வட ஈராக்கில் தீ விபத்தால் உயிரிழந்தோருக்கு அனுதாபங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வட ஈராக்கின் Qaraqosh என்னுமிடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், காயமுற்றோருடன் நெருங்கிய ஒருமைப்பாட்டையும் வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை மொசூல் பேராயர் பெனெடெக்தோஸ் யூனன் ஹானோ அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் அனுதாபங்களை வெளியிட்டு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், அனைவருடன் அவரின் ஆன்மீக நெருக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் அதேவேளையில், அவர்களின் இழப்பால் துயருறும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை திருத்தந்தை தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீவிபத்தில் காயமுற்றோர் மற்றும் இதில் சேவையாற்றியுள்ள அவசரகாலப் பணியாளர்களுக்கு செபிப்பதாகவும் அத்தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட ஈராக்கின் Qaraqosh நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் செவ்வாயன்று மாலையில் தீ பரவியதில் குறைந்தபட்சம் 100 பேர் உயிரிழந்துள்ளனர், ஏறக்குறைய 150 பேர் காயமுற்றுள்ளனர்.
1300 விருந்தினர் குழுமியிருந்த இந்த திருமண மண்டபத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் காயமுற்ற மணமகனும் மணமகளும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்