தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (REUTERS)

அமைதிக்காக அரசு மற்றும் ஆன்மிகத்தலைவர்களுடன் திருத்தந்தை உரையாடல்

அமைதிக்கானத் தேடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியின் சில முக்கியக் கிறிஸ்தவத் தலைவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பூமியில் இடம்பெற்றுவரும் மிகவும் துயரமான நிலைகள் குறித்து துருக்கி அரசுத்தலைவர் ரெசெப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdoğan) அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் உரையாடியதாக திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் மத்தேயோ புரூனி அவர்கள் தெரிவித்தார்.

வியாழன் காலையில் இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலின்போது, இரு தலைவர்களும் மத்தியக் கிழக்குப் பகுதியின் தற்போதைய பதட்ட நிலைகள் குறித்து விவாதித்ததாகவும், இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே அமைதி நிலவ வேண்டும் மற்றும் இஸ்ராயேல் நகருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்ற ஆவலையும் திருத்தந்தை வெளிப்படுத்தியதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் எடுத்துரைத்தார்.

காசாவில் இடம்பெற்றுவரும் துயர நிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை துருக்கி அரசுத் தலைவர் திருத்தந்தையிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறினார் புரூனி.

ஏற்கனவே அக்டோபர் மாதம் 22ஆம் தேதி, மத்தியக்கிழக்கு மோதல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் ஜோ பைடன் அவர்களுடன் 20 நிமிடம் உரையாடியது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 27, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியின் சில முக்கியக் கிறிஸ்தவத் தலைவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

எகிப்தின் அலக்சாந்திரியா காப்டிக் முதுபெரும்தந்தை இப்ராகிம் ஈசாக் செத்ராக், சிரியாவின் அந்தியோக்கிய கிரேக்க மெல்கீதிய முதுபெரும்தந்தை Youssef Absi, லெபனானின் அந்தியோக்கிய மேரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் Béchara Boutros Raï, ஈராக்கின் பபிலோனியாவின் கல்தேய முதுபெரும் தந்தை கர்தினால் Louis Raphaël Sako, லெபனானின் அர்மேனிய முதுபெரும்தந்தை Raphaël Bedros 21ஆம் Minassian ஆகியோரை திருப்பீடத்தில் வெள்ளிக்காலையில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2023, 14:37