திருத்தந்தையின் இருஉரைகள் அடங்கிய ‘‘Santi, non mondani” புத்தகம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு போராட்டம், நம்மை மூடுவதற்கான சோதனையை சமாளித்து, நம் மகிழ்ச்சியை விரும்பும் தந்தையின் அன்பால் நம்மை வாழ அனுமதிக்கும் ஒரு உள்போர் என்றும், நாம் இறைவனை வெல்ல அனுமதிக்கும்போது நம் இதயம் முழுமையான மகிழ்ச்சியடைகிறது, நமது இருப்பு முடிவற்ற ஒளிரும் கதிராக சுடர்விடுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 6 வெள்ளிக்கிழமை மாலை வத்திக்கான் நூலகத்தால் வெளியிடப்பட்ட ‘‘Santi, non mondani”, புனிதர்கள் உலகியலாளர்கள் அல்ல என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2005 ஆம் ஆண்டு புவனேஸ் அய்ரேஸ் உயர் மறைமாவட்ட பேராயராக இருந்த போது வெளியிட்ட ‘‘ஊழலும் பாவமும்‘‘ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கட்டுரை, 2023 ஆம் ஆண்டு உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இப்புத்தகமானது 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூடியிருப்பவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது.
இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் போராடும் போராட்டம் முதன்மையானது ஆன்மிக உலகத்திற்கு எதிரானது என்று அப்புத்தகத்தில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் உடன்இருப்பை உணராமலும், நமது வாழ்வு மற்றும் உலக வரலாற்றின் விடுதலையாளராக அவரைக் கருதாமலும் இருக்கும் நமது வாழ்வு புனிதத்தின் சாயல் உள்ள அணுகுமுறையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் வெற்றிக்கு பெயர் சிலுவை
மரணத்தின் வழியாக பாவத்தை தோற்கடித்தவரான இயேசு, அவருடைய உயிர்த்தெழுதலின் வாயிலாக புதிய மனிதர்களாக மாறுவதற்கான வாய்ப்பை நமக்குக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வெற்றிக்குப் பெயர் சிலுவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லையற்ற மற்றும் உறுதியான அன்பின் அடையாளமான இயேசு, சிலுவை மரணத்தைப் போன்ற ஒரு இழிவான மரணம் வரை நம்மை அன்பு செய்தார் என்றும், எளிய சிறிய பாவிகளுக்கு கூட திறந்திருக்கும் அவரது கரங்கள், நிலையான அன்பை கிறிஸ்தவர்கள், மற்றும் திருஅவையின் பாதைகளுக்கு வழங்கி சவாலுடன் முன்னேறிச் செல்ல வழிநடத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் சிலுவையானது நம்பிக்கையின் ஒவ்வொரு தேர்வுக்கும் அளவுகோலாக மாறுகிறது என்றும், திருஅவையின் வலிமை உயிர், நம்பிக்கை, கிறிஸ்தவ பேறுபலன்கள் ஆகியவை அனைத்தும் சிலுவையிலிருந்தே வருகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதிகாரங்களுக்கு மத்தியில் தன்னை ஒரு ஆற்றலாகவோ, ஒரு மனிதாபிமான அமைப்பாகவோ, அல்லது ஒரு நிகழ்ச்சியை நடத்தும் திறன் கொண்ட ஒரு நற்செய்தி இயக்கமாகவோ திருஅவை தன்னைக் காட்டிக் கொள்ளும்போது தன்னையும் உலகையும் ஏமாற்றுகிறது என்றும், அத்தகைய திருஅவை சுடர்விடுவது போல தெரிந்தாலும் கடவுளன்பின் நெருப்பாக இருக்க முடியாது என்ற அருளாளர் Pierre Claverie அவர்களின் வரிகளையும் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
ஆன்மிக உலகத்திற்கு சரணடைவதற்கு எதிராக, ஜெபத்தின் பலத்துடன், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவ வாழ்விற்கு எதிரான போராட்டத்தில் துணிவுடன் போராடவும், முழு திருஅவைக்கும் கடவுளின் வலுவான அழைப்பாக இப்புத்தகம் இருப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்விற்கு எதிரான போராட்டத்திற்கு புனிதம் என்று பெயர், இப்புனிதம், ஒருமுறை மட்டுமே அடையப்படும் பேரின்ப நிலை அல்ல, மாறாக அது இயேசுவின் சிலுவையுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற இடைவிடாத, அயராத ஆசை என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், தன்முனைப்பினால் வரும் போராட்டம், கடினமான சூழல் ஆகியவற்றால் நம்மை வடிவமைக்க, இந்நிலை நம்மை அனுமதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னைப்பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற இயேசுவின் வரிகளை நினைவில் கொண்டு, எதார்த்த வாழ்விற்கு அழைக்கும் இறைவனுக்கு இடம் கொடுத்து வாழவும், நமது போராட்டம் வீணான நம்பிக்கையற்றப் போராட்டமல்ல இதில் வெற்றியாளரான இயேசு நம்மோடு இருக்கின்றார் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்