இயேசுவின் பெண்சீடர்களும் வாழ்வில் துன்பத்தை அனுபவித்தவர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசுவின் சீடர்களில் ஆண்களோடு கூட சில பெண்களும் சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகச்சரியானவர்களோ, திறமையானவர்களோ வானதூதர்களோ அல்ல மாறாக அவர்கள் அனைவரும் வாழ்வின் தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அத்தகையவர்கள் இயேசுவின் இரக்கம் மற்றும் மென்மையால் வரவேற்கப்பட்டு குணப்படுத்தப்பட்டவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 30 திங்கள் கிழமை வத்திக்கானில் அருள்பணி Luigi Ciotti அவர்களுடன் வந்திருந்த மாஃபியாவிலிருந்து வெளியேறிய பெண்கள் குழுவைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தில் நாம் காணும் மரிய மதலேனாள் மற்றும் பிற பெண் சீடர்கள் இயேசுவுடன் விடுதலைப் பாதையில் உடன்நடந்தவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.
உள்மன விடுதலை பெறுவது என்பது மந்திரத்தால் நடைபெறும் ஒன்று அல்ல, மாறாக இறைவனுடன் இணைந்து நடப்பதால் நமக்குக் கிடைப்பது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருடைய பாதைகள், வழிகள் மற்றும் சிலுவைகளின் வழியாக நாம் உயிர்ப்பின் பாதையில் வழிநடத்தப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
குற்றங்கள் பல புரியும் மாஃபியா குழுவில் பிறந்த அப்பெண்கள் அக்குழுவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது நல்ல தேர்வு என்று பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயம் குழப்பம் போன்ற தருணங்கள் இயல்பானது என்றும் அத்தகைய தருணங்களில் இறைவன் நம் பக்கத்தில் நடக்கின்றார் நாம் தனியாக இல்லை என்று உணரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்பெண்கள் குழுவிற்கு நற்செய்தி புத்தகம் ஒன்றினைப் பரிசளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதனை எப்போதும் கைகளில் பைகளில் வைத்திருந்து ஒரு நாளைக்கு ஒரு முறை சிறிய பகுதியை வாசித்து இறைவன் நம் உடன் நடக்கின்றார் என்பதை உணர்ந்து வாழும்படி வலியுறுத்தினார்.
இயேசு நம்மோடு நடக்கின்றார், அவரது சிலுவை நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றது அவருடைய உயிர்ப்பின் நம்பிக்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நற்செய்தி உங்களுக்கு நல்லது செய்யும் உங்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்