நம் திருஅவையே படைப்பிற்கும் அங்கிருப்போருக்கும் ஆதாரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையே நம் பொது இல்லமாகிய இவ்வுலகிற்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
படைப்பின் காலம் என்ற ஹேஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 19, செவ்வாயன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நதியானது எவ்வாறு தன்னைச் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு வாழ்வின் ஆதாரமாக இருக்கிறதோ, அவ்வாறே, ஒன்றிணைந்து பயணிக்கும் நம் திருஅவை, பொது இல்லமாகிய படைப்பிற்கும் அங்கு குடியிருப்பவர்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல், புனித பிரான்சிஸ் அசிசியின் விழாவான அக்டோபர் மாதம் 4ஆம் தேதிவரை திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தையொட்டி இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1989ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதியை படைப்பிற்காக செபிக்கும் நாளாக கிறிஸ்தவ ஒன்றிப்பு கீழை ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவை சிறப்பித்துவரும் வேளையில், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் Laudato Si’ என்ற, படைப்பின் மீதான அக்கறை குறித்த ஏட்டை வெளியிட்டதைத் தொடர்ந்து அவ்வாண்டிலேயே இந்த, ஆண்டு ஜெபக் கொண்டாடத்தில் கத்தோலிக்க திருஅவையையும் இணைத்துக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையில் படைப்பின் காலம் என்பது, செப்டம்பர் முதல் தேதி படைப்பிற்கான ஒன்றிணந்த செபத்துடன் துவங்கி, படைப்பை பதுகாப்பதற்கான செபம் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவித்து புனித அசிசியின் பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது.
இவ்வாண்டின் படைப்பின் காலத்திற்கான கருப்பொருளாக, நீதியும் அமைதியும் வழிந்தோடுவதாக என்பது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்