தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர்க்கான மறைப்பணியாளர் புனித ஸ்கலபிரினி

புலம்பெயர்தல் என்பது ஒரு நாடகம் அது இனிமையான பயணமல்ல

மெரினா ராஜ் – வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர்க்கான ஆண் பெண் மறைப்பணியாளர்கள் சபையை நிறுவிய புனித ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலபிரினி இயேசுவின் அருள்பணியாளர் என்றும், புலம்பெயர்ந்தோரை எவ்வாறு அன்பு செய்வது, பணியாற்றுவது, ஒன்றிப்புடன் வாழ்வது போன்றவற்றை, “நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு“ என்ற நற்செய்தியின் வரிகளாக வாழக் கற்றுக்கொடுத்தவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 14 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் Scalabrinian ஆன்மிக மாநாட்டின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 75 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன் (எசாயா 66.18) என்ற தலைப்பில் சிந்திக்கும் அப்பங்கேற்பாளர்களை வாழ்த்தினார்.

உலகளாவிய ஒற்றுமை, சந்திப்பு, ஒன்றிப்பு ஆகியவற்றால் ஆன கத்தோலிக்க விழுமியங்கள் நிறைந்த இதயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், மறைப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவுடனான நெருங்கிய உறவை திருப்பலி, திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றின் வழியாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்னும் இரண்டு வேண்டுகோள்களை புனித ஸ்கலபிரினி நமக்கு அளிக்கின்றார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்தல் என்பது ஒரு நாடகம்

புலம்பெயர்தல் என்பது ஒரு நாடகம் அது இனிமையான பயணமல்ல என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவருக்கும் புலம்பெயர்வதற்கு உரிமை உள்ளதைப் போலவே, அவரவர் தங்கள் சொந்த நிலத்தில் தங்கி அமைதியாக மாண்போடு வாழ உரிமை உண்டு என்றும், போர், பஞ்சம், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வு செய்யப்படுபவர்களின் துன்பத்தை அறிந்துகொள்ள ஆன்மிகம் உதவவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் புனிதமானது மற்றும் விலைமதிப்பற்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அமைதியின் நகரமான எருசலேமை ஸ்கலபிரினி கத்தோலிக்க திருஅவையாக, உலகளாவிய திருஅவையாக, தாய்த்திருஅவையாகப் பார்த்தார் என்றும், பாதுகாப்பைத் தேடும் அனைத்து நிலையில் உள்ள மக்களுக்காகவும் திறந்திருக்கும் பாதுகாக்கும் நகர் எனக் கருதினார் என்றும் எடுத்துரைத்தார்.

செபமில்லாமல் மறைப்பணி இல்லை

செபமில்லாமல் மறைப்பணி இல்லை, உங்களை விடுத்து பிறருக்கு உதவுங்கள், என்ற புனித ஸ்கலபிரினியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், விவிலியத்தில் யாக்கோபின் கனவில் ஏணிப்படியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த வான தூதர்களைப் போல மறைப்பணியாளர்களும் கடவுளின் வான தூதர்கள் என்பதை உணர்ந்து கடைநிலையில் இருக்கும் மனிதர்களை நோக்கிச் செல்லும் கடவுளின் வான தூதர்கள் போன்று இருக்க அவர்களை வாழ்த்தினார்.

புலம்பெயர்ந்தோருக்கான பணியில் தங்களது அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பதற்கும், சபையின் நிறுவனரான ஸ்கலபிரினியின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கும் தீவிரமான ஆன்மிக வாழ்வில் அதை எப்போதும் வேரூன்றச் செய்வதற்குமான ஓர் அழைப்பாக இந்த ஆன்மிக மாநாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2023, 11:33