தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நாம் மேல் நோக்கி வளர நெருக்கடிகள் உதவுகின்றன

பொய்யான நம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்ச்சி இளையோருக்கு வழங்கப்பட்டு, நெருக்கடிகளிலிருந்து ஒன்றிணைந்து மேல்நோக்கி எழும்ப அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் சந்திக்கும் நெருக்கடி, பொய்யான மெசியானிய நம்பிக்கை, போர், ஆயர் மாமன்றம், நம்பிக்கை என்னும் நற்பண்பு ஆகியவை குறித்து அர்ஜென்டினாவின் Télam செய்தித் தொடர்பு அமைப்பிற்கு நேர்முகம் ஒன்றை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு நாட்டின் உண்மை மதிப்பீடுகள் வெளிவருவது குறித்து நாம் ஒரு நாளும் அஞ்சக்கூடாது என அவ்வமைப்பிற்கு வழங்கிய நேர்முகத்தில் கூறிய திருத்தந்தை, சுரண்டல், நில ஆக்கிரமிப்பு ஆகிய இரண்டும் போருக்கான முக்கிய காரணங்களாக உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நெருக்கடிகள் குறித்து நாம் அஞ்ச வேண்டாம், ஏனெனில், அவை ஓர் உள்மன இயக்கத்திற்கு காரணமாகி, நாம் விடுதலையடைந்து மேலும் மேல் நோக்கி வளர உதவுகின்றன என்பது மட்டுமல்ல, நம்மோடு பிறரையும் நெருக்கடியிலிருந்து வெளிவர உதவுகின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

இளையோருக்கு கல்வி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, பொய்யான நம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்ச்சி அவர்களுக்கு வழங்கப்பட்டு, நெருக்கடிகளிலிருந்து ஒன்றிணைந்து மேல்நோக்கி எழும்ப அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

செய்யும் தொழிலின் மாண்பு, மற்றும் சுரண்டல் என்னும் மிகப்பெரும் பாவம் குறித்தும் எடுத்துரைத்து, தொழிலாளர்கள் அவர்களுக்குரிய உரிமைகள் மதிக்கப்படுவதன் வழியாகவே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலைப் பெறமுடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னை ஒரு சர்வாதிகாரி என்றோ, கம்யூனிசவாதி என்றோ சிலர் நினைப்பது தவறான கண்ணோட்டம் என்ற திருத்தந்தை, நற்செய்தியில் கூறப்பட்டுள்ள மதிப்பீடுகளையே எந்த ஒரு திருத்தந்தையும் போதிப்பதாகவும் எடுத்தியம்பினார்.

கலாச்சார முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்ப வளர்ச்சி, அறிவியல் மாற்றங்கள், போர், பேச்சுவார்த்தைகள் வழி உலக பாதுகாப்பு, நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு, சுரண்டல், ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையைப் புரிந்துகொள்ளல், நல்மாற்றத்தை எதிர்நோக்கும் ஆயர் மாமன்றக்கூட்டம், நம்பிக்கையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் தன் கருத்துக்களை அர்ஜெண்டீனாவின் Télam செய்தித் தொடர்பு அமைப்பிற்கு வழங்கிய நேர்முகத்தில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2023, 15:16