உலக அமைதிக்கான செப மற்றும் உண்ணா நோன்பு நாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தற்போது இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிக்கு வரவும், உலக அமைதிக்காகவும், அக்டோபர் 27, இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் அழைப்பின்பேரில் செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என 2013ஆம் ஆண்டு, தான் திருத்தந்தையாக பொறுப்பேற்றதிலிருந்தே கடந்த 10 ஆண்டுகளாக அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பிற்கு அடிக்கடி அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலை இத்தாலி நேரம் 6 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு அமைதிக்கான செபவழிபாட்டை நடத்துகிறார்.
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற உள்ள இந்த செபவழிபாட்டிலும், அந்நாளின் அமைதிக்கான உண்ணாநோன்பிலும், கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவரல்லாதவர்களும் உடன்பிறந்த உணர்வுடன்கூடிய செபத்துடன் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையை வழிநடத்தும் தலைமைப் பதவிக்கு பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டிலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவின் அமைதிக்காக செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியை அறிவித்தது குறிப்பிடும்படியானது.
அந்த நாட்களில்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம் ஆயுதங்களை குறைபாடற்ற ஒன்றாக மேனிலைப்படுத்தியுள்ளோம், அதேவேளை நம் மனச்சான்றை தூங்கவைத்துள்ளோம் எனக் கூறியிருந்தார்.
தென் சூடான் மற்றும் காங்கோ குடியரசின் அமைதிக்காக செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளை 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி 23ஆம் தேதி தவக்காலத்தின் முதல் வெள்ளியன்று நடத்தியதும், குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இலெபனானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கத்தில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதியை செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கன.
ஆப்கான் நாட்டு மக்களுக்காக உண்ண நோன்பு மற்றும் செபம் மூலம் உதவ வேண்டும் என 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஞாயிறு மூவேளை செபவுரை வேளையில் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி உக்ரைன் அமைதிக்காக செப மற்றும் உண்ணாநோன்பை கடைபிடிக்க வலியுறுத்தியதையும் இங்கு குறிப்பிடலாம்.
இவைகளின் அடுத்தபடியாக தற்போது, அக்டோபர் 27ஆம் தேதியை இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனிய அமைதிக்காக உண்ண நோன்பு மற்றும் செபத்தின் நாளாக கடைப்பிடிக்க அழைப்புவிடுத்து, அந்நாள் மாலையில் அமைதிக்கன செபவழிபாட்டை நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்