காலநிலை நெருக்கடிக்கு பதிலுரைக்க விடும் அழைப்பே Laudate Deum
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2015ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சுற்றுச்சூழல் அக்கறைக் குறித்து வெளியிடப்பட்ட Laudato si' சுற்றுமடலின் இரண்டாம் பகுதியாக Laudate Deum என்ற சுற்றுமடல் அக்டோபர் 4 புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.
சுற்றுச்சூழல் பிரச்சனையைப் பொறுத்தவரையில் நாம் போதிய அளவு அக்கறைக் காட்டுவதில்லை, உலகம் வெப்பமாகிவருவதற்கு மனித செயல்பாடுகள் முக்கிய பங்குவகிக்கின்றன, நம் பொது இல்லமாகிய இவ்வுலகின் மீது அக்கறைக் குறித்த அர்ப்பணம் நம் கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பிறக்க வேண்டும் என்பவை, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான புதன்கிழமையன்று திருத்தந்தையால் வெளியிடப்பட்ட சுற்றுமடலில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கடவுளை தன் வாழ்விலிருந்து விலக்கி வாழும் மனிதன் தனக்கே பெரும் ஆபத்தைக் கொணர்கிறான் என்ற வார்த்தைகளுடன் நிறைவுறும் இந்த ஏடு, கடவுளைப் புகழ்வோம் என்ற பெயருடன் 6 பிரிவுகளைக் கொண்டு 73 பத்திகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
இரண்டு மாதங்களில் துபாயில் இடம்பெற உள்ள, காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கும் COP28 கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறும் வல்லுனர்கள், மனித குலத்தின் காரணமாக உருவாகியுள்ள கால நிலை மாற்ற தீய விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே என்பதையும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.
இன்றையக் காலக்கட்டத்தில் நாம் காலநிலை மாற்ற தீய விளைவுகள் குறித்து ஏற்க மறுத்தாலும், அதன் விளைவுகள் நேரடியாக, வெளிப்படையாகத் தெரிகின்றன எனக்கூறும் திருத்தந்தையின் சுற்றுமடலின் முதல் பிரிவு, உலகம் வெப்பமாகிவருவதைப் பார்க்கும்போது பெரும்பாலும் இன்னும் சில ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் கால நிலைமாற்றத்தின் காரணமாக தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது.
பணக்கார நாடுகள் பெருமளவான மாசுக்கேட்டிற்கு காரணமாக இருக்க அதன் தீய விளைவுகளை அனுபவிப்பவர்களாக ஏழைகள் உள்ளார்கள் என்ற கவலையையும் வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகம் என்பது சுரண்டப்படுவதற்கென படைக்கப்பட்டதல்ல, நாமும் உலகின் மற்றும் சுற்றுச்சூழலின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயலாற்றவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
உண்மையான அதிகாரம் குறித்த ஒழுக்கரீதிக் கோட்பாடுகள், இன்றைய உலகில் விளம்பரங்கள் மற்றும் பொய்த் தகவல்களால் திரையிட்டு மறைக்கப்படுகின்றன என்ற கவலையையும் இவ்வேட்டில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துலகக் கொள்கைகளின் பலவீனம், பலமுடையோரை பாதுகாத்து பலவீனர்களைக் கைவிடும் நிறுவனங்கள் போன்றவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம்பெற வேண்டும் என விண்ணப்பிக்கும் திருத்தந்தை, பொருளாதர இலாபங்களுக்காக சுற்றுச்சூழல் விவகாரங்களைத் தியாகம் செய்யும் நிலையையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஒருவர் ஒருவர் மீதான அக்கறையுடன் சுற்றுச்சூழல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாம் முயலவேண்டும் எனக்கூறும் திருத்தந்தை, இது கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பிறக்கும் அர்ப்பணமாக இருக்க வேண்டும் எனவும் கிறிஸ்தவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்