மங்கோலியத் தலத்திருஅவை அன்றும் இன்றும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆழமான, பழமையாக கிறிஸ்தவ வேர்களைக் கொண்டுள்ள மங்கோலியாவில் கிறிஸ்தவம் ஏறக்குறைய 10 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது என்றுக் கருதப்படுகின்றது. சிரியாக் பாரம்பரியத்தின் நெஸ்டோரியன் சமூகங்கள் தூர கிழக்கு வரை பரவியதும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் அதன் இருப்பு இடைவிடாமல் இருப்பதும், கிறிஸ்தவம் நிலைத்து நிற்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. 1245ஆம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் இன்னசெண்ட் பிரான்சிஸ்கன் துறவியான, Carpineயைச் சேர்ந்த Giovanni di Pian என்பவரை மங்கோலியாவின் Karakorum பேரரசின் அரசவைக்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக அனுப்பி வைத்தார். Karakorum பேரரசானது 1235ஆம் ஆண்டு Ögödei Khan என்பவரால் உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் முதல் மறைப்பணியாளராக 1253 ஆம் ஆண்டு டொமேனிக்கன் சபை பிரெஞ்சு அருள்பணியாளர் Barthélémy de Crèmone என்பவர் வந்தார். 1922ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பியோ மங்கோலியாவில் மறைப்பணித்தளம் ஒன்றை நிறுவினார். சீனாவில் உள்ள மத்திய மங்கோலியாவின் இன்றைய சோங்லி-சிவான்சி மறைமாவட்டம் என அழைக்கப்படும் நிலப்பரப்பைப் பெற்று மறைபணித்தளமாக உருவாக்கினார். இது 1924 இல் மறுபெயரிடப்பட்டு, உர்காவின் மறைப்பணித்தளம் என்று அழைக்கப்படலாயிற்று,
சோவியத் சார்புடைய மங்கோலிய மக்கள் குடியரசு நாடானது, 1990 ஆம் ஆண்டு ஜனநாயக நாடாக உருவானது. மங்கோலியாவின் புதிய குடியரசு, திருஅவையுடன் உறவை ஏற்படுத்திய 1992 வரை, இப்பகுதியில் வாழ்ந்த ஒவ்வொரு கிறிஸ்தவ இருப்பும் இரத்து செய்யப்பட்டிருந்தது. 2002 இல் திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் திருப்பீடப் பிரதிநிதியாகவும், பின்னர் 2003 இல் உலன்பாதரின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் பிலிப்பீன்ஸ் நாட்டு மறைப்பணியாளர் வென்செஸ்லாவ் பாடில்லா நியமிக்கப்பட்டு வழிநடத்தினார். இவர் 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இளமையான, ஏழையான முக்கியமான தலத்திருஅவை
1992 இல் Scheut துறவுசபையின் முதல் மூன்று மறைப்பணியாளர்கள் மங்கோலிய தலைநகருக்கு வந்தபோது, மங்கோலியாவில் ஒரு கத்தோலிக்கர் கூட இல்லை, மேலும் மொழியியல் மற்றும் கலாச்சார சிக்கல்களுக்கு மத்தியில் தலத்திருஅவையை நிலை நாட்டும் புதியப்பணியினையும் தொடங்க வேண்டியிருந்தது. அவர்களின் அப்போஸ்தலிக்கப் பணியும், இதற்கிடையில் மங்கோலியாவிற்கு வந்த பிற மத சபைகளின் பணியும், கொரிய தலத்திருஅவையின் நிதி உதவியுடன் செயல்பட ஆரம்பித்தது. இதனால் நாட்டில் கத்தோலிக்க மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை மெதுவாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
புத்த பாரம்பரியத்தை அதிகமாகக் கொண்ட மங்கோலியாவில் அருள்பணித்துவ வாழ்வு மற்றும் துறவு ஆகியவற்றை ஏற்கும் இளையோர் எண்ணிக்கை சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. 1995 இல் மங்கோலியாவில் 14 கத்தோலிக்கர்கள் மட்டுமே இருந்தனர்.
தற்போதைய அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜார்ஜோ மரேங்கோ அவர்களின் கூற்றுப்படி, கடந்த முப்பது ஆண்டுகளில் மங்கோலியாவில் உள்ள தலத்திருஅவையின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, 1992 முதல் 2002 வரை திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் திருப்பீடத்தூதரகமாக உயர்த்தப்பட்டபோது சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் மனித மேம்பாட்டுத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், இரண்டாவது உள்ளூர் கிறிஸ்தவ சமூகங்களின் பிறப்பு மற்றும் வேரூன்றியது, மூன்றாவது 2016ஆம் ஆண்டு முதல் மங்கோலிய அருள்பணியாளராக ஜோசப் என்கீ-பாதர் அருள்பணித்துவ அருள்பொழிவு பெற்றது.
மங்கோலிய கிறிஸ்தவர்கள்
இன்று கத்தோலிக்க தலத்திருஅவையில் ஏறக்குறைய 1,500 பேர் திருமுழுக்கு அருளடையாளம் பெற்றவர்களாக உள்ளனர். இங்கு எட்டு பங்குத்தளங்கள் மற்றும் ஒரு சிற்றாலயமும் உள்ளது. ஏறக்குறைய 34 இலட்சம் மக்களில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்நிலையில், கத்தோலிக்கர்களுக்கு மேய்ப்புப் பணியாற்ற ஓர் ஆயர், 2 மங்கோலிய அருள்பணியாளர்கள் உட்பட 25 அருள்பணியாளர்கள், 6 திருத்தொண்டர்கள், 30 துறவறத்தார், 5 அருள்சகோதரர்கள், 35 மறைக்கல்லவியாளர்கள் உள்ளனர். இதுதவிர, ஏறக்குறைய 30 மேய்ப்புப்பணியாளர்கள் உள்ளனர்.
தலத்திருஅவை செயல்பாடுகள்
சமூக, கல்வி மற்றும் நலவாழ்வுப் பணிகளில் அர்ப்பணிப்புடன் கூடிய மறைப்பபணிகளில் பரவலான செயல்பாடு தொடர்கிறது. 2020 ஆம் ஆண்டில், ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இரண்டு தொடக்கப் பள்ளிகள், இரண்டு நர்சரி பள்ளிகள், மிகவும் பின்தங்கியவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கும் மருத்துவ மையம், ஊனமுற்றோருக்கான மையம், கைவிடப்பட்ட மற்றும் ஏழை முதியவர்களுக்கான இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காரித்தாஸ் பணிகளும் மங்கோலியாவில் தனது தொண்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளன.
இந்த நேர்மறையான சூழலில், மங்கோலிய தலத்திருஅவையின் மேய்ப்புப்பணி சவால்கள் நிறைந்ததாக உள்ளது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அன்றாட வாழ்க்கையுடன் அதை அதிக அளவில் இணைக்கவும் மேய்ப்புபணியாளர்கள் உழைத்துவருகின்றனர். பல்வேறு சபைகளின் மறைப்போதகர்கள் மற்றும் நாட்டில் இருக்கும் மற்ற கிறிஸ்தவ சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதும் இவர்களின் பணிகளில் முக்கியமான ஒன்றாக இடம்பெற்றுள்ளது. மங்கோலிய சமுதாயத்திற்கு நற்செய்தியை தைரியமாக அறிவிப்பது தொடர்ந்து சவாலாக இருக்கும் வேளை, கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாண்டுகள் ஆட்சியின் போது அரசு நாத்திகத்தை தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால், மூன்று விழுக்காடு மக்கள் தங்களை மதம் அல்லாதவர்கள் என்று அறிவித்து வருகின்றனர்.
மிகக் குறைந்த அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக் கொண்ட மங்கோலியா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணம் சிறப்பாக அமைய தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்