தேடுதல்

சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி உறவுகளை கட்டியெழுப்ப..

சார்லஸ் டி ஃப்ரோபின் ஜான்சன்,, சீனாவில் கைவிடப்பட்ட பல சிறார்கள் பசியால் இறந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களின் மீட்புக்கான அக்கறையுடன் 1843 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பணிமையத்தை நிறுவினார்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

குழந்தைகள் குழந்தைகளுக்காக செபிக்கின்றார்கள், உதவுகின்றார்கள், நற்செய்தி அறிவிக்கின்றார்கள் என்றும், குழந்தைகளுக்கான திருப்பீடப் பணி மையம் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி உறவுகளை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் குழந்தைகளுக்கான திருப்பீட பணிமையத்தின் 180 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளை தனது சிறப்பு ஒத்துழைப்பாளர்களாகக் கருதுவதாகவும் எடுத்துரைத்தார்.

மறைப்போதகரான சார்லஸ் டி ஃப்ரோபின் ஜான்சன் அவர்களால் நிறுவப்பட்ட குழந்தைகளுக்கான திருப்பீட பணிமையம், 180 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இயங்குகின்றது என்றும், இயேசுவின் உண்மையான சீடர்களாக, மற்றவர்களின் மீட்பில் அக்கறை கொண்டு, அவருடைய இதயத்தைப் போன்று தங்களது இதயம் மாற தீவிரமாக அனைவரும் உழைக்கவேண்டும் என்றும் அழைப்பு  விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறந்த மறைபோதகரான சார்லஸ் டி ஃப்ரோபின் ஜான்சன் அவர்கள், பிரெஞ்சு திருப்பணியாளர்களின் கடிதங்கள் வழியாக, சீனாவில் கைவிடப்பட்ட பல சிறார்கள் பசியால் இறந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களின் மீட்ப்புக்கான மிகுந்த அக்கறையுடன 1843 இல் இந்த பணிமையத்தை நிறுவினார்.

புனித குழந்தை தெரேசாவின் வழிகாட்டுதல்

இந்த ஆண்டு,  குழந்தைகளுக்கான திருப்பீட பணிமையத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த உறுப்பினர் புனித குழந்தை தெரேசாவின் 150 வது ஆண்டு பிறப்பின் நிறைவைக் குறிக்கிறது. ஏழு வயதிலிருந்தே திருப்பணிகளின் பாதுகாவலராக பதிவுசெய்யப்பட்ட புனித குழந்தை தெரசாவினுடைய வழிபாட்டு நினைவை அக்டோபர் 1 ஆம் தேதி  கொண்டாடும் வேளையில், சிறியவர்களாக இருந்தாலும் நம்முடைய செபத்தால், இயேசுவை அறியவும் அன்பு செய்யவும், அமைதியாக, மற்றவர்களுக்கு உதவலாம் என்ற விலைமதிப்பற்ற செய்தியை புனித குழந்தை தெரசா நமக்குக் கற்பித்துள்ளதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

அர்ப்பணிப்புடன் நற்செய்தியின் துணிவுள்ள சாட்சிகளாக இருக்கவும், , தங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வலியுறுத்திய திருத்தந்தை, குழந்தைகளுக்கான திருப்பீட பணிமையத்தின் ஆன்மிகத்தை மேம்படுத்தி, அவர்களை வழிநடத்தும் தலைவர்கள், பெற்றோர், மறைப்பரப்பு குழந்தைகள் மற்றும் இளையோர்க்கு தனது நன்றியினைக் கூறினார்.

திருத்தந்தையின் சிறந்த ஒத்துழைப்பாளர்கள் குழந்தைகள்

குழந்தைகளுக்கான திருப்பீட பணிமையம் கத்தோலிக்க திருஅவை மற்றும் திருத்தந்தையின் உலகளாவிய பணி என்றும், குழந்தைகளை ஒத்துழைப்பாளர்களாக கருதுவதாகவும்,. இத்தகுதி முக்கியமான அர்ப்பணிப்பை நினைவூட்டுவதாகவும், கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி உறவுகளை கட்டியெழுப்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.

புனித குழந்தை தெரசாவின் சிறிய பாதையைப் பின்பற்றி, சார்லஸ் டி ஃபோர்பின் ஜான்சன் விட்டுச் சென்ற அவர்களின் பணியை தொடரவும்  அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2023, 12:54