தேடுதல்

தந்தையின் இரு புதல்வர்கள் – திருத்தந்தை

பாவம் செய்தவருக்கு எப்போதும் மீட்பின் நம்பிக்கை உண்டு; ஆனால் ஊழல் செய்பவர்களுக்கு இது மிகவும் கடினம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது பொய்யான ஆம் என்ற வார்த்தைகளால் தந்தைக் கடவுளுக்கு அவமரியாதை செய்கின்றோம் என்றும், தந்தையின் விருப்பப்படி நம் வாழ்வை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளும் "ஆம்" என்று சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்றைய நாளின் வாசகமான இரு புதல்வர்கள் உவமை குறித்து எடுத்துரைத்து மூத்த மகன், இளைய மகன் இருவரில் நமது வாழ்வு யாரைப்போல இருக்கின்றது என்று சிந்திக்க அழைப்புவிடுத்தார்.

திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வதற்கு அதிக அளவில் தியாகம் தேவை என்றும், அத்தியாகமானது தானாக வருவதில்லை, நாம் அவரின் பிள்ளைகள் வாரிசுகள் என்று தெரிந்தாலும் வருவதில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், திராட்சைத் தோட்டத்திற்கு செல்வதல்ல மாறாக தந்தைக்கு முன் நேர்மையாக நம்மைப் பற்றி எடுத்துரைப்பதே முக்கியம் என்றும் வலியுறுத்தினார். 

நான் போகிறேன் ஐயா என்று கூறியமூத்த மகன்

தந்தையின் வார்த்தைகளுக்கு ஆம் என்று சொன்ன மூத்த மகன் அவர் சொன்னது போல செல்லவில்லை, அதைப்பற்றிய தனது விருப்பத்தைத் தந்தையிடம் விவாதிக்கவோ, பேசவோ விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவரது போலியான முகம், சோம்பேறித்தனம், ஆம் என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப்பட்டது என்றும் எடுத்துரைத்தார்.

மறைக்கப்பட்ட அவரது உண்மையான முகம், அப்போதைக்கு அவரைக் காப்பாற்றுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய அவரது செயல் தந்தையை மோசமாக அவமரியாதை செய்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

நேர்மையான உரையாடலையோ, மோதலையோ ஏற்காமல், தன் கீழ்ப்படியாமையை மறைக்கவும், பிரச்சனைகள் எதுவும் செய்யாமல் பொய் சொல்வதால், பாவம் செய்தவனாக மட்டுமன்று ஊழல்வாதியாகவும் மூத்த மகன் மாறுகின்றார் என்று கூறினார் திருத்தந்தை.

என்னால் போக முடியாது என்று கூறிய இரண்டாவது மகன்

தந்தையின் வார்த்தைகளுக்கு முடியாது என்று சொல்லிவிட்டு, அதற்குப் பதிலாக, நேர்மையானவனாக நடக்கும் இரண்டாவது மகன், தனது தயக்கத்தை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்துகிறார் என்றும் தனது செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்று வெளிப்படையாக செயல்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடிப்படையான நேர்மையுடன், அவர் தன்னைத்தானே கேள்விக்கு உட்படுத்துகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் தவறு செய்ததை புரிந்துகொண்டு அதனை மாற்றுகின்றார் என்றும், தந்தையின் குரலுக்கு இல்லை என்று பதிலளித்ததால் அவரை பாவி என்று கூறலாம் ஆனால் ஊழல் செய்பவர் என்று கூற முடியாது என்றும் கூறினார்.

பாவம் செய்தவருக்கு எப்போதும் மீட்பின் நம்பிக்கை உண்டு; ஆனால் ஊழல் செய்பவர்களுக்கு இது மிகவும் கடினம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூத்த மகனின் பொய்யான "ஆம்", அவரது நேர்த்தியான ஆனால் மூடி மறைக்கப்பட்ட, போலியான தோற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களாக மாறி அவரை ஒரு "ரப்பர் சுவர்" போன்று மாற்றிவிட்டது என்றும் கூறினார்.

நேர்மையான மற்றும் தாராளமான வாழ்க்கை வாழ, தந்தையின் விருப்பப்படி நம்மை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளும் "ஆம்" என்று சொல்லத் தயாராக இருக்கின்றோமா? நம்மால் அதைச் செய்ய முடியாதபோது, நம் கஷ்டங்கள், வீழ்ச்சிகள், பலவீனம் ஆகியவற்றைப் பற்றி கடவுளை எதிர்கொள்வதில் நாம் நேர்மையாக இருக்கின்றோமா? நாம் தவறு செய்யும் போது, மனந்திரும்பி, அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோமா? அல்லது எதுவும் நடக்கவில்லை என்று முகமூடி அணிந்து வாழ்கின்றோமா? என்று சிந்திக்க திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2023, 12:45