தேடுதல்

குழந்தை இயேசுவின் புனித தெரசா குழந்தை இயேசுவின் புனித தெரசா  (Caroline Dreier)

கடவுளின் எல்லையற்ற இரக்கத்தில் நம்மை ஒப்படைத்து வாழ..

நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் நம்மை அன்பிற்கு அழைத்துச் செல்ல இயலாது என்று புனித தெரசாவால் 1896 செப்டம்பரில் எழுதப்பட்ட இவ்வார்த்தைகளே அப்போஸ்தலிக்க அறிவுரையை எழுத ஊக்குவித்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் "சிறிய வழி" கடவுளின் எல்லையற்ற அன்பை நம்பவும், கிறிஸ்துவுடனான சந்திப்பை மற்றவர்களுக்கு வெளிப்படையாக அனுபவிக்கவும் நம்மைத் தூண்டுகிறது என்றும், சிலுவையில் தன்னையேக் கொடுத்த கடவுளின் எல்லையற்ற இரக்கத்தில் நம்மை நாம் ஒப்படைத்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்சில் உள்ள அலென்காவைச் சார்ந்த குழந்தை இயேசுவின் புனித தெரசா பிறந்த 150ஆவது ஆண்டை முன்னிட்டு "C'est la Confiance" அதாவது நம்பிக்கை என்ற தலைப்பில் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அப்போஸ்தலிக்க அறிவுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் இறைவனின் இரக்கத்தில் அன்பு மற்றும் நம்பிக்கை மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனது தாயாம் திருஅவையின் இதயத்தில் நான் அன்பாக இருப்பேன்!" என்று எழுதி தனது 24 வயதில் இறந்த புனித தெரசினா, மறைப்பணிகளின் பாதுகாவலாராக புகழப்படுகின்றார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், நம்பிக்கையைத் தவிர வேறெதுவுமன்றி நம்மை அன்பிற்கு அழைத்துச் செல்ல இயலாது என்று புனித தெரசாவால் 1896 செப்டம்பரில் எழுதப்பட்ட இவ்வார்த்தைகளே அப்போஸ்தலிக்க அறிவுரையை எழுத ஊக்குவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களால் தனது 15 வயதில் ஒரு துறவற இல்லத்தில் நுழைய அனுமதி பெற்றார், 1925 இல் திருத்தந்தை 9ஆம் பயஸ் அவரை புனிதராக அறிவித்தார், 1927 இல் மறைப்பணிகளில் பாதுகாவலரானார், 1997 இல் திருஅவையின் மறைவல்லுனர் என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் அறிவிக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு மட்டுமே எனது அன்பு என்று எழுதியுள்ள புனித தெரசா இயேசுவுடனான சந்திப்பினால் இறைப்பணிக்கு அழைப்புப்பெற்று, ஆன்மாக்களைக் காப்பாற்ற கார்மேல் துறவற இல்லத்திற்குள் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அவரது பாதை நம்பிக்கை மற்றும் அன்பு நிறைந்த பாதையாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை மற்றும் அன்பின் பாதை

குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பாதை சிறிய பாதையானது ஆன்மிக குழந்தைப் பருவத்தின் பாதை  என அழைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், புனித தெரசாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட தகுதிகள் அல்ல மாறாக, கடவுளின் செயல் மற்றும் இரக்கமே மிக முக்கியமானது, அவர் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தந்தையின் கைகளில் நம்மைக் கையளித்தல்

நமது வாழ்வில் நம்மை ஆட்கொள்ளும் பயங்கள், எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற மனிதப் பாதுகாப்பிற்கான ஆசை, எதிர்காலத்தைப் பற்றிய நிலையான கவலை, அமைதியைப் பறிக்கும் அச்சம், கடவுள் மீதான நம்பிக்கையைக் கைவிடுதல் ஆகியவை கடவுளின் கைகளில் நாம் நம்மை ஒப்படைக்கும் போது மாறுகின்றது என்றும் நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

எல்லையின்றி நம்மை அன்பு செய்யும் ஒரு தந்தையின் கைகளில் நாம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும், நாம் உண்மையாக இருக்க முடியும் என்றும், எது நடந்தாலும் நாம் முன்னேறிச் செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"நம்பிக்கைக்கு எதிரான சோதனை" மற்றும் இரக்கத்தின் மீதான நம்பிக்கை

கடவுளை நம்பாத சகோதர சகோதரிகளுக்கான ஒருவராகத் தன்னை உணர்ந்த புனித தெரசா அவர்கள், கடவுளிடம் அவர்களுக்காக பரிந்து பேசி, அவரது நம்பிக்கையின் செயலை புதுப்பித்தவர் என்றும், அவர் கடவுளின் எல்லையற்ற இரக்கத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அசாதாரணமான வழியில் அவர் கடவுளின் தெய்வீக இரக்கத்தின் ஆழத்தை ஊடுருவி, அவரது எல்லையற்ற நம்பிக்கையின் ஒளியை ஈர்த்தார் என்றும், கடவுளின் அன்பு மற்றும் நீதியை இறைமக்கள் அனைவருக்கும் வழங்கினார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் மீது மிகுந்த அன்பும்  மறைபொருளைக் கண்டடைவதில் ஆழமும் கொண்டிருந்தவர் புனித தெரசா என்றும் எடுத்துரைத்துள்ளார்.

திருஅவையின் இதயம் அன்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது என்றும், அந்த இதயம் அன்பான மற்றும் பணிவான இரக்கமுள்ள இதயம் என்ற புனித தெரசினாவின் இந்த அற்புதமான உள்ளுணர்வை நாம் புரிந்து கொண்டு, அதன் நடைமுறை, கோட்பாடு,  மேய்ப்புப்பணி, தனிப்பட்ட மற்றும் சமூக விளைவுகளைக் கண்டறிய வேண்டும் என்றும், அதனைச் செய்ய துணிவும் உள்மன சுதந்திரமும் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2023, 14:51