புதன் மறைக்கல்வி உரை - ஆப்ரிக்காவின் அப்போஸ்தலரான புனித தானியேல் கொம்போனி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கதிரவனின் கதிர்கள் மேகத்தில் மறைந்து மெல்லியதாய் ஒளி கொடுக்க இதமான தென்றல் காற்று, வத்திக்கான் வளாகத்தில் இருந்த திருப்பயணிகளின் மனதிற்கு மேலும் மகிழ்வினைக் கொடுக்க, கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்றனர் திருப்பயணிகள். செப்டம்பர் 20 புதன் கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளைச் சந்தித்து மறைக்கல்வி உரையாற்ற, திறந்த காரில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்வுடன் திருப்பயணிகள் அனைவரையும் வரவேற்றார். மக்களின் கரவொலி, களிப்பின் ஆரவாரம், இவற்றிற்கு இடையே புதன் பொது மறைக்கல்வி உரையினை வழங்கும் இடத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் என்ற தலைப்பில் தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து இன்றைய தனது புதன் மறைக்கல்வி உரையினைத் தொடங்கினார். அதன்பின் திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடல் இரண்டாம் அதிகாரத்தில் உள்ள 4,7,8 ஆகிய இறைவார்த்தைகள் இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், ஸ்பானியம், போர்த்துக்கீசியம், அரபு, ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
1 தெசலோனிக்கர் 2: 4, 7,8
நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு இப்போது செவிமடுப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம் புனித தானியேல் கொம்போனியின் சான்றுள்ள வாழ்வைக் குறித்துக் காண்போம். ஆப்ரிக்கா கண்டத்தின் மேல் ஆர்வமுள்ள அப்போஸ்தலராக இருந்த புனித டேனியல் கொம்போனி அவர்கள், அந்த மக்களைப் பற்றி எழுதுகையில் "என் இதயத்தை அவர்கள் கொள்ளை கொண்டுவிட்டனர். அவர்களுக்காக மட்டுமே என் இதயம் வாழ்கின்றது. என் உதடுகளில் ஆப்ரிக்காவை உச்சரித்துக்கொண்டே நான் இறந்து போவேன் என்று எழுதியுள்ளார். மேலும் அம்மக்களுக்கு உரையாற்றுகையில், நான் உங்களுக்காக என் உயிரைக் கொடுப்பதே எனது வாழ்நாளின் மகிழ்ச்சியான நாட்கள் என்று கூறியுள்ளார். இதுவே கடவுள் மீது அளவற்ற அன்பு கொண்ட மனிதருடைய அன்பின்வெளிப்பாடு, உணர்வின் வெளிப்பாடு. உடன்வாழும் சகோதர சகோதரிகளுக்கு மறைப்பணியாற்றிய அவர், இயேசு கிறிஸ்து இத்தகைய மக்களுக்காகவும் பாடுபட்டு இறந்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஒருபோதும் சோர்வடைந்ததில்லை.
அடிமைத்தனத்தின் கொடூரத்தால் வகைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் அதனைக் கண்ட அவர், அடிமைத்தனம் மனிதனை ஒரு பொருளாக மாற்றுகின்றது என்றும் இதனால் அம்மனிதர் ஒருவருக்கோ அல்லது ஏதாவதொன்றிற்கோ பயனுள்ள ஒரு பொருளாகவே மாறுகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார். இயேசு தந்தைக் கடவுளால் மனிதராக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மனிதரின் மாண்பினை உயர்த்தி அடிமைத்தனம் என்னும் பொய்மையை வெளிக்கொணர்ந்தார். புனித கொம்போனி, கிறிஸ்துவின் ஒளியில் அடிமைத்தனத்தின் தீமையை உணர்ந்தார். சமூக அடிமைத்தனம் ஆழமான அடிமைத்தனத்தில் வேரூன்றியுள்ளது, அதாவது இதயத்தளவில் மற்றும் பாவத்தளவிலான அடிமைத்தனத்தில் வேரூன்றியுள்ளது. அதிலிருந்து இறைவன் நம்மை விடுவிக்கிறார் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு விதமான அடிமைத்தனத்திற்கும் எதிராகப் போராட அழைக்கப்பட்டுள்ளோம். இருப்பினும், அடிமைத்தனம், கடந்த காலத்தின் நினைவாகவோ நல்ல ஒரு விடயமாகவோ அல்ல மாறாக காலனித்துவம் போன்று உள்ளது.
கொம்போனியால் மிகவும் அன்பு செய்யப்பட்ட ஆப்ரிக்கா இன்று பல மோதல்களால் பிளவுபட்டுள்ளது. "அரசியல் ஒன்றிப்புக்குப் பிறகு, அடிமைத்தனமான "பொருளாதார காலனித்துவம்" கட்டவிழ்த்துவிடப்பட்டது. பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய உலகம் இதனைக் கண்டுகொள்ளாமல் அடிக்கடி தங்களது கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றை மூடிக் கொள்ளும் நாடகமாக இது இருக்கின்றது. எனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் கின்சாசா திருத்தூதுப்பயணத்தின்போது அரசியல் அதிகாரிகளுடன் பேசியபோது கூறிய கருத்துக்களை உங்களுக்கு மீண்டும் நினைவுவூட்டி எனது வேண்டுதலைப் புதுப்பிக்கின்றேன். ஆப்ரிக்காவை மூச்சுத் திணறடிக்கச் செய்வதை நிறுத்துங்கள்: இது சுரண்டப்படும் சுரங்கமோ அல்லது கொள்ளையடிக்கப்படும் மண்ணோ அல்ல"
புனித தானியேலின் வாழ்க்கைக் கதைக்கு வருவோம். ஆரம்ப காலத்தை ஆப்பிரிக்காவில் கழித்த பிறகு, உடல்நலக் குறைபாட்டுக் காரணங்களுக்காக அவர் தான் செய்து கொண்டிருந்த பணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. உள்ளூர் காலச்சூழ்நிலையைப் பற்றிய தெளிவும் அறிவும் இல்லாததால் பல மறைப்பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். மற்றவர்கள் ஆப்ரிக்காவைவிட்டு வெளியேறினர் ஆனால் கொம்போனியோ தனது நற்செய்தி அறிவிப்புக்கான புதிய வழியைக் கண்டறிந்தார். ஆப்ரிக்காவைக் கொண்டு ஆப்ரிக்காவைக் காப்பாற்றுதல் என்ற சக்திவாய்ந்த உள்ளுணர்வினைப் பெற்றார். இது மறைப்பணி அர்ப்பணிப்பை புதுப்பிக்க அவருக்கு உதவியது. நற்செய்தி அறிவிப்பிற்காக அழைக்கப்பட்ட மக்கள் வெறும் "பொருள்கள்" அல்ல, மாறாக மறைப்பணியின் முக்கியமான ஆள்கள். புனித தானியேல் கொம்போனி அனைத்து கிறிஸ்தவர்களையும் நற்செய்தி அறிவிப்பிற்கான செயல்பாட்டாளர்களாக முக்கியமான நபர்களாக மாற்ற விரும்பினார். இந்த மனப்பான்மையுடன் அவர் ஒரு ஒருங்கிணைந்த வழியில் சிந்தித்து செயல்பட்டார். உள்ளூர் அருள்பணியாளர்களை மறைப்பணியில் ஈடுபடுத்தி அவர்களின் பொதுச்சேவையை மேம்படுத்தினார். கலாச்சார மாற்றம் மற்றும் சமூகத்தின் மாற்றத்தில் குடும்பம் மற்றும் பெண்களின் பங்கை ஊக்குவித்தல், கலை மற்றும் தொழில்களை கவனித்துக்கொள்வதன் வழியாக மனித வளர்ச்சி போன்றவற்றை அவர் உருவாக்கினார். வெளிப்புற மாதிரிகளை இடமாற்றம் செய்வது, அல்லது வீரியமற்ற செயல்பாடுகளைத் துணையாகக் கொள்வதைக் காட்டிலும், நம்பிக்கை மற்றும் மனித வளர்ச்சியை பணிச்சூழல்களுக்குள் இருந்து முன்னெடுப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொம்போனியின் சிறந்த மறைப்பணி ஆர்வம் முக்கியமாக மனித அர்ப்பணிப்பின் பலனுக்காகவோ அவரது துணிவால் மட்டுமோ இயக்கப்படவில்லை. சுதந்திரம், நீதி, அமைதி போன்ற முக்கியமான மதிப்புகளால் மட்டுமே உந்துதல் பெறவில்லை மாறாக அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் நற்செய்தியின் மகிழ்ச்சியில் இருந்து பிறந்தது. அது கிறிஸ்துவின் அன்பை ஈர்த்தது மற்றும் கிறிஸ்துவை அன்பு செய்ய வழிவகுத்தது. புனித தானியேல் கூறுவது போல கடினமான உழைப்பு நிறைந்த மறைப்பணியினை சுயநலம், ஆன்மாக்களின் நலத்தை கவனிக்காத தன்மை, மனமாற்றமின்மை ஆகியவற்றில் சரியான கவனம் செலுத்தாதவர்களால் நிறைவேற்ற முடியாது. இத்தகையவர்கள் தங்களைத் தாங்களே சார்ந்து வாழ முடியாது. "கடவுளிடமிருந்தும் கிறிஸ்துவின் அன்பிலிருந்தும் பெறப்பட்ட தொண்டுப்பணிகள் வழியாக அவர்களது வாழ்வைப் பற்றி எரியச்செய்ய வேண்டும். நீங்கள் கிறிஸ்துவை உண்மையாக அன்பு செய்யும்போது தனிமைகள், துன்பங்கள் மற்றும் தியாகங்கள் இனிமையானவையாக மாறுகின்றன. உறுதியான, மகிழ்ச்சியான, அர்ப்பணிப்புள்ள மறைப்பணியாளர்களைப் பார்ப்பதே புனித தானியேல் கொம்போனியின் விருப்பம்.
மறைப்பணியாளர்கள் - "புனிதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள். முதலாவதாக: புனிதர்கள், அதாவது, பாவத்திலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் தாழ்ச்சியுள்ளவர்கள். ஆனால் அது மட்டும் போதாது. செயல்களைத் திறமையாக்கும் தொண்டுப்பணிகள் தேவை" இதுவே கொம்போனி விரும்பும் மறைப்பணியாளரின் அடிப்படைத்திறன் ஆதாரம். பிறர் நலப்பணிகள் வழியாக, குறிப்பாக மற்றவர்களின் துன்பங்களை நமதாக ஏற்பதில் உள்ள துணிவு, அதை நேரடியாக உணர்ந்து, அதை எவ்வாறு குறைப்பது என்று தெரிந்துகொள்வது, மனிதகுலத்தின் நற்குணம்.
மேலும், அவரது நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் அவரை ஒருபோதும் தனியாக செயல்பட வழிவகுக்கவில்லை மாறாக,தலத்திருஅவையுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வழிவகுத்தது. கடவுளின் இந்த ஆன்மாக்களின் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்க என் வாழ்நாள் உள்ளது என்று எழுதியுள்ள கொம்போனி, இந்த நோக்கத்திற்காக ஆயிரம் பேர் என்னுடன் மறைப்பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். முழு திருஅவையும் மறைப்பணியை நிறைவேற்றவில்லை என்றால், நமது குறுகிய வாழ்க்கையில் நாம் யார்? நமது பணியின் பேரார்வம் என்ன? என்ற கேள்விகளே கொம்போனி நம்மிடம் கேட்பது.
சகோதர சகோதரிகளே, இழந்ததைத் தேடி, தன் மந்தைக்காகத் தன் உயிரைக் கொடுக்கும் நல்ல மேய்ப்பனின் அன்புக்கு புனித தானியேல் கொம்போனியின் சான்று வாழ்வு அடையாளமாக இருக்கின்றது. அலட்சியம் மற்றும் புறக்கணிப்பை எதிர்ப்பதில் அவரது பேரார்வம் ஆற்றல் மிக்கதாகவும் இறைவாக்குத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. நீண்ட காலமாக ஆப்ரிக்காவை மறந்திருந்த தனது அன்பான தலத்திருஅவையை அவர் தனது கடிதங்களில் இதயப்பூர்வமாக நினைவு கூர்ந்தார். கொம்போனியின் கனவு ஒரே தலத்திருஅவையாக வரலாற்றின் சிலுவையில் அறையப்பட்டவர்களுடன் உயிர்த்தெழுதலை அனுபவிக்கும் பொதுவான காரணத்தை உருவாக்குகிறது. அவருடைய சான்று வாழ்வு திருஅவையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கூறுவது "ஏழைகளை அன்பு செய்ய மறந்துவிடாதீர்கள். ஏனென்றால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு அவர்களில் இருக்கிறார், உயிர்த்தெழுப்பப்படுவதற்கு காத்திருக்கிறார்".
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்தினார். டென்மார்க், நார்வே கேமருன் ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. மேலும், இவ்வாண்டு பொதுப்பேரவையை கொண்டாடும் நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள் மற்றும் அன்னை மரியாவின் மறைப்பணியாளர்கள் சபையினரை வாழ்த்தினார். நற்செய்திக்கு இன்னும் பலனளிக்கும் அவர்களின் பணிக்காகக் கடவுள் மற்றும் தூய கன்னி மரியாவின் தொடர்ச்சியான பாதுகாப்பை வேண்டுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை. திருப்பீடப் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என திருப்பயணிகளாக வந்திருந்த அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியாக, இளையோர், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நோக்கி தன் எண்ணங்களைத் திருப்பி அவர்களுக்காகச் செபிப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை இன்று நினைவுகூரும், புனித ஆண்ட்ரூ கிம், பால் சாங் அவர்களையும் நினைவுகூர்ந்து செபித்தார். சவாலான தேர்வுகளை மேற்கொள்வதிலும், கடினமான காலங்களில் ஆறுதலளிப்பதிலும் உங்கள் அனைவருக்கும் கொரிய மறைசாட்சியாளர்களின் துணிவான வாழ்க்கை முன்மாதிரிகையாகவும் ஆதாரமாகவும் இருக்கட்டும் என்று கூறினார் திருத்தந்தை. அன்பான மற்றும் துன்புறுத்தப்பட்டவர்களுக்காக ஒற்றுமையுடன் கூடிய செபத்தில் உறுதியாக இருப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்களுக்காக செபிக்கவும் கேட்டுக்கொண்டார். இறுதியாக விண்ணகத் தந்தையை நோக்கிய செபத்தை இலத்தீன் மொழியில் திருப்பயணிகள் அனைவரும் இணைந்து செபித்தனர். செபத்தின் இறுதியில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்