தேடுதல்

கடவுளின் அளவற்ற மன்னிப்பைப் பயிற்சிப்போம்

மன்னிப்பு என்பது குறைவாகவோ அதிகமாகவோ செய்யப்படக்கூடிய ஒரு செயல் அல்ல, மாறாக ஒவ்வொரு கிறிஸ்தவனின் அடிப்படைக்கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் கணக்கிட முடியாத வகையில் அளவற்ற வகையில் மன்னிக்கிறார் என்றும் இலவசமாக அவரது அன்பை நமக்கு அளிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குவழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் நமக்கு எதிராக பாவம் செய்யும்போது அவர்களை கடவுளின் மனநிலை கொண்டு மன்னித்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பொதுக்காலம் 24-ஆம் ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகமான மத்தேயு  நற்செய்தியின் 18: 21-35  வரையுள்ள மன்னிக்க மறுத்த பணியாள் உவமை குறித்து திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மன்னிப்பு என்பது குறைவாகவோ அதிகமாகவோ செய்யப்படக்கூடிய ஒரு செயல் அல்ல மாறாக ஒவ்வொரு கிறிஸ்தவனின் அடிப்படைக்கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.

நாம் ஒவ்வொருவரும் "மன்னிக்கப்பட்டவர்கள்"  என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமக்காகத் தம் உயிரைக் கொடுத்த, அவருடைய இதயத்திலிருந்து ஒருபோதும் விலகாத இரக்கத்திற்கு நம்மால் ஈடுசெய்ய முடியாது என்றும், ஒருவருக்கொருவர் மன்னிப்பதன் வழியாக நாம் அவருக்கு சான்றுபகரக்கூடிய வாழ்க்கை வாழலாம் என்றும் கூறினார்.

இதன் வழியாக நம்மைச்சுற்றி புதிய வாழ்க்கைக்கான விதையை விதைக்கலாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னிப்பு இன்றி அமைதி இல்லை, நம்பிக்கை இல்லை என்றும் எடுத்துரைத்தார்.

மன்னிப்பு என்பது வெறுப்பால் மாசுபட்ட காற்றை சுத்திகரிக்கும் ஆக்ஸிஜன் போன்றது என்றும், இது வெறுப்பின் நச்சுத்தன்மையைக் குணப்படுத்தும் மருந்து, கோபத்தை தணிக்கும் வழி, மற்றும் சமூகத்தை மாசுபடுத்தும் பல இதய நோய்களைக் குணப்படுத்தும் வழி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் கடவுளிடமிருந்து மகத்தான மன்னிப்புக்கான பரிசைப் பெற்றேன் என்று நான் நம்புகிறேனா? தவறுகளில் விழும்போது, மற்றவர்கள் என்னை மன்னிக்காதபோது, கடவுள் என்னை மன்னிக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை அறிவதில் மகிழ்ச்சி அடைகிறேனா? என்னைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்கின்றேனா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள் நாமே கேட்டுக்கொள்ள அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் ஒவ்வொருவரும் நம்மை காயப்படுத்திய ஒரு நபரைப் பற்றி சிந்தித்து அவர்களை மன்னிப்பதற்கான வலிமையை இறைவனிடம் கேட்போம் என்றும், கடவுளுடைய அன்பின் துணைகொண்டு அவர்களை மன்னித்து, நமக்கு நல்வாழ்வையும் இதயங்களில் அமைதியை மீட்டெடுக்கும் மன்னிப்பை பயிற்சிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2023, 13:00