திருத்தந்தையின் மறையுரை – அன்பிற்கான தாகம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது, என்ற 63ஆம் திருப்பாடலின் துவக்க வரிகள் காட்டும் உன்னத மன்றாட்டு, நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. நம் வாழ்வின் பாலைவன நேரங்களை கடந்து செல்லும்போது நாம் நம் பயணத்தில் தனியாக இல்லை என்ற நற்செய்தியைக் கேட்கிறோம். இன்று நாம் இந்த திருப்பாடல் வரிகள் காட்டும் இரு விடயங்களை சிறிது ஆழமாக நோக்குவோம். நமக்குள்ளிருக்கும் தாகம், மற்றும் அந்த தாகத்தைத் தணிக்கும் அன்பு என்பவையே அவை.
முதலில் நாம் நமக்குள்ளிருக்கும் தாகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். தன் வாழ்வு பாலைவனமாகிப்போனதை உணரும் திருப்பாடல் ஆசிரியர், இறைவனை நோக்கி கூக்குரலிடுகிறார். இவ்வார்த்தைகள் மங்கோலியாவிலும் எதிரொலிப்பதைக் காணலாம். வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் வளமுடைய இந்த நாடு, வறட்சியான மேய்ச்சல் புல்வெளி நிலங்களையும் பாலைவனத்தையும் கொண்டுள்ளது. கடவுளின் நாடோடி இனமாக, திருப்பயணிகளாக நாம் மகிழ்வைத் தேடும் பாதையில் அன்பிற்கான தாகத்துடன் சென்று கொண்டிருக்கிறோம். திருப்பாடல் ஆசிரியர் எடுத்துரைக்கும் பாலைவனம் என்பது நம் வாழ்வே. நாமே அந்த வறண்ட நிலம். நாம்தான் ஆழமான தாகத்தைத் தணிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறோம். நம் இதயங்கள் மகிழ்வின் இரகசியத்தைக் கண்டுகொள்ள ஏங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஏக்கங்களுக்கான, தாகத்திற்கான பதிலுரையே நம் கிறிஸ்தவ விசுவாசம். இந்த தாகத்தில்தான் நம் மனிதகுலத்தின் உயரிய மறையுண்மை புதைந்து கிடக்கிறது. இந்தத் தாகமே நம் இதயங்களை அன்பின் கடவுளை நோக்கித் திறக்க வைக்கிறது. அவரே தன் குழந்தைகளாகிய நம்மை ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகளாக மாற்ற வருகிறார்.
இதுதான் நம்மை இரண்டாவது விடயமான, தாகத்தைத் தணிக்கும் அன்பை நோக்கி அழைத்துவருகிறது. அன்பு என்னும் கடவுள் தன் மகன் இயேசுகிறிஸ்து வழியாக நம் அருகில் வந்து, நம் மகிழ்விற்கான ஏக்கத்திலும் தாகத்திலும், நம் கனவுகளிலும், நம் பணிகளிலும், நம் வாழ்விலும் பங்கெடுக்க ஆவல் கொள்கிறார். நாம் பலவேளைகளில் நம் வாழ்வை வறண்ட பாலவனம் போல் உணர்கிறோம் என்பது உண்மையெனினும், இறைவன் எப்போதும் நம் அருகில் இருந்து நமக்கு புத்துணர்வு தரும் நீரை வழங்கி நம்மைப் புதுப்பிக்கிறார் என்பதும் உண்மையே. புனித அகுஸ்தீனார் கூறுவதுபோல், தாகத்தில் இருப்போரில் நாம் நம்மைக் கண்டுகொள்வோமானால், அந்த தாகத்தைத் தணிப்போரிலும் நாம் நம்மைக் காண்டுகொள்ளலாம்.
நம் ஆண்டவராம் இயேசுகிறிஸ்து, தன் வார்த்தைகளை எடுத்துரைக்கும் போதகர்கள் வழி ஆறுதலின் ஆதாரத்தை வழங்கியுள்ளார். வாழ்வின் பாலைவன நேரங்களிலும், இந்நாட்டில் சிறுபான்மை சமுதாயமாக இருப்பதில் தொடர்புடைய துன்பங்களிலும், நீங்கள் வாழ்வு தரும் நீரின்றி தவிக்கக்கூடாது என மறைப்பணியாளர்கள் மற்றும் மறைப்போதகர்கள் வழி உறுதிச் செய்துள்ளார். அவர்களே உங்கள் நடுவே மகிழ்வின் விதைகளைத் தூவியவர்கள். அந்த வார்த்தைகளே நம் விசுவாசத்தின் இதயத்திற்கு நம்மை மீண்டும் கொணர்கிறது. இதன் வழி நாம் கடவுளால் அன்புகூரப்பட அனுமதிப்பதுடன், நம் வாழ்வையும் அன்பின் கொடையாக மாற்றுகிறோம். ஏனெனில், அன்பு ஒன்றே நம் தாகத்தை உண்மையில் தணிக்க முடியும்.
இதைத்தான் இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில் புனித பேதுருவை நோக்கி இயேசு கூறுவதில் காண்கிறோம். துன்பப்படவும், கொலை செய்யப்படவும் இறைமகன் கையளிக்கப்படவிருக்கின்றார் என்பதைக் கேட்டதும் புனித பேதுரு, மெசியாவாக இருப்பவர் எப்படி கடவுளால் கைவிடப்பட்டவராக, சிலுவையில் ஒரு குற்றவாளியைப்போல் மரணமடைய முடியும் என எண்ணி, இது நடக்கக்கூடாது என இயேசுவிடம் கடிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவோ, பேதுருவை நோக்கி, “என் கண்முன் நில்லாதே சாத்தானே” என்று கூறுவதுடன், கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுவதாகவும் புனித பேதுருவை கடிந்துகொள்கிறார். நாமும் நம் வாழ்வில் வெற்றி, அதிகாரம், மற்றும் உலகப்பொருள்கள் வழியாக நம் தாகத்தைத் தணிக்கமுடியும் என எண்ணினோமானால், அது உலகைப்போல் எண்ணுவதாகும். அது நம்மை எங்கும் எடுத்துச் செல்லாதது மட்டுமல்ல, நம் தாகத்தை அதிகரிக்கவே உதவுகிறது. இதற்கு மாற்றாக, இயேசு காட்டும் வழியோ, தன்னலம் துறந்து நம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றுவதாக இருக்கிறது. ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார், என்பது இயேசுவே கூறும் வார்த்தைகள். அன்புகூருவதைத் தேர்ந்தெடுத்து, அன்பை பிறருக்கான இலவசக் கொடையாக மாற்றும்போது, அதே அன்பு அபரிவிதமாக நம்மிடமே திரும்பி வருவதுடன், நமக்கு முடிவற்ற மகிழ்வையும், இதய அமைதியையும், உள்மன சக்தியையும், ஆதரவையும் வழங்குகிறது.
இந்த உண்மையைத்தான் நாம் கண்டுகொள்ளவேண்டும் என இயேசு விரும்புகிறார். அதாவது, அன்பே நம் இதயத் தாகத்தை தணிக்கிறது, அன்பே நம் காயங்களைக் குணப்படுத்துகிறது, அன்பே உண்மை மகிழ்வைக் கொணர்கிறது. இதுதான் இயேசு நமக்குக் கற்பித்து நமக்கென திறந்துவிட்ட பாதை.
இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பதுபோல், அவரின் சீடர்களாக மாறி, அவரின் பாதச் சுவடுகளில் நடப்பதோடு, உலகம் செய்வதுபோல் எண்ணாமலும் இருப்போம். நாம் இவ்வாறு செய்தால், கிறிஸ்து மற்றும் தூய ஆவியாரின் துணையுடன் அன்பின் பாதையில் வழி நடப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்