கடவுளின் கனவுகளோடு உங்கள் கனவுகளை ஒப்பிடுங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் கொண்டிருக்கும் பெரிய கனவுகளை நாமும் கொண்டிருப்பது முக்கியம் என்றும், நம் கனவுச்சுடர்களை அணைக்காது தூண்டிவிடும் பெரியவர்களைச் சந்திப்பது அக்கனவுகளை நனவாக்க உதவுகிறது என்றும், நம் கனவுகளை எப்போதும் கடவுளின் கனவுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய நாள்களில் வடஇத்தாலியின் மிலானில் உள்ள புனித கார்லோ கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடுமையான சமூக மற்றும் காலநிலை நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் சேர்ந்து, உலகை மாற்றுவதற்கு எவ்வாறு பங்களிப்பது பற்றி சிந்தித்து செயலாற்றிகொண்டிருக்கும் மாணவர்களின் கனவு நனவாகும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
சிறந்த ஆற்றல்களையும், பயன்படுத்த வேண்டிய திறமைகளையும் வெளிப்படுத்த இயேசு மனிதனை உள்ளிருந்து மாற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது வளர்ச்சியை மனதில் வைத்து முழு நம்பிக்கையுடன் இயேசுவைப் பின்தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நமது வளர்ச்சி என்பது மற்றவர்களை விட நம்மை உயர்வாகக் கருதுவதில் அல்ல, மாறாக மற்றவர்களுக்கானப் பணியில் நம்மைத் தாழ்த்துவதே நமது உண்மையான வளர்ச்சி என்றுக் கருதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னைத் தாழ்த்துபவர் பெரியவர்
பிறரது சுமைகளை சுமக்கத் தெரிந்தவர், தன்னையேத் தாழ்த்துபவர், மென்மை என்னும் உண்மையான ஆற்றல் கொண்டவர் தான் உண்மையிலேயே பெரியவர் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் ஐம்புலன்களையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நம்மை முன்னிலைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்றாலும், எதார்த்தம் என்பது சிந்தனை, திறந்த தன்மை, கவனம், இரக்கம் அனைத்தையும் விட உயர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதார்த்தமான மனநிலைக்குத் தேவைப்படும் ஒருங்கிணைந்த "உணர்திறனை" ஞானமுள்ள தலைவர்கள் "ஆன்மிக உணர்வுகள்" என்று அழைப்பதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், மனோதத்துவமானது நமது ஆன்மிக உணர்வுகளை ஒளிரச் செய்து பலப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பதால் மனிதனின் அனைத்து பரிமாணங்களிலும், திருவிவிலியம் நமக்கு வெளிப்படுத்துகின்றபடி வாழ வேண்டும் என்றும், இயேசு கிறிஸ்துவைப்போல திறந்த மற்றும் ஒருங்கிணைந்த முழுமையின் பார்வையைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர்களுக்கு விளக்கியுள்ளார் திருத்தந்தை.
பள்ளி வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! அவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உலகெங்கிலும் உள்ள பல சிறார் படிக்க கூட வாய்ப்பு இல்லாது இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்து அவர்களுக்காகப் பணியாற்றுங்கள், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்றும் அதன் பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மேலும், கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை அனைவருக்கும் அறிவித்தல், அவரை அன்பு செய்தல், போற்றுதல் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்