ஆசிய இளைஞர்களுடன் திருத்தந்தை நல்லிணக்கத்தின் சாட்சியாக இருங்கள்
ஜான் போஸ்கோ - வத்திக்கான்
நம் சமூகத்தில் சகோதர விரோத பாகுபாடு உருவாக காரணம், சமூக விழுமியங்களை சிந்தனைகளாகக் குறைப்பதே எனவும், பிரச்சனைகளுக்கு மத்தியில் கடவுள் எனக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்ற எண்ணத்தால் வலுப்படுத்தப்பட்ட சாட்சியாக இருக்க வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 26 செவ்வாய்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 3 மணியளவில் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் பன்னிரண்டு மாணவர்களுடன் இணைய வழியில் உரையாடிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன் அமெரிக்காவுக்கான திருத்தந்தையின் ஆணையம் மற்றும் சிகாகோ லெயோலா பல்கலைக்கழகத்தின் பாலங்களைக் கட்டுதல் எனும் முயற்சியின் மூன்றாவது இணையவழி கூட்டத்தில் சமய சுதந்திரம் மற்றும் சாட்சியவாழ்வு, கொடுமைப்படுத்துதல் இளைஞர்கள் தற்கொலைகள், சமூக வலைத்தளங்கள், ஊடகக் கல்வி ஆகியவைக்குறித்த ஒருங்கிணைந்த பயணம் சார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ள தெற்காசியாவில் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்களான இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த புளோரினா, நேபாளத்தைச் சேர்ந்த நைரா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த செரில் ஆகியோர், பிரிவினை மற்றும் அடிப்படைவாத சமூகங்களின் பாகுபாடு, பாரபட்சம் மற்றும் துன்புறுத்தல் குறித்தும், ஒரு சிறந்த எதிர்காலம் பற்றிய கனவு, தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சிரமம் மற்றும் விரக்தி ஆகியவற்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார்கள்.
அவர்களுக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்வதில் உங்கள் தந்தையர்களின் துணிவைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் ஆனால் உதவும் கரத்துடன் வாழ முடியும் என்று கனவு காணவேண்டும் என்றும், மன்னிப்பு, உதவும் கரங்கள், சாட்சிய வாழ்வு ஆகியவை அனைவரையும் வளர வைக்கிறது என்றும் கூறினார்.
தனது குடும்பத்துடன் ஐக்கிய அரசு அமீரகத்திற்கு குடிபெயர்ந்து அங்கு பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் பட்டம் பெற்று, தனது கலாச்சார மற்றும் மத அடையாளத்தை இழக்க நேரிடும் என்றும் அஞ்சும் ரோசிதாவுக்கு ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கான பதற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் தங்கள் வேர்களை மறக்காமல் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூக வலைத்தளங்கள், இளைஞர்களின் தற்கொலைகள் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்த பெங்களூர் வேதியியல் மாணவி மெரிலின் ரோஸிக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழகு இருக்கிறது. அதை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிந்தால் உள் மற்றும் வெளிப்புற நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கூறினார்.
வேற்றுமைகளின் அழகில் காணப்படும் நல்லிணக்கம் அனைவருக்கும் தேவை என்றும், அதை ஆசியாவில் எப்படி உருவாக்க வேண்டும் என்பதும் உங்களுக்கு தெரியும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எல்லாவற்றையும் தரப்படுத்துவதற்கான தூண்டுதலுக்கு அடிபணிய வேண்டாம் என்றும் கூறினார்.
தோல்வியை சமாளிக்க இளைஞர்களுக்கு உதவுங்கள், கீழே விழாமல் இருப்பது முக்கியம், அதுபோல் நாம் எழுந்திருக்க உதவும் ஒருவரைக் கண்டுபிடிப்பதும் அவசியம் என்றும், நகைச்சுவை உணர்வை ஒருபோதும் இழக்க வேண்டாம் அதுவே மன ஆரோக்கியத்திற்கான வழி என்ற ஆலோசனையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கேரளாவில் இயற்பியல் படிக்கும் ஜோசப் மற்றும் பெங்களூருவில் சட்டபணியில் ஈடுபட்டுள்ள மேரி லவினா ஆகியோர் ஆசியாவில் இணையத்தின் சவால் மற்றம் இளைஞர்களுக்கு ஊடகக்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். இவற்றில் உள்ள சவாலை வெல்ல, சிந்தனை, இதயம் மற்றும் கரங்களின் மொழி போன்ற நிறைய படைப்பாற்றல் நமக்குத் தேவை. மேலும் சித்தாந்தம் மூளையைக் குறைக்கிறது. இதயத்தை சிறியதாக ஆக்குகிறது. கரங்கள் முடக்கப்படுகின்றன. சித்தாந்தங்களைத் தவிர்த்து, தொழில்நுட்பத்தை அணுகுவதில் சமத்துவத்தை நாடுங்கள். இது இணையத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றும் என்றும் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்