புதன் மறைக்கல்வி உரை – ஏழைகளின் மருத்துவரான அருளாளர் José
மெரினா ராஜ் - வத்திக்கான்
செப்டம்பர் 13 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, ஏழைகளின் மருத்துவரும் அமைதியின் திருத்தூதருமான அருளாளர் José Gregorio Hernández Cisneros அவர்களைப் பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கோடை வெயிலின் வெப்பமும் இளங்காற்றின் மென்மையும் கலந்திருந்த செப்டம்பர் 13 புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 9ம் மணியளவில் திறந்த காரில் வல்ம்வந்த படியே திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மறைக்கல்வி உரையை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து மறைக்கல்வி உரையினைத் துவக்கி வைத்தார். அதன்பின் திருத்தூதர் பவுல் திமோத்தேயுவிற்கு எழுதிய முதல் திருமடல் இரண்டாம் அதிகாரத்தில் உள்ள வழிபாடு, தலைமைப்பணி பற்றிய அறிவுரைகள் குறித்த 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
1 திமோத்தேயு 2: 1-4
அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்பதற்கான ஆர்வம் நம்பிக்கையுள்ள மக்களின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு இப்போது செவிமடுப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நற்செய்தி அறிவிப்புக்கான பேரார்வம் என்ற தலைப்பில் நமது தொடர் மறைக்கல்வியில் பல்வேறு நபர்களின் சான்றுள்ள வாழ்வைக்குறித்து நாம் பார்த்து வருகின்றோம். அவ்வகையில் நாம் இன்று இலத்தீன் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டு அருளாளர் ஜோஸ் கிரகோரியோ ஹெர்னாண்டஸ் சிஸ்னெரோஸ் என்பவரின் வாழ்க்கை சான்றைப் பற்றி அறிந்து கொள்வோம். 1864 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தாயிடமிருந்தே கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கற்றுக்கொண்டார். "என் அம்மா எனக்கு தொட்டிலில் இருந்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார், அவர் என்னை கடவுளின் அறிவில் வளரச் செய்தார், தொண்டுப்பணிகள் செய்ய எனக்கு வழிகாட்டியாக இருந்தார்” என்ற அருளாளரின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மையிலேயே, அருளாளர் ஜோஸ் கிரகோரியோவின் தொண்டுப்பணிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள்.
ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான மனிதராக, சிறந்த அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டவர். மருத்துவர், பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அறிவியல் அறிஞராகத் திகழ்ந்த போதும் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களுக்கு அதிகமாக உதவி செய்யும் மருத்துவராக இருந்தார். இதனால் அவர் வாழ்ந்த பகுதியில் ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்பட்டார். செல்வவளத்தைத் தரும் பணத்தை விட, நற்செய்தியை அதிகமாக விரும்பினார். தேவையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையைச் செலவிட்டார். ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோரின் துன்பங்களில் ஜோஸ் கிரகோரியோ இயேசுவைக் கண்டார். உலகில் வெற்றியை ஒருபோதும் தேடாத அவர் "மக்களின் புனிதர்" என்று அந்த மக்களாலேயே அழைக்கப்படும் போது அவ்வெற்றியைப் பெற்றார். "தொண்டுப்பணிகளுக்கான திருத்தூதர் என்றும், "நம்பிக்கையின் மறைப்பணியாளர் என்றும் தொடர்ந்து அழைக்கப்படுகின்றார்.
ஜோஸ் கிரிகோரியோ ஒரு நேர்மையான, கனிவான மற்றும் எப்போதும் உதவி செய்யும் குணம் கொண்ட மனிதர். கடவுள் மற்றும் பிறருக்கு பணியாற்ற வேண்டும் என்ற உள்ளார்ந்த நெருப்பால் உந்தப்பட்ட அவர், துறவியாகவோ, அருள்பணியாளராகவோ மாறவேண்டும் என்று பலமுறை முயன்றார். ஆனால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவரால் செல்ல இயலவில்லை. தனது உடல் பலவீனத்தால் அவர் பின்வாங்கவில்லை மாறாக பிறருக்கான பணியினை ஆற்றவேண்டும் என்னும் ஆர்வம் அவரை அதிக ஆற்றல் கொண்ட மருத்துவராக மாற்றியது. இறைத்திருவுளத்தைப் பற்றிக் கொண்டு, ஆன்ம வலுப்பெற்று, அடிப்படையான முக்கியமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதுவே அப்போஸ்தலிக்க பேரார்வம். ஒருவரின் சொந்த விருப்பங்களைப் பின்பற்றுவதல்ல மாறாக கடவுளின் திட்டங்களைப் பின்பற்றுவதே அப்போஸ்தலிக்க பேரார்வம் எனப்படும். இதன்படியே அருளாளர் ஜோஸ், நோயாளர்களைக் கவனித்துக் கொள்ளுதல் வழியாகக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார். அதுமட்டுமல்லாது துன்பப்படுபவர்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு நம்பிக்கை அளித்தல் சான்றுள்ள வாழ்க்கை வாழ்தல் ஆகியவற்றில் வார்த்தைகளால் அல்ல மாறாக தனது எடுத்துக்காட்டான வாழ்க்கையின் வழியாக நம்பிக்கையின் சாட்சியாக விளங்கினார். மருத்துவத்தை அருள்பணித்துவமாக ஏற்று பணியாற்றியதால் “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” (கொலோ 3:23) என்ற திருத்தூதர் புனித பவுலின் வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்தார்.
இத்தகைய ஆற்றல் அருளாளர் ஜோஸ் கிரகோரியோவிற்கு எங்கிருந்து வந்தது என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். உறுதி மற்றும் வலிமை. கடவுளின் அருளே நிச்சயமானது என்னும் உறுதியிலிருந்து வந்தது. இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கின்றார்கள். கெட்டவர்கள் தாங்களாகவே கெட்டவர்களாக மாறியவர்கள். நல்லவர்கள் கடவுளின் உதவியால் நல்லவர்களாக மாறியவர்கள் என்ற (1914 மே 27) அருளாளர் ஜோஸ் கிரகோரியோவின் வார்த்தைகளை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
கடவுளின் அருளை நாடும் பிச்சைக்காரன் என்று தன்னை அவர் உணர்ந்ததனால் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி அவருக்கு இயல்பாக இருந்தது. மேலும் இத்தகைய இயேசுக்களிடமிருந்து அன்றாடம் இலவசமாகப் பெறும் அன்பு என்னும் பலம் அவருக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. இதனால் கடவுளுடனான நெருக்கத்திலும் செபத்திலும் வளர்ந்தார். அன்றாட திருப்பலியில் கலந்து கொள்ளுதல், செபமாலை செபித்தல் என தனது நாட்களை பயன்படுத்தினார். நோயாளிகள், தேவையிலிருக்கும் ஏழைகள், அவரது மாணவர்கள், அவரது ஆராய்ச்சிகள், அவரது இதயத்தில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் திருப்பலியில் ஒப்புக்கொடுத்து செபிப்பார்.
அனைத்தையும் அனைவரையும் திருப்பலிபீடத்தில் கடவுளிடம் ஒப்படைத்து வாழ்ந்த அருளாளர் ஜோஸ், தனது வாழ்வையும் அமைதிக்காக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தன்னை அமைதியின் திருத்தூதனாக மாற்ற எண்ணி ஐரோப்பாவின் அமைதிக்காக தன்னை அர்ப்பணித்தார். ஐரோப்பா அவரது கண்டம் இல்லை என்ற போதிலும், முதல் உலகப்போர் காலகட்டத்தில் ஐரோப்பா வந்த அவர், மகிழ்வுடன் ஒரு நண்பராக வரவேற்கப்பட்டார். முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அறிந்த அருளாளர் ஜோஸ், தனது பணி அங்கு நிறைவுற்றது என எண்ணி திருப்பலிக்குச் செல்கிறார். திருப்பலி முடிந்ததும், உடல் நலமற்ற ஒருவருக்கு மருந்து கொடுப்பதற்காக தெருக்களின் வழியே செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறக்கும் முன் அன்னை மரியாவின் பெயரை உச்சரித்து தன் இறுதி உயிர்மூச்சினை விடுகின்றார். பிறரன்புப் பணிகளைச் செய்துகொண்டிருந்த தெருக்களிலும் தான் உயர்வாக நினைத்த மருத்துவ தொழில் ஆற்றும் மருத்துவமனையிலும் அவரது வாழ்க்கைப்பயணம் நிறைவுறுகின்றது.
சகோதர சகோதரிகளே, அருளாளர் ஜோஸ் இன் சான்று வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்ட நாம், நம் அருகில் இருக்கும் ஏழைகளுக்கு முன்பாக, உலகில் மிகவும் துன்பப்படுபவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என நம்மை நாமேக் கேட்டுக்கொள்வோம். நான் அவர்களுக்காக ஏதாவது செய்கிறேனா அல்லது வெறும் பார்வையாளராக இருக்கின்றேனா? என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். அருளாளர் ஜோஸ் கிரகோரியோ அவர்களின் வாழ்க்கை இன்றைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு நம்மை அர்ப்பணிக்க ஊக்குவிக்கின்றது. பலர் அதைப் பற்றி பேசுகின்றனர், விமர்சிக்கின்றனர், எல்லாமே மோசமானது எனக் கூறுகின்றனர். ஆனால் கிறிஸ்தவர் இவ்வாறு செய்ய அழைக்கப்படவில்லை, மாறாக அதைச் சமாளிக்க, அவரது கைகளை கறைபடுத்திக் கொள்ளவும் அழைக்கப்படுகின்றார். திருத்தூதர் புனித பவுல் கூறுவது போல செபிக்கவும் உரையாடலில் அல்ல மாறாக செயலில் ஈடுபடவும் கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்படுகின்றோம். நல்லதை மேம்படுத்துவதற்காக, உண்மையில் அமைதியையும் நீதியையும் கட்டியெழுப்ப வேண்டும். இதுவே அப்போஸ்தலிக்கப் பேரார்வம், நற்செய்தி அறிவிப்பு, கிறிஸ்தவர்களின் பேறு. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத் 5.9).
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10 போர்த்துக்கலில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பத்தாரின் அருளீக்கத்தை உரோமிற்கு எடுத்து வந்த பேராயர் ஆதாம் சால் அவர்களையும் போர்த்துக்கல் நாட்டுத் திருப்பயணிகளையும் வாழ்த்தினார். மேலும் லீபியா நாட்டில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள், மொரோக்கோ நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட் மக்கள் ஆகியோரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார். மேலும் இளையோர், முதியோர், நோயாளிகள், புதிதாக திருமணம் ஆனவர்கள், என அனைவரையும் வாழ்த்தினார்.
செப்டம்பர் 14 வியாழன் அன்று திருஅவை சிறப்பிக்கும் திருச்சிலுவையின் மகிமை விழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு மற்றும் மீட்பின் அடையாளமாக விளங்கும் சிலுவையைப் பின்பற்றுவதில் தளர்வடையவேண்டாம் என்றும் சிலுவையின் மேல் நம்பிக்கைக் கொண்டவர்களாய் இருக்கவும் வலியுறுத்தினார். நாட்டின் அமைதிக்காக செபிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனதளவிலும் உடலளவிலும் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்கவும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக திருப்பயணிகள் அனைவரும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தைப் பாடலாகப் பாட அதன் முடிவில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்