முன்னாள் அரசுத்தலைவர் உடலுக்கு திருத்தந்தை அஞ்சலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இத்தாலிய முன்னாள் அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்பொலித்தானோ அவர்கள் தனது 98ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததையடுத்து செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த Palazzo Madama சென்று செபத்துடன் கூடிய தன் ஆழ்ந்த இரங்கலையும், அவரது மனைவி Clio விற்கு ஆறுதலையும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைந்த ஜார்ஜோ நாப்பொலித்தானோ நாட்டிற்காக உழைத்த நல்ல பணியாளர், சிறந்த அறிவுத்திறன் மற்றும் இத்தாலிய அரசுப் பணியில் நேர்மையான ஆர்வம் கொண்டு பணியாற்றியவர் என்றும் தனது இரங்கல் தந்திச்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த வெள்ளி சனி ஆகிய இரு நாள்கள் 44ஆவது திருத்தூதுப் பயணமாக பிரான்சில் உள்ள மர்சேய்லுக்கு சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னாள் அரசுத்தலைவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உரோமின் Palazzo Madama என்னும் அரசு அலுவலகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி, புதன் பொது மறைக்கல்வி உரையின் போது முன்னாள் அரசுத்தலைவர் அவர்களை நினைவுகூர்ந்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பணி போற்றுதற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 4 மாதங்களாக உரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்த முன்னாள் அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களின் உடல் Palazzo Madama இல் உள்ள Nassirya அறையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு இறுதிச்சடங்குத் திருப்பலி நடைபேற உள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்