லெசோத்தோ மன்னர் 3-ஆம் லெட்ஸியை சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அக்டோபர் 18 இப்புதன்கிழமை காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கிலுள்ள ஒரு சிறிய சந்திப்பு அறையில் லெசோத்தோ நாட்டின் மன்னர் மூன்றாம் லெட்ஸியை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, மன்னர் மூன்றாம் லெட்ஸி, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்தார் என்றும், உள்ளன்புடன் கூடிய இச்சந்திப்பின்போது, திருப்பீடத்திற்கும், லெசோதோ அரசிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்து உரையாடியதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் தெரிவிக்கின்றது.
மேலும் இச்சந்திப்பின்போது லெசோத்தோவில் உள்ள தலத்திருஅவையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் எடுத்துரைத்து மகிழ்ந்தனர் என்றும், இறுதியாக, பொதுவான ஆர்வமுள்ள அனைத்துலகப் பிரச்சனைகள், குறிப்பாக உக்ரைன் மற்றும் புனித பூமியில் நடைபெற்றுவரும் மோதல்கள் அத்துடன் தென்னாப்பிரிக்கப் பகுதியில் நிலவி வரும் அரசியல், காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என்றும் திருப்பீடச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
லெசோத்தோ என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள்படுகிறது. இந்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 2,031,348 ஆகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்