திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – புனித சார்லஸ் ஃபோக்கால்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் 18 புதன்கிழமை நற்செய்தியாளர் புனித லூக்கா திருவிழாவினை திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவித்தலில் பேரார்வம் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வி உரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இளம்வெயிலும் இனிமையான தென்றல் காற்றும் நிறைந்திருந்த வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த திருப்பயணிகள் நடுவே திறந்த காரில் வலம்வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், சிறு குழந்தைகளுக்கு ஆசீர்அளித்தும் மகிழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தினை வந்தடைந்தார். அதன்பின் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்விக் கூட்டத்தினை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். லூக்கா நற்செய்தி இரண்டாம் அதிகாரத்தில் உள்ள சிறுவன் இயேசு கோவிலில் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், பிரெஞ்சு ஆகிய பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
லூக்கா 2: 51-52
பின்பு, இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவித்தலின் பேரார்வம் என்ற தலைப்பில் கீழ் தான் ஆற்றிவரும் தொடர் மறைக்கல்வி உரையின் 23ஆவது பகுதியாக, புனித சார்லஸ் போக்கால்டின் மறைந்த வாழ்வில் தொண்டுப்பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் குறித்த நமது தொடர் புதன் மறைக்கல்வி உரையில் நற்செய்தியை மிக ஆர்வத்துடன் எடுத்துரைத்த பல புனிதர்கள் மற்றும் மனிதர்களின் சான்றுள்ள வாழ்வைக் குறித்து நாம் அறிந்தோம். குறிப்பாக இன்று இயேசுவையும் அவரது ஏழை சகோதரர்களையும் தனது வாழ்க்கையின் பேரார்வமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதனைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அவரே புனித சார்லஸ் தே ஃபோக்கால்டு. "கடவுளைப் பற்றிய தனது உறுதியான அனுபவத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, அனைவரும் ஒரு சகோதரனைப் போல தன்னை உணரும் அளவிற்கு மாற்றத்திற்கானப் பயணத்தை மேற்கொண்டவர் புனித சார்லஸ்.
அவரது வாழ்க்கையின் "இரகசியம்" என்ன? தனது இளமைக்கால வாழ்வில் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் வாழ்ந்த அவர், ஒழுங்கற்ற இன்பத் தேடலைத் தவிர, வேறு எதையும் நம்பாமல் வாழ்ந்தார். கடவுள் நம்பிக்கையற்ற நண்பர் ஒருவர் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக மனமாற்றமடைந்து கிறிஸ்தவத்திற்கு மாறியதைக் காண்கிறார். இதனால் அவரும் மனம் மாறுகின்றார். "நாசரேத்து இயேசுவுக்காக நான் என் இதயத்தை இழந்தேன்" என்று தன் வாழ்க்கையின் காரணமாக அவர் எழுதுகின்றார். நற்செய்தி அறிவிப்பதற்கான முதல் படி இயேசுவை இதயத்தின் மையத்தில் வைத்திருப்பது, அவருக்காக " நம்மையே நம் தலையையே இழப்பது" என்று புனித சார்லஸ் நமக்கு நினைவூட்டுகிறார். இவ்வாறு நடக்கவில்லை என்றால், நற்செய்தியை துணிவாக நம் வாழ்வில் அறிவிக்க வாய்ப்பில்லை. நாம் நம்மைப் பற்றி, நம் குழுவைப் பற்றி, ஒரு ஒழுக்கக்கேடான செயலைப் பற்றி அல்லது, அதைவிட மோசமான, செயல்களைப் பற்றியே பேசுவோம், ஆனால் இயேசுவைப் பற்றியோ, அவருடைய அன்பைப் பற்றியோ, அவருடைய கருணையைப் பற்றியோ பேசாது விடுவோம். நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: இயேசுவை என் இதயத்தின் மையத்தில் வைத்திருக்கிறேனா? அவருக்காக நான் என்னை என் தலையை இழக்கத் துணிகின்றேனா?
புனித சார்லஸ் இயேசுவுக்காகத் தன்னை இழந்தார். இயேசுவின் மீதான ஈர்ப்பிலிருந்து இயேசுவைப் பின்பற்றுவதற்கு அவர் முன்னேறிச் செல்கிறார். அவரது ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளரின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரில் புனித பூமிக்குச் செல்லவும் இறைவன் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும், தலைவராம் இயேசு நடந்த இடத்தில் நடக்கவும் விரும்பி, பயணம் மேற்கொள்கின்றார். குறிப்பாக, நாசரேத்தில் கிறிஸ்து வளர்ந்த, பயின்ற இடத்தில் தான் அவரைப்பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும், பயிற்சி பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கின்றார். கிறிஸ்துவுடன் ஒரு தீவிரமான உறவு கொண்டு வாழ்கிறார், அதிகமான நேரங்கள் நற்செய்தியைப் படிக்கிறார் இதனால் கிறிஸ்துவின் சிறிய சகோதரனைப் போலத் தன்னை உணர்கிறார். மேலும் இயேசுவை அறிந்துகொள்வதன் வழியாக அவரை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவல், ஆசை அவருக்குள் எழுகின்றது. மரியா எலிசபெத் சந்திப்பின் வழியாக "நான் உலகிற்காக என்னைக் கொடுத்துள்ளேன்... என்னை உலகிற்குக் கொண்டு வாருங்கள்" என்று சொல்ல வைக்கிறார் கடவுள். அன்னை மரியின் வருகையைப் போல அமைதி மற்றும் எடுத்துக்காட்டான வாழ்க்கையின் வழியாக நாம் கிறிஸ்துவை உலகத்திற்குக் கொண்டு வரவேண்டும். நமது முழுமையான வாழ்க்கையும் நற்செய்தியை சத்தமாக எடுத்துரைப்பதில் இருக்கவேண்டும் என்ற புனித சார்லஸ் ஃபோக்கால்டுவின் வார்த்தைகள் போல நமது வாழ்வும் இருக்கவேண்டும்.
இயேசுவின் சொந்த ஊரான நாசரேத்தின் ஆற்றலால் நிறையப்பெற்று அமைதி, வறுமை, மற்றும் எளிமையான மறைந்த வாழ்வால் நற்செய்தியைத் துணிவுடன் எடுத்துரைக்க தொலைதூர பகுதிகளில் குடியேற முடிவு செய்கிறார். எனவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் வாழ்ந்த சகாரா பாலைவனத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு நண்பராகவும் சகோதரராகவும் இயேசு கிறிஸ்துவின் நற்கருணையின் ஆற்றலையும் அருளையும் மக்களிடத்தில் கொண்டு வருகின்றார். "திருநற்கருணை நம் வாழ்க்கையில் இடம்பெறும்போது நமது வாழ்க்கை நற்செய்தி அறிவிப்பாக மாறுகின்றது. அதனை உறுதியாக நம்பிய புனித சார்லஸ் தன் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாக இயேசுவிடம் விட்டுவிடுகிறார். உண்மையில், கிறிஸ்துவே முதல் நற்செய்தி அறிவிப்பாளர் என்று அவர் நம்புகிறார். ஆகவே, அவர் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து திருநற்கருணை முன், ஒரு நாளைக்கு ஏறக்குறைய பத்து மணிநேரம் செபிக்கிறார். இதனால் நற்செய்தி அறிவிக்கும் ஆற்றல் தனக்குக் கிடைக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றார். இந்த ஆற்றலால் தொலைதூரத்தில் உள்ள பல சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு வருவது இயேசுவே என்று உணர்கிறார். நாம் பல நேரங்களில் திருநற்கருணை முன் அமர்ந்து செபிக்கும் பழகக்த்தை மறந்து கொண்டிருக்கிறோம். எனவே அதனை உணர்ந்து மீண்டும் அப்பழக்கத்தை நமதாக்குவோம். ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார் என நம்மிடமிருந்து அது மீண்டும் உயிர்பெற்று எழட்டும். நாம், நற்கருணையின் சக்தியை ஆற்றலை நம்புகிறோமா? நமது பணி மற்றவர்களுக்குச் சென்றடைகின்றதா? நமது பணியின் தொடக்கம் மற்றும் அதன் நிறைவு திருநற்கருணையில் நிறைவடைகின்றதா? என்று சிந்திப்போம்.
"ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு அப்போஸ்தலரே" என்று புனித சார்லஸ் தெ ஃபோக்கால்டு தனது நண்பருக்கு எழுதுகிறார். அருள்பணியாளர்களுக்கு அருகில் இருந்து செயலாற்றும் பொது நிலையினர் அருள்பணியாளர் காணாததையும் காணும் ஆற்றல் பெற்றவர்களாகின்றனர். அன்பின் நெருக்கம் மற்றும் நன்மையுடன் நற்செய்தியை அறிவிக்கும் பொது நிலையினர் அனைவரும், அன்போடுத் தன்னை எப்போதும் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளார் புனித சார்லஸ். பொது நிலையினரான புனிதர்கள் உயர ஏறுபவர்கள் அல்ல. இயேசுவை அதிகமாக அன்பு செய்யும் அம்மக்கள் இயேசு நமது அதிகாரியல்ல மாறாக நம்மை கடவுளோடு இணைக்கும் இணைப்பாளர் என்பதனை அருள்பணியாளர்களுக்கு உணர்ந்த்துகின்றனர். இப்படிப்பட்ட பொது நிலையினரை தம் அருகில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் தங்களாது நம்பிக்கை மற்றும் சான்றுள்ள வாழ்க்கையின் வழியாக கடவுளை நோக்கிச்செல்லும் வழியை நமக்கு காட்டுகின்றார்கள். இவ்வழியில், புனித சார்லஸ் இரண்டாம் வத்திக்கான் சங்கம் காலக் கருத்துக்களை வலியுறுத்தி பொதுநிலையினரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றார். நற்செய்தி அறிவிப்பு முழுமையும் கடவுளின் மக்களுக்கும் சொந்தமானது என்பதை புரிந்துகொள்கிறார். இந்த பங்கேற்பை நாம் எவ்வாறு அதிகரிக்க முடியும்? புனித சார்லஸ் செய்தது போல் நாமும் திருநற்கருணை முன்பு மண்டியிட்டு தூயஆவியின் செயலை வரவேற்கும் போது எப்போதும் புதிய வழிகளில் ஈடுபடுதல், சந்தித்தல், கேட்டல், உரையாடல் போன்றவற்றால் ஊக்குவிக்கப்படுகின்றோம். ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையுடன் திருஅவை மற்றும் அருள்பணியாளர்களுடன் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தப்படுகின்றோம்.
நம் காலத்து இறைவாக்கினரான புனித சார்லஸ் தே ஃபோக்கால்டு சாந்தம் மற்றும் மென்மையான அப்போஸ்தலப் பணி வழியாக நற்செய்தியைப் பிறருக்கு அறிவித்தார். கடவுளின் செயல் அல்லது பாணி மூன்று வார்த்தைகளில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். உடனிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை. கடவுள் எப்போதும் நெருக்கமாக நம் உடன் இருக்கின்றார். அவர் எப்போதும் இரக்கமுள்ளவர், எப்போதும் மென்மையானவர். சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வு இந்த பாதையில் செல்ல வேண்டும்: உடனிருப்பு, இரக்கம், மென்மை. அவர் அப்படித்தான், மென்மையாகவும் மென்மையாகவும் இருந்தார். புனித சார்லஸ் இவ்வழியில் பிறரோடு தொடர்புகொள்வதற்கு சாட்சியமளித்தார். அவர் ஒரு "உலகளாவிய சகோதரர்" என்று தன்னை உணர்ந்து அனைவரையும் வரவேற்றார், நற்செய்தின் மென்மையின் ஆற்றலை நமக்குக் காட்டுகிறார். தம்மைச் சந்திக்கும் எவரும் இயேசுவின் நற்குணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார், இயேசுவின் நற்குணத்தை வாழ்வது என்பது, ஏழைகளுடன், அவரது மனநிலையிலிருந்து வெகு தொலைவில் உள்ளவர்களுடன், சகோதர உறவுகளையும் நட்பையும் உருவாக்க அவருக்கு வழிவகுத்தது. சிறிது சிறிதாக இந்த பிணைப்புகள் ஒருவருக்கொருவர் மனித உடன்பிறந்த உணர்வு, கலாச்சாரத்தின் மதிப்பு ஆகியவற்றை உருவாக்கியது. எளிமையான நன்மை, நற்செயல்கள் மற்றும் புன்னகையை கொடுக்க பயப்படாத எளிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டும். இது தொடர்பாக புனித சார்லஸ் கூறுகையில், "புன்னகை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வை, மகிழ்வைத் தருகிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது, அவர்கள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது, கடினமான சூழலை எளிதாக்குகின்றது. இதுவே பிறரன்புப் பணியாகின்றது என்று கூறுகின்றார். இறுதியாக, கிறிஸ்தவ மகிழ்ச்சியை நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் தருகின்றோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். கிறிஸ்தவ சாந்தம், கிறிஸ்தவ மென்மை, கிறிஸ்தவ இரக்கம், கிறிஸ்தவ நெருக்கம் கொண்டவர்களாக வாழமுயல்வோம். நன்றி. ,
இவ்வாறு தனது புதன் மறைக்கல்வி உரையினை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்றார். குறிப்பாக, ஃபென்சா மறைமாவட்டத்திலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் மற்றும் அவருடன் வந்திருந்த ஆயர் மாரியோ டோசோ அவர்களையும் வாழ்த்தினார். மேலும் அவர்களிடம், அன்பான இளைஞர்களே, இயேசுவை உங்கள் இதயத்தின் மையப்பகுதியில் வையுங்கள் அப்போதுதான் அவருடன் தீவிரமான உறவுகொண்டு வாழவும், அறிந்து கொள்ளவும் இந்த உலகத்தில் அவருக்கு சாட்சியம் அளிக்கவும் முடியும் என்றும் கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 22 திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அகில உலக மறைபரப்பு ஞாயிறானது “பற்றி எரியும் இதயங்கள், நகர்ந்து செல்லும் கால்கள்" என்பதைக் கருப்பொருளைக் கொண்டு சிறப்பிக்கப்பட உள்ளது என்று நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணித் தேவைகளுக்காக சிறப்பான செபம், மற்றும் உறுதியான ஆதரவுடன் இந்த முக்கியமான வருடாந்திர நிகழ்வில் தீவிரமாக பங்கேற்குமாறு மறைமாவட்டங்கள், தலத்திருஅவைகள் மற்றும் அனைத்து பிற சமூகங்களையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பத்திபாலியாவில் உள்ள குழந்தை இயேசுவின் புனித தெரசா பங்குஆலயத்திலிருந்து வந்திருந்த திருப்பயணிகளையும், அவேர்சாவில் உள்ள மத்தேயு நிறுவனத்தைச் சார்ந்த மாணவர்களையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் எதிர்காலத்திற்கான தன்னம்பிக்கையைத் தரும் வில்லாசாந்தாவின் நம்பிக்கையின் நண்பர்கள்", அறக்கட்டளையின் 70வது ஆண்டு நிறைவையொட்டி அதன் உறுப்பினர்கள், "உரோம் வங்கியின் ஓய்வூதியம் பெறுவோர்" என பல சங்கங்களின் உறுப்பினர்களையும் குவாஸ்தல்லாவின் பிரண்ட்ஸ் ஆஃப் தி டே ஹாஸ்பிடல் ஆன்காலஜி" அன்புடன் நினைவுகூர்ந்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேலில் நடந்து கொண்டிருக்கும் போரினை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள் போரினால் பாதிக்கப்படும் காசா மக்கள் சிறார் பெரியோர் அனைவரும் பாதுகாக்கபப்ட வேண்டும் என்றும், போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ தொடர்ந்து செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். போர் என்பது பிரச்சனைகளுக்குத் தீர்வல்ல மாறாக மரணத்தை அழிவை விதைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், போர் எதிர்காலத்தை அழிக்கின்றது என்றும், அமைதி மற்றும் செபத்தின் வழியாக மட்டுமே இந்தபோர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் எடுத்துரைத்தார். எனவே உலக அமைதிக்காக வருகின்ற அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை செபம் மற்றும் உண்ணா நோன்பிற்கான நாளாக அனுசரிக்கக் கேட்டுக்கொண்டார். வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உரோம் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு அமைதிக்காக ஒரு மணி நேர செப வழிபாடு நடைபெற இருப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செயல்வழியாக உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவ மக்கள் மற்றும், போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரின் அமைதிக்காக செபிக்க உள்ளதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறுதியாக, இளைஞர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை செபத்தின் வழியாக கடவுளுடன் மிக ஒன்றிப்புடன் இருப்பது எப்படி என்பதை நாம் அறிந்தால், அவருடைய கைகளில் நம்மை முழுமையாக ஒப்படைக்க தயாராக இருந்தால் மட்டுமே திருஅவையின் பணி சாத்தியமாகும் என்பதனை புனித லூக்காவின் திருநாளும் அவரது நற்செய்தியும் நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறினார்.
மேலும் சகோதர சகோதரிகளே, உலகில், குறிப்பாக துன்புறுத்தப்பட்ட உக்ரைனில் அமைதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாறு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்