காசாவில் அமைதிக்கான வழிகள் திறக்கப்படட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் அமைதிக்கான வழிகள் திறக்கப்படவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும், பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவும் தான் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, இப்போரால் தான் மிகவும் கவலையும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் துன்பப்படுபவர்கள், பணயக்கைதிகள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருடனும் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைன் உட்பட உலகில் நிகழும் எல்லாப் போர்களைக் குறித்தும் தான் நினைவுகூர்வதாகவும், போர் என்பது எப்போதும் தோல்வியைத்தான் தரும் என்றும் அது மனித உடன்பிறந்த உறவின் அழிவு என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தயவுகூர்ந்து இப்போரினை நிறுத்துங்கள், நிறுத்துங்கள் என்றும் விண்ணப்பித்தார்.
அக்டோபர் 27, வரும் வெள்ளியன்று உண்ணாநோன்பு, இறைவேண்டல் மற்றும் ஒறுத்தல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அதேநாளில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு, நம் உலகில் அமைதி நிலவவேண்டி ஒரு மணி நேரம் செப வழிபாடு நடைபெறும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்