தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றம் கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பம்

அக்டோபர் 4 புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இந்திய இலங்கை நேரம பகல் 12.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் துவக்கமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியானது நடைபெறுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

“ஒருங்கிணைந்த பயணம் என்பதே, திருஅவையின் வாழ்வுமுறை. “மாமன்றம்” என்ற சொல்லின் உட்பொருளான, “ஒன்றிணைந்து பயணித்தல்” என்பது அதனைத் தெளிவாகச் சொல்கிறது. இப்பயணம், தூய ஆவியாருக்குப் பணிந்து நடப்பதால் கிடைக்கும் கனியாகும். இப்பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது” எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுப்படி அக்டோபர் 4 புதன்கிழமை உலக ஆயர்கள் மாமன்றமானது திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்றக் கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பமானது.

16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகள், உலக அளவில் 2021ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதியிலிருந்து 2023ம் ஆண்டு அக்டோபர் வரை நடைபெற்று வந்தது. 2022ம் ஆண்டு ஏப்ரல் வரை மறைமாவட்ட அளவிலும், 2022ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து, 2023ம் ஆண்டு மார்ச் வரை கண்டங்கள் அளவிலும் இத்தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன. உலகளாவியத் திருஅவையின் இறுதிக்கட்ட பணிகள், 2023ம் ஆண்டு அக்டோபர் 4 புதன்கிழமை துவங்கி அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகின்றன.  

தெளிந்துதேர்தலின் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், இரண்டாவது கூட்டத்தொடர் 2024ஆம் ஆண்டு அக்டோபரிலும் இடம்பெறும் என்று திருத்தந்தை அறிவித்தார்.

இத்தீர்மானம், ஒருங்கிணைந்து பயணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும், மற்றும் நற்செய்தியின் மகிழ்வுக்குச் சான்றுபகரும் சகோதரர் சகோதரிகளின் ஒன்றிணைந்த பயணமாக அனைவரும் வாழ்வதற்கு உதவும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

அக்டோபர் 4 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட கர்தினால்கள் 120 பேரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியினை நிறைவேற்றினர். அவர்களோடு கர்தினால்கள் அவை உறுப்பினர்கள் 320 பேர், உலக ஆயர் மாமன்றத்தின் உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொது நிலையினர் பலரும் கலந்து கொண்டனர்.

உரோம் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் ஒருங்கிணைந்து செபமாலையை செபித்தனர். அதன்பின் புனிதர்கள் மன்றாட்டானது பாடப்பட கூட்டுத்திருப்பலி நிறைவேற்ற புதிய கர்தினால்கள் மற்றும் கர்தினால்கள் அவை உறுப்பினர்கள் திருப்பலி பீடத்தை நோக்கிப் பவனியாக வந்தனர். வருகைப் பாடலைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் மொழியில் திருப்பலியினைத் துவக்கினார்.

அக்டோபர் 4 இயற்கையின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவையும் அவரது பெயரைத் தனது பெயராகக் கொண்டு சிறப்புடன் பணியாற்றும் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர்கொண்ட திருநாளையும் திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில் இந்த 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றமானது ஆரம்பமாவது மிகச் சிறப்பாகத் திகழ்கின்றது. திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டது.

முதல் வாசகம் கலாத்தியர் 6 14-18

நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில், என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

அதனைத் தொடர்ந்து திருப்பாடல் 16 இல் உள்ள ஆண்டவரே ‛நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்ற திருப்பாடலான சிஸ்டைன் சிற்றாலய பாடகர் குழுவினரால் இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. அல்லேலுயா வாழ்த்தொலிக்குப் பின் திருத்தொண்ட ஒருவர் நற்செய்தி வாசகத்தை இலத்தீன் மொழியில் வாசித்தார்.

மத்தேயு 11: 25-30

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார். மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

நற்செய்தி வாசகம் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை தனது மறையுரையினை ஆற்றத்தொடங்கினார். திருத்தந்தையின் மறையுரைக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

திருத்தந்தையின் திருப்பலி மறையுரை

ஜான் போஸ்கோ – வத்திக்கான்

அன்பார்ந்தவர்களே,

நாம் இப்பொழுது கேட்ட நற்செய்தி பகுதியின் முற்பகுதியானது இயேசுவின் பணியிலிருந்த ஒரு கடினமான தருணத்தைப் பற்றி விவரிக்கின்றது. இதை நாம் மேய்ப்புப்பணியின் விரக்திநிலை என அழைக்கலாம். திருமுழுக்கு யோவான் இயேசு உண்மையில் மெசியாதானா என்று சந்தேகப்படுகிறார். ஏனெனில் இயேசு கடந்து வந்த பல நகரங்களில் இருந்த மக்கள், அற்புதங்கள் பலவற்றை அவர் நிகழ்த்தியிருந்தபோதும், மனம் மாறவில்லை. மாறாக அவரை போஜனப்பிரியன், குடிகாரன் என்று குற்றம் சாட்டினார்கள். அதேவேளையில் திருமுழுக்கு யோவான் மிகவும் கண்டிப்பானவராக இருந்ததால் அவரைப்பற்றி புகார் செய்தனர். இதனால் இயேசு சோகம் மற்றும் வருத்தம் தன்னை வென்றுவிட விடவில்லை மாறாக விண்ணகத்தைநோக்கி தன் கண்களை உயர்த்தி இறையரசின் மறைபொருளை எளியவர்களுக்கு வெளிப்படுத்தியதற்காக தந்தையை புகழ்கின்றார்: தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். (மத் 11:25). விரக்கதியின் தருணத்திலும் இயேசு அதனை கடந்து பார்க்கக்கூடிய பார்வையைக் கொண்டிருக்கிறார்: அவர் தந்தையின் ஞானத்தைப் புகழ்கின்றார், மறைவாக வளரும் நன்மை, எளியவர்களால் வரவேற்கப்படும் வார்த்தையின் விதை, இரவிலும் வழிகாட்டும் இறையரசின் ஒளி ஆகியவற்றை தெளிந்து தேர்ந்திடும் ஆற்றலை கொண்டிருந்தார்.

அன்பார்ந்த சகோதர கர்தினால்களே, சகோதர ஆயர்களே, அருள்சகோதரிகளே, அருள்சகோதரர்களே, நாம் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்கத்தில் இருக்கின்றோம். மனித யுத்திகள், அரசியில் கணக்கீடுகள், கருத்தியல் போராட்டங்கள் ஆகியவற்றால் ஆன முற்றிலும் இயற்கையான பார்வை இங்கு நமக்குத் தேவையில்லை. நாடாளுமன்றக் கூட்டத்தையோ சீர்திருத்தத் திட்டத்தையோ நடத்த நாம் இங்கு வரவில்லை. தந்தையை புகழ்கின்ற, சோர்ந்துபோய் களைப்படைந்து ஒடுக்கப்பட்டுள்ளவர்களை வரவேற்கின்ற இயேசுவின் பார்வையுடன் சேர்ந்து நடக்க நாம் இங்கே இருக்கின்றோம். எனவே ஆசீர்அளிக்கும் மற்றும் வரவேற்கும் இயேசுவின் பார்வையிலிருந்து நமது பயணத்தைத் தொடங்குவோம்.

1.இயேசுவின்ஆசீர்அளிக்கும் பார்வை.

நிராகரிப்பை அனுபவித்திருந்தாலும், தன்னைச் சுற்றி கடினமான இதயத்தினரைக் கண்டிருந்தாலும், கிறிஸ்து ஏமாற்றத்தின் சிறையில் தன்னை அடைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. மனம்கசப்படையவில்லை, தந்தையைப் புகழ்வதை நிறுத்தவில்லை. மாறாகத் தந்தையின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது இதயம் புயலிலும் அமைதியாக இருக்கிறது.

இந்த ஆசீர்அளிக்கும் இயேசுவின் பார்வை, மகிழ்ச்சியான இதயத்துடன் கடவுளுடைய செயலை சிந்தித்து நிகழ்காலத்தைப் பகுத்தறியும் ஒரு திருஅவையாக இருக்க நம்மை அழைக்கிறது. நமது காலத்தின் சில நேரங்களில் கொந்தளிப்பான அலைகளுக்கு மத்தியில், மனம் தளரவோ, கருத்தியல் குறுக்குவழிகளைத் தேடவோ, முன்கருத்துக்களுக்குப் பின்னால் தன்னை நிறுத்திக் கொள்ளவோ, வசதியான தீர்வுகளுக்கு அடிபணியவோ,  ஆணையிடவோ அனுமதிக்காது. இது திருஅவையின் ஆவிக்குரிய ஞானம், இது புனித 23ஆம் யோவான் அவர்களால் சுருக்கமாக இவ்வாறு கூறப்படுகின்றது: தந்தையிடமிருந்து பெறப்பட்ட உண்மையின் தூய பரம்பரையிலிருந்து திருஅவை ஒருபோதும் விலகக்கூடாது என்பது முதலில் அவசியம். ஆனால் அதே நேரத்தில் கத்தோலிக்க திருத்தூதருக்குப் புதிய வழிகளைத் திறந்துவிட, நவீன உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிலைமைகள் மற்றும் புதிய வாழ்க்கை வடிவங்களை எப்போதும் கவனிக்க வேண்டும். (இரண்டாவது வத்திக்கான் சங்கத்தின் புதிய தொடக்க உரை (11 அக்டோபர் 1962).

இயேசுவின் ஆசீர்வதிக்கும் பார்வை இன்றைய உலகின் சவால்களையும் பிரச்சனைகளையும் பிளவுபடுத்துகின்ற சர்ச்சைக்குரிய மனப்பான்மையுடன் அல்ல மாறாக எதிர்கொள்ளும் ஒரு திருஅவையாக இருக்க நம்மை அழைக்கின்றது. ஒன்றிப்புடன் இருக்கும் கடவுளை நோக்கி நமது கண்களைத் திருப்பி, ஆச்சர்யம் மற்றும் பணிவுடனும் அவரை ஒரே கடவுளாக அங்கீகரித்து, வணங்குகிறது. நாம் அவருக்குச் சொந்தமானவர்கள், அவரை உலகிற்குக் கொண்டுவருவதற்காக மட்டுமே நாம் இருக்கிறோம் என்பதனை நினைவில் கொள்வோம். திருத்தூதர் பவுல் நமக்குச் சொன்னதுபோல நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன் (கலாத்தியர் 6:14). இது நமக்கு போதுமானது. அவர் நமக்குப் போதுமானவர். இவ்வுலக பெருமையை நாம் விரும்பவில்லை. உலகத்தின் பார்வையில் நம்மை வசீகரமாக்கிக் கொள்ள நாம் விரும்பவில்லை. மாறாக நற்செய்தியின் ஆறுதலுடன் அதை அடைய விரும்புகின்றோம். கடவுளின் எல்லையற்ற அன்பிற்கு சிறந்த முறையில் அனைவருக்கும் சாட்சியளிக்க விரும்புகின்றோம். திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ஒரு மாமன்றத்தில் உரையாற்றும்போது, நமக்கான கேள்வியாக வைப்பதும் இதுதான்: இறைவன் பேசினார், அவர் உண்மையிலேயே பெரிய அமைதியை உடைத்து தன்னை வெளிப்படுத்தி நம்மோடு உரையாற்றினார். இந்த யதார்த்தத்தை இன்றைய மக்களுக்கு எப்படித் தெரிவிக்க முடியும்? அப்போதுதான் அது மீட்பாக மாறும்? (ஆயர் மாமன்ற சாதாரண பொதுச் சபையின் முதல் பொதுச் சபை, 8 அக்டோபர் 2012). இதுதான் அடிப்படையான கேள்வி. இது மாமன்றத்தின் முதன்மையான பணியாகும்: நம் பார்வையை கடவுள் மீது செலுத்துவது, மனித குலத்தை இரக்கத்துடன் பார்க்கும் ஒரு திருஅவையாக இருப்பது. ஓன்றுபட்ட சகோதரத்துவம் கொண்ட, கேட்பதற்கும், உரையாடுவதற்கும் ஒரு திருஅவையாக ஆசீர்வதித்து ஊக்குவிக்கும், கிறிஸ்துவை தேடுபவர்களுக்கு உதவும், அலட்சியமானவர்களை அன்புடன் தூண்டும், விசுவாசத்தின் அழகில் மக்களை ஈர்ப்பதற்காக பாதைகளைத் திறக்கும் ஓர் அவை. கடவுளை மையமாகக் கொண்ட ஒரு திருஅவை. எனவே நமக்கிடையில் பிளவுபடாது, வெளிப்புறத்தில் ஒருபோதும் கடுமையானதாக இல்லாத திருஅவையாக கிறிஸ்துவின் மணப்பெண்ணான திருஅவையாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

2. வரவேற்கும் கிறிஸ்துவின் பார்வை

ஆசீர்வதிக்கும் பார்வையைப் பற்றி சிந்தித்த பிறகு, இப்போது நாம் வரவேற்கும் கிறிஸ்துவின் பார்வை. தங்களை ஞானிகளாகக் கருதுகிறவர்கள் இறைவனுடைய உதவியை அங்கீகரிக்கத் தவறினாலும், இயேசு தந்தையில் மகிழ்ச்சியடைகிறார். ஏனென்றால் அவர் குழந்தைகளிடமும், எளியவர்களிடமும், ஏழைகளிடமும் ஆவியால் தன்னை வெளிப்படுத்துகிறார். இதன் விளைவாக அவர் தனது வாழ்நாள் முழுவதும் பலவீனமானவர்கள் துன்பப்படுபவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களை நோக்கி இந்த வரவேற்பு பார்வையை எடுக்கிறார். குறிப்பாக பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நாம் கேட்ட வார்த்தைகளை அவர் அவர்களுக்குச் சொல்கிறார். (மத் 11:28)

இயேசுவின் இந்த வரவேற்பு பார்வை நம்மை வரவேற்கும் திருஅவையாக இருக்க அழைக்கறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் புதிய கலாச்சாரத்தில் மேய்ப்புப்பணியில் பல சவால்கள் எழுகின்றன, அவை ஒருவருக்கொருவர் பயமின்றி சந்திக்க ஒரு அன்பான மனப்பான்மைக்கு அழைப்பு விடுக்கின்றன. மாமன்ற உரையாடலில் இறைவனுடைய மக்களாக நாம் ஒன்றாகச் செய்யும் இந்த அழகான தூய ஆவியின் பயணத்தில் நாம் கிறிஸ்துவுடன் ஒற்றுமையுடனும் நட்புடனும் வளர முடியும், இன்றைய சவால்களை அவரது பார்வையால் பார்க்க முடியும். புனித ஆறாம் பவுலின் ஒரு சிறந்த வெளிப்பாடைப் பயன்படுத்தி, தன்னை ஒரு உரையாடலாக மாற்றும் ஒரு திருஅவையாக மாற வேண்டும் என்கிறார். ஆம் என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது. (மத் 11:30) சுமைகளைத் திணிக்காமல் இருக்க அனைவருக்கும் திரும்பத் திரும்பச் சொல்கிறது: சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே, ஒடுக்கப்பட்டவர்களே வாருங்கள். உங்கள் வழியை இழந்த அல்லது தொலைதூரத்தில் உணரும் நீங்கள் வாருங்கள். நம்பிக்கையின் கதவுகளை மூடியிருப்பவர்களே திருஅவை உங்களுக்காக இங்கே இருக்கிறது.

3.சகோதர சகோதரிகளே தூய இறைவனுடைய மக்களே, வரவிருக்கும் துன்பங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இயேசுவின் ஆசீர்வாதமும் வரவேற்கும் பார்வையும் சில ஆபத்தான சோதனைகளில் விழுவதைத் தடுக்கிறது. உலகத்திற்கு எதிராக தன்னை ஆயுதபாணியாக்கி பின்னோக்கிப் பார்க்கும் ஒரு இறுக்கமான திருஅவை உலகின் நவநாகரீகங்களுக்கு அடிபணியும் ஒரு மந்தமான திருஅவை களைத்துப் போன திருஅவையாக இருந்ததால் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும்;.            

தாழ்மை, துடிப்பு மற்றும் மகிழ்ச்சிகொண்டு நாம் ஒன்றாக நடப்போம். ஏழ்மையையும் அமைதியையும் தந்தவரும், இயேசுவின் பாடுகளைத் தன் உடலில் சுமந்தவருமான புனித பிரான்சிஸ் அசிசியின் அடிச்சுவடுகளில் நடப்போம். புனித பொனவெந்தூர் செபித்துக் கொண்டிருந்தபோது சிலுவையில் அறையப்பட்ட இயேசு அவரிடம் என் ஆலயத்தை சரிசெய்யுங்கள் என்று கூறினார் இதை நமக்கு நினைவூட்டுவதற்கு மாமன்றம் உதவுகிறது. நம்முடைய தாயம் திருஅவை தூய்மைப்படுத்தப்பட வேண்டும். சரிசெய்யப்பட வேண்டும் ஏனென்றால் மன்னிக்கப்பட்ட பாவிகளாகிய நாம் இயேசு என்ற அடிப்படை ஆதாரத்திற்குத் திரும்பவும் அவருடைய நற்செய்தியால் அனைவரையும் சென்றடைய தூயஆவியின் பாதைகளில் நம்மை மீண்டும் ஈடுபடுத்தவும் நமது திரு அவையை தேவைப்படுகிறோம். புனித பிரான்சிஸ் அசிசியின் உலக சக்திகளுக்கு இடையில் நிறுவன மற்றும் மதவாத நீரோட்டங்களுக்கு இடையில் கிறிஸ்தவர்களுக்கு பிற விசவாசிகளுக்கும் இடையில் பெரும் போராட்டங்கள் மற்றும் பிளவுகள் இருந்த காலத்தில் யாரையும் விமர்ச்சிக்கவோ அல்லது திட்டவோ இல்லை. பணிவு ஒற்றுமை செபம் தானம் ஆகிய நற்செய்தியின் ஆயுதங்களை மட்டுமே அவர் கையில் எடுத்தார். நாமும் அவ்வாறே செய்வோம்!

உலகெங்கிலும் உள்ள தங்கள் மேய்ப்பர்களுடன் கடவுளுடைய தூய மக்கள் நாம் தொடங்கவிருக்கும் மாமன்றம் பற்றி எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் மற்றும் சில பயங்களைக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு அரசியல் கூட்டம் அல்ல மாறாக ஒரு பட்டமளிப்பு விழா என்பதை நாம் தொடர்ந்து நினைவில் கொள்வோம். ஒரு பாராளுமன்றம் அல்ல மாறாக கருணை மற்றும் ஒற்றுமையின் இடம். பரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் நமது கணிப்புகளையும் எதிர்மறைகளையும் மிஞ்சும் புதிய ஒன்றை உருவாக்க நம் எதிர்பார்ப்புகளை உடைக்கிறார். அவரிடம் நம்மைத் திறந்து முக்கிய பங்கு வகிக்கும் தூய ஆவியான அவரை அழைப்போம். அவரோடு நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் நடப்போம்.

இவ்வாறு தனது மறையுரையினை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ய அதனைத் தொடர்ந்து நம்பிக்கையாளர்கள் மன்றாட்டானது போலந்து, பிரெஞ்சு, சீனம், ஆங்கிலம், ஸ்வாகிலி ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன.

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள் அவை, உலக தலைவர்கள், உடல் மற்றும் மனதால் துன்புறுபவர்கள்,  உலக ஆயர்கள் மாமன்றம், என அனைவருக்காகவும் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்களானது எடுத்துரைக்கப்பட்டு செபிக்கப்பட்டது. திருப்பலிக்கானக் காணிக்கைப் பொருட்களானது உலக ஆயர்கள் மாமன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது. அதன்பின் கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் காணிக்கை பவனியைத் தொடர்ந்த நற்கருணை வழிபாட்டை வழிநடத்தினார். திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2023, 08:42