தேடுதல்

நாமும், நமது வாழ்வும் இறைவன் தந்த கொடை

மனித வாழ்வின் மிக முக்கியமான இரகசியமான மூன்று வார்த்தைகள் நன்றி, அனுமதி, மன்னிப்பு. இவை மூன்றும் மிகச்சிறிய வார்த்தைகளாக இருந்தாலும், நமது வாழ்வில் அதிக பலன் கொடுப்பவை

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது வாழ்வில் நாம் பெறும் நன்மை, கடவுளின் அருளால், அவருடைய கொடையிலிருந்து வருகின்றது என்பதை மறந்து வாழும்போது, கடவுளின் அன்பு மற்றும் மீட்பு நமக்குத் தேவையில்லை என்ற மாயையில் வாழ்கின்றோம் என்றும், நமது சொந்த நிலைமை மற்றும் வரம்புகளால் நாம் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தவறாக உணர்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 8 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றி, அனுமதி, மன்னிப்பு என்னும் மூன்று சிறிய வார்த்தைகளை நமது வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகமான திராட்சைத்தோட்ட உரிமையாளர் உவமை குறித்து திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உரிமையாளர் அன்புடன் அனைத்து செயல்களையும் செய்தவர் என்றும், குத்தகைக்காரர்கள் அதிக பொருள் சேர்க்கும் பேராசை எண்ணமுடையவர்களாக இருந்தார்கள் என்றும் எடுத்துரைத்தார்.   

இத்தகைய குத்தகைக்காரர்களைப் போல நாமும் பல நேரங்களில் நம்மை இறைவன் அன்பு செய்வதை மறந்து பேராசையின் கைதிகளாகவும் மற்றவர்களை விட அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை விட தனித்து இருக்க விரும்பும் இத்தகைய நிலை மிகவும் மோசமானது என்றும் அதிலிருந்து மீள சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மனக்கசப்பால் சூழப்பட்டு வன்முறையின் சூழலில் வாடும்போது, அதிருப்தி, பழிவாங்கல், தவறான புரிதல், பொறாமை ஆகியவை நம் மனதில் ஏற்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய சூழலில் நன்றியுணர்வை நாம் நமக்குள் ஏற்படுத்திக் கொண்டு வாழும்போது, அந்த நன்றி உணர்வு நமக்கு அமைதியைத் தருகின்றது என்றும் எடுத்துரைத்தார்.  

மேலும், என் வாழ்வையும் நம்பிக்கையையும் நான் ஒரு கொடையாக பெற்றுள்ளேன் என்று நம்புகின்றேனா.? நானே ஒரு கொடை என்பதை உணர்கின்றேனா? எந்தத் தகுதியும் இல்லாத என்னை இறைவன் தகுதிப்படுத்தினார் என்பதை உணர்கின்றேனா என்பன போன்ற கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ள அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வாழ்வின் இரகசியமான மூன்று வார்த்தைகள் நன்றி, அனுமதி, மன்னிப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை மூன்றும் மிகச்சிறிய வார்த்தைகளாக இருந்தாலும், நமது வாழ்வில் அதிக பலன் கொடுப்பவை என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2023, 13:08