வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் அமைதிக்கான செபவழிபாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனாவிற்கு இடையே இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் மற்றும் உலகில் அமைதி நிலவ வேண்டும் என அக்டோபர் 27ஆம் தேதியை செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாக அறிவித்து அன்று மாலை, வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் அமைதிக்கான செபவழிபாடு ஒன்றை நடத்திய திருத்தந்தை, அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுக்க உலகின் தலைவர்களைத் தூண்டவும், அதிகார மோகம் மற்றும் பகையால் குருடாயிருக்கும் மக்களை ஒப்புரவிற்கு கொணரவும் அன்னை மரியா உதவவேண்டும் என செப வேண்டுதல் செய்தார்.
அமைதிக்கான செபவழிபாட்டிற்கு அக்டோபர் மாதம் 18ஆம் தேதியே அழைப்புவிடுத்து இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த செபவழிபாடு, விவிலிய வாசிப்புகள், செபம், அமைதி தியானம், செபமாலை, நற்கருணை வழிபாடு போன்றவைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
எங்களையும் எங்கள் பிரச்சனைகளையும், எதிர்காலம் குறித்த ஏக்கங்களோடும் அச்சங்களோடும் அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறோம் என இவ்வழிபாட்டின்போது செபித்த திருத்தந்நை பிரான்சிஸ் அவர்கள், ஏனெனில், இவ்வுலகை துண்டாக்கிவரும் போர்கள் மற்றும் மோதல்களால் துன்புறும் உம் குழந்தைகளோடு இணைந்து நீரும் துன்புறுகிறீர் என அன்னை மரியாவை நோக்கி எடுத்துரைத்தார்.
அமைதியின் பாதையை விட்டு விலகியுள்ள இவ்வுலகின் மீது உம் பார்வையைத் திருப்பி, அவர்களை போர் மற்றும் மோதல்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றியருளும் என அன்னை மரியாவை நோக்கி வேண்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்களுக்கான அன்னையின் பரிந்துரையை நாடினார்.
வாழ்வு குறித்து அக்கறையுள்ளவர்களாகவும், கடவுளுக்கு முதலிடம் கொடுப்பவர்களாகவும் இவ்வுலக மக்கள் மாறிட உதவியருளும் என அன்னை மரியாவை நோக்கி வேண்டிய திருத்தந்தை, குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்தருளும், முதியோர் மற்றும் தனிமையில் வாடுவோர் நடுவே இருந்தருளும், காயம்பட்டோருக்கு ஆறுதலையும், புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பையும், வீழ்ச்சியடைந்தோருக்கு ஆறுதலையும் வழங்கி அவர்களில் புது நம்பிக்கைகளை விதைத்தருளும் என மேலும் வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இன்று உலகை, குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பதாகவும் இச்செபவேளையின்போது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக அமைதிக்கான இந்த செப வேளையில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவரல்லாதவரும் இணைந்து செபிக்க வேண்டும் என திருத்தந்தை ஏற்கனவே கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எண்ணற்றோர் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற அமைதி ஜெபவழிபாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்