திருத்தந்தை : பாரிஸ் அமைதி கருத்தரங்கு, நம்பிக்கையின் அடையாளம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மேலும் நீதியும், ஒன்றிப்பும், அமைதியும் நிறைந்த உலகை கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையில் உலக ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடலை ஊக்குவித்து, கண்டங்களிடையே உரையாடலை பலப்படுத்தும், பாரிஸ் நகரின் ஆறாவது அமைதி கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, ஆயுத மோதல்கள் பலமடங்காகி, நம் பொதுவான இல்லத்தில் துன்பங்களும், அநீதிகளும், அழிவுகளும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் இந்த அமைதி கருத்தரங்கு, ஒரு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்ற திருத்தந்தையின் ஆவலை வெளிப்படுத்துகிறது.
இந்த 6வது அமைதி கருத்தரங்கில் எடுக்கப்படும் அர்ப்பணங்கள், உலகில் அநீதியாக இடம்பெறும் துயர்களை அகற்றும் நோக்கத்தில் உரையாடலையும், துன்புறும் மக்களின் அழுகுரலை செவிமடுத்தலையும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு திருத்தந்தையால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதனின் வருங்காலம் குறித்த அக்கறையுள்ள அனைத்து நல்மனம் கொண்டவர்களும் அமைதிக்கான அர்ப்பணத்துடன் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பதையும் விடுக்கும் திருத்தந்தை, அமைதியில் வாழ்வதற்குரிய மனிதனின் உரிமையையும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் குறித்த உலக ஒப்பந்த ஏற்பின் 75வது ஆண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையிலும், அந்த நோக்கத்தை, அதாவது, மனித உரிமைகள் மதிக்கப்படுவதைக் காணாமல், பல இலட்சக்கணக்கான மக்கள் துயருறுவதைக் காண முடிகிறது எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
அமைதி என்பது ஆயுதங்களால் அல்ல, மாறாக, பொறுமையாகச் செவிமடுத்தல், உரையாடல், ஒத்துழைப்பு ஆகியவைகள் வழி முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் வழியாகவே அதனைப் பெறமுடியும் என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்