வெனிஸ் பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 10 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தவர்கள், மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி வெனிஸ் நகரப் பேராயருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வெனிஸ் நகர முதுபெரும்தந்தை, பேராயர் Francesco Moraglia அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தியில், இப்பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைவர் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதோடு, அவர்களின் இழப்பால் துன்புறும் குடும்பங்களுக்கு தன் பாசத்துடன் கூடிய ஆழ்ந்த நெருக்கத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
உறவினர்களின் இழப்பால் துன்புறும் குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதலை வழங்கவேண்டும் எனவும், விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டுதல் செய்வதாகவும் திருத்தந்தை அத்தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.
மின்சாரத்தால் இயங்கும் பேருந்து ஒன்று 39 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலியின் வெனிஸ் நகர் மையப்பகுதியிலிருந்து அக்டோபர் 3ஆம் தேதி செவ்வாய் மாலை திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்நகரிலேயே சாலையிலிருந்து தலைகீழாக விழுந்து தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர், 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்