பட்டது. நவம்பர் 4 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரையுடன் இக்கூட்டமானது நிறைவு பெற இருக்கின்ற நிலையில் திருத்தந்தை உரையாற்றும் நிகழ்வானது வத்திக்கான் சமூகவலைதளப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்