மரியாவைக் கொண்டாடுவது கடவுள் நெருக்கத்தைக் கொண்டாடுவது
மெரினா ராஜ் - வத்திக்கான்
மரியாவைக் கொண்டாடுவது என்பது, நம்மைத் தனியாக விட்டுவிடாத, நம்மைக் கவனித்துக் கொள்கின்ற, நமக்குத் துணையாக இருக்கின்ற, தம் மக்களோடு எக்காலமும் இருக்கின்ற ஒரு தாயை நமக்கு அளித்த கடவுளின் நெருக்கத்தையும் மென்மையையும் கொண்டாடுவதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 7 சனிக்கிழமை வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில் மோந்த்செராத் இறையன்னை சகோதர உறுப்பினர்கள் ஏறக்குறைய 800 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான பக்தி, சமூக நட்பு மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற தலைப்பில் மொந்தேசெராத் அன்னை மரியா திருத்தலத்தின் 800ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் அவர்களை வாழ்த்தினார்.
செபமாலை செபிக்கும் மக்களிடம் அன்னை மரியா இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று வலியுறுத்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான பக்தியானது நற்செய்தி அறிவிப்பிற்கான சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றது என்றும், இதனால் மக்களிடையே நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகள் வளர்ந்து வலுவடைகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
அன்னை மரியா ஒரு வழக்கறிஞர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்தபோது நிகழ்ந்த பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்ட மரியா, நமக்குள் எழும் பிரச்சனைகளையும் அதன் துயரமான முடிச்சுக்களையும் அவிழ்க்கும் திறன் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசு கிறிஸ்துவையும் அவரது முன்மாதிரிகையையும் பின்பற்ற நம்மை ஊக்கப்படுத்தும் அன்னை மரியா, அமைதி, இரக்கம், செவிசாய்த்தல், பொறுமை, நம்பகமான உரையாடல் போன்றவற்றின் வழியாக அதனை செயல்படுத்த நமக்கு வலியுறுத்துகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
உயிர்த்தெழுந்த இயேசுவின் ஆற்றலுடன் ஒரு புதிய உலகத்தைப் பெற்றெடுக்க அன்னை மரியா விரும்புகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள், சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களுக்கும் இப்பூமியில் மகிழ்வுடன் வாழ இடமும் உரிமையும் உள்ளது, அவ்விடத்தில் தான் நீதியும் அமைதியும் ஒளிவீசுகின்றன என்ற ‘‘நாம் அனைவரும் சகோதரகள்‘‘ என்ற சுற்றுமடல் வரிகளையும் நினைவுகூர்ந்தார்.
பூமிப்பந்தைத் தன் கைகளில் கொண்டிருக்கும் அன்னை மரியா, உலகளாவிய சகோதரத்துவத்தை, எல்லைகள், விலக்குகள் இல்லாமல், நிழல் மூடிய சூழல்களை சிதறடிக்கும் வகையில் வாழ நம்மை அழைக்கிறார் என்றும், மக்களிடையே நட்பின் பாதையை வகுத்து, நமது இருப்பின் தோற்றம் மற்றும் இலக்கை நோக்கி நம் பார்வையைத் திருப்ப அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
மொந்தேசெராத் மரியன்னை திருத்தலத்தின் 800ஆவது ஆண்டை முன்னிட்டு உரோமிற்குத் திருப்பயணிகளாக வந்திருந்த சகோதர உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஒரு கையில் குழந்தை இயேசுவையும் மற்றொரு கையில் பூமியையும் தாங்கியிருக்கும் "மோரெனெத்தா" என்றழைக்கப்படும் கருப்பு நிற அன்னை மரியா, அனைத்து படைப்புக்களின் அரசி என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்