தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - புனித ஜோசப்பீன் பகிதா

அக்டோபர் 11 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தலின் பேரார்வத்தின் தொடர் மறைக்கல்வி உரையில் ஆப்ரிக்காவின் புனித பகிதா பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாத இப்புதன் காலையில், நாளின் முதல் நிகழ்வாக உரோம் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றிய பொது மறைக்கல்வியுரைப் பகுதியில், கிறிஸ்துவின் மன்னிப்பிற்கு சாட்சியாகத் திகழ்ந்த புனித ஜோசப்பின் பகிதா குறித்து எடுத்துரைத்தார்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளைத் திறந்த காரில் வலம்வந்தபடி சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரை வழங்குமிடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து தனது மறைக்கல்வி உரைக் கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் லூக்கா நற்செய்தியிலிருந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும் பகுதியானது இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

லூக்கா 23 : 32 - 34

வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். 33மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.

நற்செய்தி வாசகமானது வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் குறித்த தொடர் மறைக்கல்வி உரையின் 22ஆவது பகுதியாக சூடான் புனிரான புனித ஜோசப்பின் பகிதா பற்றி எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நற்செய்தி அறிவிப்பின் பேரார்வம் குறித்த நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம் சூடான் நாட்டுத் துறவியான புனித ஜோசப்பின் பகிதாவின் வாழ்க்கை குறித்துக் காண்போம். பல மாதங்களாக சூடான் ஒரு பயங்கரமான ஆயுத மோதலால் பிளவுபட்டுள்ளது; சூடான் மக்கள் நிம்மதியாக வாழ அவர்களுக்காக செபிப்போம். புனித பகிதாவின் புகழ் எல்லா எல்லைகளையும் தாண்டி அடையாளமும் மாண்பும் மறுக்கப்பட்ட அனைவரையும் சென்றடைந்துள்ளது.

ஒல்கோசாவில் பிறந்த புனித பகிதா, டார்பூரில் அடிமையாகத் துன்புறுத்தப்பட்டார். 1869 ஆம் ஆண்டில் ஏழு வயதில் தனது குடும்பத்திலிருந்து கடத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார். அவளை சிறைபிடித்தவர்கள் அவரை "பகிதா" அதாவது "அதிர்ஷ்டசாலி" என்று அழைத்தார்கள். அவர் எட்டு தலைவர்களிடம் அடிமையாகக் கடந்து சென்றார். சிறுவயதில் அவர் அனுபவித்த உடல் மற்றும் மனநல துன்பங்கள் அவளது அடையாளத்தை இல்லாமல் செய்து விட்டன. கொடுமை மற்றும் வன்முறைக்கு ஆளான அவரது உடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தழும்புகள் இருந்தபோதிலும், தனது சான்றுள்ள வாழ்வினால் சாட்சியம் அளித்தார்: "ஓர் அடிமையாக நான் ஒருபோதும் விரக்தியடையவில்லை, ஏனென்றால் ஒரு மர்மமான வியக்கத்தக்க ஆற்றல் என்னை பாதுகாப்பதை நான் உணர்ந்தேன்“ என்று புனித பகிதா பகிர்ந்துள்ளார்.

புனித பகிதாவின் ரகசியம் என்ன? காயம்பட்ட மனிதர் துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நாம் அறிவோம்; ஒடுக்கப்பட்டவன் எளிதில் ஒடுக்குபவனாக மாறுகிறான்.  மனிதகுலத்தை மீட்டெடுப்பதன் வழியாக தங்களையும் ஒடுக்குபவர்களையும் விடுவிப்பதே ஒடுக்கப்பட்டவர்களின் பணி. ஒடுக்கப்பட்டவர்களின் பலவீனத்தில்தான் இருவரையும் விடுவிக்கும் கடவுளின் அன்பின் வலிமை வெளிப்படும். புனித பகிதா இந்த உண்மையை நன்றாக வெளிப்படுத்துகிறார். ஒரு நாள் அவளுடைய பாதுகாவலர் அவளுக்கு ஒரு சிறிய சிலுவையைக் கொடுக்கிறார், இதுவரை எதையும் பொக்கிசமாக வைத்திருக்காத அவர் அதை அதிகம் விரும்பும் பொக்கிஷமாக தன்னுடன் வைத்திருக்கிறார். அச்சிலுவையைப் பார்க்கும்போது ஆழ்ந்த உள்மன விடுதலையை அனுபவிக்கிறார். இயேசுவைப் புரிந்துகொண்டு அன்பு செய்கின்றார். இதனால் பிறரைப் புரிந்துகொள்வதற்கும் அன்பு செய்யும் திறனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். "கடவுளின் அன்பு எப்பொழுதும் ஒரு மர்மமான வழியில் என்னுடன் வந்திருக்கிறது... கடவுள் என்னை மிகவும் அன்பு செய்தார். எனவே நாமும் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். இரக்கத்துடன் இருக்க வேண்டும்!" என்று  புனித பகிதா அடிக்கடி கூறுவார்.  உண்மையில், இரக்கம் என்பது உலகில் இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் துன்பப்படுவதைக் குறிக்கிறது. தவறுகள் மற்றும் அநியாயங்களைச் செய்பவர்கள் மீது இரக்கப்படுவதை நியாயப்படுத்தாமல், மன்னிப்பதன் வழியாக மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கும், எப்போதும் மற்றொரு வாய்ப்பைக் கொடுப்பதற்கும், நம்பிக்கையின் பாதைகளைத் திறந்து செயல்படுத்துவதற்கும் மாற்றத்திற்காக நம் உள்ளங்களைத் திறப்பதற்கும் உதவுகின்றது. 

கிறிஸ்தவராக மாறிய புனித பகிதா, தினமும் தியானித்த கிறிஸ்துவின் வார்த்தைகளான தந்தையே இவர்களை மன்னியும் ஏனென்றால் அவர்கள் செய்வது என்தென்று அறியாது செய்கிறார்கள் என்பதை வாழ்வாக்கினார். (லூக் 23.34)  "யூதாஸ் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டிருந்தால், அவருக்கும் இயேசுவின் மன்னிப்பு மற்றும் இரக்கம் கிடைத்திருக்கும்". புனித பகிதாவின் வாழ்க்கை மன்னிப்பின் இருத்தலியல் உவமையாகிவிட்டது. 

மன்னிப்பு அவரை விடுவித்தது. கடவுளின் இரக்கமுள்ள அன்பின் வழியாக முதலில் கிடைத்த மன்னிப்பானது பிறரை மன்னிக்கவும், சுதந்திரமான, மகிழ்ச்சியான பெண்ணாக, அனைவரையும் அன்பு செய்யும் திறன் கொண்டவராக அவரை மாற்றியது. மன்னிப்பு அவளை தனது சொந்த நிலத்திலிருந்தும் அவளுடைய அன்புக்குரியவர்களிடமிருந்தும் வெகு தொலைவில் வாழ அனுமதித்தது, ஒவ்வொரு நாளும் இறைவன் அவளை புதிய சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக வாழப் பணித்த இடத்தில் புதிய வாழ்வு வாழ அனுமதித்தது. தன்னை குறைந்த மனிதனாக அல்லது வித்தியாசமான மனிதனாக நடத்தியவர்களை மன்னித்து வாழ்ந்தார். "எல்லோரும் என்னை ஒரு அரிய மிருகம் போல் பார்க்கிறார்கள்!". அவர் ஒரு முறை கூறினார். மன்னிப்பு என்னும் குணம் நிராயுதபாணியான அவருக்கு பிறரை அன்பு செய்யவும், தன்னை நேசிக்கவும் எளியமனம் புன்னகை, பாசம், தொண்டு ஆகியவற்றின் எளிமை மற்றும் உறுதியான தன்மையுடன் வாழ உதவியது.

இதனால் பகிதா அடிமையாக அல்ல மாறாக சுதந்திரமான மனநிலையுடன் தன்னை வெளிப்படுத்தும் விதமாக வாழ முடிந்தது. இது மிகவும் முக்கியமானது: வலுக்கட்டாயமாக ஒரு அடிமை வேலை செய்யும் பணியாளராக ஆக்கப்பட்ட அவர் சுதந்திரமாக பணியாற்றுபவராக மாறினார். மற்றவர்களின் சுமைகளைத் தன் தோளில் சுமந்தார். இரண்டு உலகப் போர்களின் வியத்தகு காலங்களில், வெனிட்டோவில் உள்ள ஷியோ மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அவர் தந்தார். மன்னிப்பு அவருக்கு அமைதியையும் அமைதியை ஏற்படுத்துபவராகவும் மாற்றியது அதுமட்டுமல்லாது ஒரு அமைதியான பெண்ணாக, சுதந்திரமான மற்றும் விடுதலையான பெண்ணாக அவரை மாற்றியது. அவருடைய வாழ்க்கை கடவுளின் அற்புதச் செயல்களினால் மாற்றமடைந்தது.

புனித ஜோசபின் பகிதா, தனது சான்றுள்ள வாழ்க்கையின் வழியாக, அடிமைத்தனம் மற்றும் அச்சங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியை நமக்குக் காட்டுகிறார். இது நமது பொய்மைத்தன்மை மற்றும் சுயநலத்தை அவிழ்த்து, மனக்கசப்பு மற்றும் மோதல்களை சமாளிக்க உதவுகிறது. நம்முடன் நாம் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், நமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அமைதியைக் காணவும் நம்மை ஊக்குவிக்கிறது. மற்றவர்கள் மீதான அவநம்பிக்கை மற்றும் அவநம்பிக்கையின் இந்த கடினமான காலங்களில் இது நம்பிக்கையின் ஒளியை நமக்கு வழங்குகிறது.

அன்பான சகோதர சகோதரிகளே, மன்னிப்பு என்பது எதையும் எடுத்துச் செல்லாது, ஆனால் அந்த நபருக்கு மாண்பைக் கொடுக்கின்றது. அது நம்மை விட்டு மற்றவர்களை நோக்கிப் பார்க்க வைக்கிறது, அவர்களும் நம்மைப் போலவே பலவீனமாக இருப்பதைப் பார்க்கிறோம், ஆனால் எப்போதும் இறைவனில் சகோதர சகோதரிகளாக நாம வாழ்கின்றோம். மன்னிப்பு என்பது ஒரு வைராக்கியத்தின் அடிப்படை அது கருணையாக மாறி, புனித பகிதாவைப் போன்ற ஒரு பணிவான மற்றும் மகிழ்ச்சியான புனிதத்த்துவ வாழ்விற்கு நம்மை அழைக்கிறது.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீனத்தில்  நடைபெறும் போரினால்  துன்புறும் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபித்தார். ஒருவர் மற்றவர்களுக்காக செபிக்கவும் போரினை கைவிட்டு அமைதியாக வாழவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் தன் ஆன்மிக நெருக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்றார். Siena-Colle Val d’Elsa-Montalcino, Montepulciano-Chiusi-Pienza, Volturino, Gragnano  ஆகிய மறைமாவட்டங்களின் திருப்பயணிகளையும் அவர்களுடன் வந்திருந்த கர்தினால் பாவ்லோ லோஜுடிஸ் அவர்களையும் வாழ்த்தினார். மறைமாவட்டப் புனிதர்களான புனித கேத்தரின் மற்றும் ஆக்னஸ் ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்ற திருப்பயணிகளை ஊக்குவிப்பதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முதியோர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியவர்கள் சமுதாயத்தின் விலைமதிப்பற்ற பரிசு என்பதை மறந்து விடக்கூடாது என்றும், அவர்களிடம் இருந்து உண்மையான நம்பிக்கையையும் வாழ்க்கையின் ஞானத்தையும் கற்றுக்கொள்கிறோம் என்றும் கூறினார். இறுதியாக, இளைஞர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இந்த அக்டோபர் மாதத்தில் செபமாலையின் ராணியாக அழைக்கப்படும் அன்னையிடம், பசி, அநீதி மற்றும் போரினால் அவதிப்படுபவர்களுக்காக செபிக்கும்படியும், குறிப்பாக அன்பான மற்றும் துன்புறுத்தப்பட்ட உக்ரைனுக்காக விடாமுயற்சியுடன் செபிக்கவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

அதன்பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2023, 08:46