தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பல்கலைக்கழகத் தலைவர்கள் உடன் திருத்தந்தை பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பல்கலைக்கழகத் தலைவர்கள் உடன்  (Vatican Media)

தூக்கி எறியும் கலாச்சாரம் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும்

பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரம் மனிதர்கள் மீதும் இயற்கையின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் கலாச்சாரம், இயற்கையுடன் இணைந்து முழு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது, அதை வாழ விடாது என்றும், இத்தகைய பயன்படுத்தி தூக்கி எறியப்படும் கலாச்சாரம் நம் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 21, வியாழன் அன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இலத்தீன் அமெரிக்க பல்கலைக்கழகத் தலைவர்கள் ஏறக்குறைய 200 பேரை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் குறித்தும் அவர்களோடுக் கலந்துரையாடினார்.  

பருவநிலை மாற்றம், இடம்பெயர்வு, தூக்கி எறியப்படும் கலாச்சாரம் போன்ற கல்வியாளர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய யதார்த்தங்கள் மற்றும் சவால்களில் இருந்து தொடங்கி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் ஆக்கப்பூர்வமாக இருக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

சுற்றுப்புறச்சூழல் மற்றும் தட்பவெப்பநிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை அவர்கள், பயன்படுத்தி தூக்கி எறியப்படும் கலாச்சாரம் கைவிடப்பட்ட கலாச்சாரம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, தனது அடுத்த திருத்தூது மடலின் தலைப்பு "Laudate Deum" என்றும் கூறினார்.

எஞ்சியிருக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல், அவற்றை மீண்டும் உருவாக்குதல், பொதுவான பயன்பாட்டின் வரிசையில் அவற்றை மாற்றுதல் போன்றவற்றில் கல்வியின் பற்றாக்குறை உள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள்,  இந்த பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரம் மனிதர்கள் மீதும் இயற்கையின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.

மனிதகுலம் இயற்கையின் இந்த முறையற்ற பயன்பாட்டால் சோர்வடைந்துள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையின் நல்ல பயன்பாட்டுப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்றும், இயற்கையை முறையாகப் பயன்படுத்த அதனுடன் உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனை தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மூன்று மனித மொழிகளான தலை, இதயம் மற்றும் கைகளின் மொழி மிகவும் அவசியம் என்றும் இதனை சிறார் மற்றும் இளையோர்க்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் கல்வியாளர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

கல்வியாளர்கள் தகவல்களை வழங்குபவர்கள் மட்டுமல்ல என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் மற்றும் இளையோர் தாங்கள் என்ன செய்கின்றார்கள் எப்படி செய்கின்றார்கள், என்பதைக் கண்டறிந்து செயல்களை செய்ய வேண்டும் என்றும், உண்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆக்கப்பூர்வமாக இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2023, 13:28