வழிப்போக்கர்களுக்கு நாம் அண்டை வீட்டாராவோம்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
வியாழன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் அவலநிலையை நினைவுகூரவும், அவர்களைக் காப்பாற்றவும், அவர்களின் காயங்களைக் குணப்படுத்தவும், சகோதரத்துவம் மற்றும் அமைதியால் குறிக்கப்பட்ட சிறந்த உலகத்தை உருவாக்க சமூகத்திற்கு பங்களிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
கேமரூன், உக்ரைன் மற்றும் எல் சால்வதோர் ஆகிய நாட்டு அகதிகளின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செபவழிபாடு புனித பேதுரு சதுக்கத்தில் உள்ள அறியப்படாத காவல் தூதர்கள் நினைவுச்சின்னத்தின் முன்பாக நடைபெற்றது, இது வெவ்வேறு கலாச்சார மற்றும் இன பின்னணியில், பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளான மக்கள் குழுவை சித்தரிக்கும் வெண்கலம் மற்றும் களிமண்ணில் உருவாக்கப்பட்ட சிற்பம் என்பது குறிப்படத்தக்கது.
லூக்கா நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட நல்ல சமாரியன் உவமையிலிருந்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, மூடிய உலகத்திலிருந்து திறந்த உலகத்திற்கு, போரில் இருந்து அமைதியான உலகத்திற்கு எப்படி செல்வது என்பதை இந்த உவமை காட்டுவதாக கூறினார் திருத்தந்தை.
அன்று ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோவிற்கு பயணிக்கும் ஆபத்துக்கள் போலவே இன்றும் பாலைவனங்கள், காடுகள் மற்றும் கடல்கள் வழியாக பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற இடம்பெயர்வு பாதைகள் உள்ளதாக குறிப்பிட்ட திருத்தந்தை, கடத்தல், சுரண்டல், சித்திரவதை மற்றும் கற்பழிப்பு போன்று புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் ஏராளம், தங்கள் இலக்கை அடைவதற்கு முன்பு பலர் உயிரையும் இழக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சாலையோரத்தில் படுத்திருந்த மனிதனைப் பார்த்து பரிதாபப்பட்ட சமாரியரின் சான்று வாழ்வை நினைவுகூர்ந்த திருத்தந்தை, காயமடைந்தவரைக் கண்டு அவர் மீது இரக்கம் கொண்ட நல்ல சமாரியரைப் போலவே, அனைத்து வழிப்போக்கர்களின் உயிரைக் காப்பாற்றவும், அவர்களின் காயங்களைக் குணப்படுத்தவும், வலியை ஆற்றவும் அண்டை வீட்டாராக இருக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றார்.
நல்ல சமாரியரின் நடவடிக்கைகள் எளிய தொண்டுக்கு அப்பாற்பட்ட அவரது சேவையைக் குறிக்கும் வரவேற்றல், பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு வினைச்சொற்களைக் உள்ளடக்கியதாகும் என்று மேலும் கூறினார் திருத்தந்தை.
இறுதியில், வெவ்வேறு புலம்பெயர்ந்த வழிகளில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்